அரசியல் குற்றமயமாக்கல் என்பது இந்தியா வில் ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாக இருந்து வருகிறது. அது ஜனநாயகத்தில் நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகவுள்ளது. அப்படியிருக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் சிலவகை குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி பறிப்பை கட்டாயமாக்கியது. அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதையும் அந்த சட்டம் தடுக்கிறது. குற்றவியல் அவமதிப்பு வழக்கில் குஜராத் நீதித்துறை நடுவர் மன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு அரசியல் குற்றமயமாகி விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (அய்லாஜ்) நம்புகிறது. உண்மையிலேயே இந்தச் சம்பவமானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை யாகும். இது ஜனநாயகத்தின் மீதான அதிர்ச்சி தரும் தாக்குதலைக் குறிக்கிறது.

முதலில் குற்றவியல் அவமதிப்புக்காக தண்டனை என்பது சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 499 மற்றும் 500 பிரிவுகள் அவமதிப்பை குற்றவியல் நடவடிக்கையாக வகைப்படுத்தி அவற்றுக்கு தண்டனையையும் குறிப்பிடுகின்றன. இவை நவீன இந்தியாவுக்கு பொருத்தப்பாடற்ற காலனிய மரபு சார்ந்தவை. குறிப்பாக இவை பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறுகின்ற செயலாகும். ராகுல் காந்தி வழக்கில் பார்த்ததைப் போல அவை தன்னிச்சையான அமலாக்கத்திலோ, குளறுபடியான குற்றவியல் விசாரணையாகவோ போய் முடிந்து விடுகிறது.

மிகவும் துரதிஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் சுப்பிர மணியசாமி எதிர் இந்திய ஒன்றியம் (2016-7 எஸ்சிசி221) வழக்கின் தவறான தீர்ப்பில் இந்த சட்டத்தின் செல்லுபடித் தன்மையை நிலைநாட்டி உள்ளது.

இரண்டாவதாக அவமதிப்பு வழக்கின் குற்றத்தன்மையைப் பொறுத்தவரை புகார்தாரர், தான் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதாக நிலை நிறுத்த வேண்டும் என்று இருக்கிறது. ஒரு தனிப்பட்ட வகைப்பட்ட நபர்கள் குறித்து சொல்லப்பட்ட பொத்தாம் பொதுவான கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒருவர், தான் அதனால் பாதிக்கப்பட்டதாக சொல்ல முடியாது. இந்த வழக்கில் நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற அடைமொழி பொதுவானதாக இருக்கிறது? என்று ராகுல் காந்தி சொல்லி இருந்தார் என்பதுதான். எப்படி இருந்த போதும் இந்தப் பேச்சில் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நபர்களுக்கு பதிலாக புருனேஷ் மோடி என்ற சட்டமன்ற உறுப்பினர் மனுதாரராக நீதிமன்றத்தை நாடினார். அவர் மோடி என்ற அடைமொழி உள்ள அனைவரும் ராகுல் காந்தி பேச்சினால் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என வாதிட்டார். அந்த வாதம் சட்டப்படி தாக்குப்பிடித்து நிற்கக் கூடியது அல்ல.

மூன்றாவதாக இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது ஆட்சியாளர் களின் கை தீர்ப்பில் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. குற்றவியல் அவமதிப்பு வழக்குக்கு அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் விதிக்கப்படுவதை இதற்கு முன் கேள்விப் பட்டதில்லை.

மேலும் தண்டனை வழங்கப்பட்ட ஒரே நாளில் பதவி பறிப்பு என்று காட்டப்பட்ட வேகமும் இதுவரை கேள்விப்பட்டிராதது. கர்நாடக பாஜக எம்எல்ஏ நேரு ஒலேகர் (ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை) கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.பி குமாரசாமி (காசோலை மோசடி வழக்கில் நான்கு வருட சிறை தண்டனை) இருவரும் பிப்ரவரி 2023 தண்டனை பெற்றவர்கள். அவர்கள் மீது பதவி பறிப்பு நடவடிக்கை என்று எதுவும் இல்லை. இந்திய சட்ட ஆணையத்தின் 244 வது அறிக்கை லில்லி தாமஸ் தீர்ப்புக்குப் பிறகு இதுவரை தண்டனை பெற்றவர்களில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி மட்டுமே பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

பதவி பறிப்புக்கான கூறுகள் சேர்க்கப்பட்டதன் நோக்கத்தை இந்திய சட்ட ஆணையத்தின் "தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி பறிப்பு" (பிப்ரவரி 2014) என்று தலைப்பிட்ட அறிக்கை தொகுத்து அளிக்கிறது.

அந்த அறிக்கையில் "சமூகத்தின் குற்ற. பின்புலம் கொண்டவர்கள், அதாவது தங்களுக்கு முந்தையவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற அவைகளில் சட்டம் இயற்றி அதற்கு சட்ட அந்தஸ்து வழங்கியுள்ள போது, அடுத்து வரும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அதை அமலாக்கும் பொறுப்பு கொண்டுள்ள போது, அவர்களே அந்த சட்டங்களை மீறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது அது சட்டம் இயற்றியவர்களின் தொலைநோக்குப் பார்வை, இந்திய ஜனநாயகத்தின் இயல்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமானதாகி விடுகிறது." கீழ்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு தொகுப்பாக படிக்கும்போது அரசியல் குற்றமயமாக்கப்படுவது பற்றிய பிரச்சினையை அது எப்படி சட்ட வியாக்கியானம் செய்கிறது என்பதை ஒருவர் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம்( (2013) 7 எஸ்சிசி 653) ல் உச்ச நீதிமன்றம் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மேல் முறையீட்டு மனுக்களில் தீர்வு காணப்படும் வரை தாங்கள் பதவியில் தொடரலாம் என்ற சட்டத்தின் பிரிவு 8 (4)ஐ ரத்து செய்தது.

பொதுநல மையம் மற்றும் சிலர் எதிர் இந்திய ஒன்றியம் மற்றும் சிலர் (ஏஐஆர் 2018 எஸ் சி 4550). நாட்டில் அதீத அளவில் அரசியல் குற்றமயமாகி வரும் பின்னணியை, அது போன்ற குற்றமயமாக்கல் பற்றி குடிமக்களுக்கு எந்த தகவலும் இல்லாததை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ராம் பாபு சிங் தாகூர் எதிர் சுனில் அரோரா மற்றவர்கள் (ஏஐஆர் 2020 எஸ்சி 952)

அரசியலில் குற்றவியல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதையும், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர்களை முதல் கட்டத்திலேயே ஏன் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன? என்பதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில் உச்சநீதிமன்றம், கட்சி வேட்பாளராக நிறுத்தும் நபர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய முழு விவரங்களையும் (குற்றத்தின் தன்மை அதோடு தொடர்புடைய மற்ற விவரங்களான குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டதா இல்லையா என்ற விவரம், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், வழக்கு எண் இன்ன பிற) கட்சிகளின் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியது கட்டாயமானது என உத்தரவிட்டது. அதோடு கூடவே, சம்பந்தப்பட்ட நபர் ஏன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அது போல குற்ற வழக்கு இல்லாத பிற நபர்கள் ஏன் கட்சியால் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூட தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அஸ்வினி குமார் எதிர் இந்திய ஒன்றியம் மற்றும் சிலர் ரிட் பெட்டிஷன் நம்பர் 699/2016 ல் 10.8.2021 தேதியிட்ட உத்தரவில் நாட்டின் பல பகுதிகளில் நடப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை மாநில அரசாங்கங்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 321 வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி திரும்ப பெற்று வருவதை சட்டரீதியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட (judicial notice) உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர் மீது அல்லது ஏற்கனவே இருந்தவர் மீது உள்ள அரசு தரப்பு வழக்குகளை உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் ரத்து செய்யக்கூடாது என கூறியது.

மேலே கூறியுள்ளபடி, ராகுல் காந்தியின் வழக்கு என்பது அரசியலை குற்றமயமாக்கும் வழக்கு அல்ல. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. பொதுநல பவுண்டேஷன் மற்றும் சிலர் எதிர் இந்திய ஒன்றியம் (ஏஐஆர் 2018 எஸ் சி 4550) வழக்கில் கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு குற்றச்சாட்டு குறிப்பானை தயார் செய்யப்பட்டுள்ள நபர்களை பதவி நீக்கம் செய்யவும், அது போன்றவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் சொன்ன ஆலோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அதன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை அந்த மாநில அரசாங்கங்கள் திரும்பப் பெறுவது என்ற பல சம்பவங்களிலிருந்து அரசியல் ஆதாயத்திற்காக சட்டம் பயன்படுத்பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. உதாரணத்துக்கு கர்நாடக பாஜக அரசாங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பாஜக தலைவர்களுக்கு எதிரான 62 குற்றவியல் வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை செய்திருக்கிறது. காவல்துறை, சட்டத்துறை, அரசு தரப்பு வழக்குகளுக்கான செயலகம் ஆகிய அனைத்து அமைப்புகளும் தள்ளுபடி செய்யக்கூடாது என ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்த பின்பும் இது செய்யப்பட்டிருக்கிறது. மைசூரில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிரதாப் சிம்கா, தற்போதைய சட்ட அமைச்சர் ஜே சி முனுசாமி, அப்போதைய சுற்றுலா அமைச்சர் சி. டி. ரவி, அப்போதைய விவசாய . அமைச்சர் பி. சி. படீல், சட்டமன்ற உறுப்பினர் திரு ஆனந்த் சிங், திரு ஹல்லப்பா அசார், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சாரியா ஆகியோர் உட்பட பலரும் அரசாங்கத்தின் இந்த முடிவால் பலன் அடைந்திருக்கிறார்கள்

இதற்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது உயர்நீதிமன்றம் தனது ஆகஸ்ட் 11, 2021 உத்தரவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான அரசியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.

ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டது முதல் பதவி பறிப்பு வரையிலான தொடர் சம்பவங்கள் ஒருபுறம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவும் மறுபுறம் நீதித்துறை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் ஆட்சி துறையின் நடவடிக்கைகளாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.