பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்திட வேண்டுமானால், கட்சிக் கிளைகளை, ஊராட்சிக் (உள்ளூர்) கமிட்டிகளை பலப்படுத்திட வேண்டும் என கட்சி மத்திய கமிட்டி அறைகூவல் அறைகூவல் விடுத்து இருக்கிறது. மே 25, நக்சல்பாரி நினைவு நாள் முதல் ஜூலை 28 வரை அதை சடங்குத் தனமாக அல்ல. ஒரு பெரும் இயக்கமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறது. ஜூலை 28, தியாகிகள் நினைவு நாளன்று அனைத்து கிளைகளும், கிளை உறுப்பினர்களும் கூடி, பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திட, கட்சிக் கிளைகளை வலுப்படுத்திட சபதம் ஏற்றிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

ஜூலை 28 வரை என்னென்ன செய்தோம், எத்தனை கிளைகளைக் கூட்டினோம், எத்தனை புதிய கிளைகளை உருவாக்கினோம், கிளைகளை செயலூக்கப்படுத்திட என்னென்ன திட்டங்கள் வகுத்தோம் என்பதை ஒரு அறிக்கையாகவும் வழங்கிட கோரி இருக்கிறது.

அதனால்தான், இதை ஒரு இயக்கமாக மாற்றிடும் விதத்த்தில் நமது விவசாய கிராமப்புற தொழிலாளர் பரப்புரை இயக்க பயணத்தைக் கூட கிராமங்களுக்கு, ஊராட்சிகளுக்கு, வேர்க்கால் மட்டத்திற்கு சென்றிடும் விதத்தில் அதனை மாவட்ட வாரியானதாக மாற்றி அமைத்திருக்கிறோம்.

மாவட்டவாரியாக பயணம் என்பதை முக்கிய மையங்களில் கூட்டங்கள் நடத்துவதாக மட்டுமே திட்டமிடுவோம் என்றால் நமது நோக்கம் தோல்வி அடைந்து விடும். மாறாக, கிளைகள்வாரியாக, ஊராட்சிவாரியாக சென்று, ஊராட்சிக்கு 500 கையெழுத்துக்கள், ஊராட்சிக்கு 500 உறுப்பினர்கள், ஊராட்சிக்கு 10 தீப்பொறி சந்தா, ஊராட்சிக்கு ரூ 1000 மாநில நிதி, ஊராட்சிக்கு 100 பேரை ஒன்றிய போராட்டத்துக்கு அணிதிரட்டுவது என்பதை முழக்கமாக்கி, அதனை அடைந்திட வேண்டும்.

பெரும்பான்மை மக்கள் ஆதரவு பெற்ற சிவப்பு ஊராட்சிகளை உருவாக்குவதும் கூட இந்த கிளைகளை, ஊராட்சிகளை, வேர்களை வலுப்படுத்தும் இயக்கத்தின் நோக்கமாக இருக்கும். 

கிளைகளைப் புத்துயிர் பெற செய்வோம்!

கட்சிக் கிளைகள் என்பது பற்றிக் கவலை இல்லாமலே, மாவட்ட மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள், செயல்வீரர்களே அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவது என்பதற்குப் பழகிப் போயிருக்கிறோம்.

கிளைகளும் ஊராட்சிக் கமிட்டிகளும், நகர்ப்புற பகுதிக் கமிட்டிகளும்தான் கட்சியின் அடிப்படை அமைப்புகள் ஆகும். கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலங்கள் ஆகும். புரட்சிகர அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான கருவிகள் ஆகும்.

இன்னும் சொல்லப் போனால், கட்சிக் கிளைகளும், விவசாயத் தொழிலாளர் கிராமப்புறத் தொழிலாளர்களின் ஊராட்சிக் கமிட்டிகளும், தொழிலாளர்களின் தொழிலாளர் கவுன்சில்களும் ஒரு புரட்சிகர சூழலில், மாற்று அதிகார மையங்களாக எழும் ஆற்றல் படைத்தவை ஆகும். எனவே, அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான் கிளைகளை வலுப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம் ஆகும்.

கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் நடைபெற்ற பின்னணியில், பல பத்தாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருக்கிறோம். பல மாநில மாநாட்டு அறிக்கைகளின் இலக்காக மட்டுமே இருந்த ஒன்றை நிதர்சனமாக்கி இருக்கிறோம். இவர்களெல்லாம் வேறு கட்சிகளில் இருந்து வந்து நம்மோடு இணைந்தவர்கள் என சிலர் கருதுகிறார்கள். அது தவறு. பெரும்பான்மை புதிய உறுப்பினர்கள் நாம் செய்த வேலைகளின் காரணமாக வந்தவர்கள். இதர கட்சிகளில் இருந்து வந்து இணைந்த தோழர்களும், மாவட்டங்களும் கூட நம்மோடு இணைந்த பிறகு அவர்கள் செய்த வேலைகளின் காரணமாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். இப்போது அவர்களை, அந்த புதிய உறுப்பினர் களை கிளைகளில் அமைப்பாக்குவது ஒரு முக்கிய கடமை ஆகும்.

அனைத்துக் கிளைகளும் உடனடியாக கூட்டப்பட வேண்டும். கிளைச் செயலாளர்கள் மற்றும் கிளைத் தலைமைக் குழுக்கள் (கிளைக் கமிட்டிகள்) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தந்த ஊராட்சி மக்களுக்கு, அவர்கள் பிரச்சனைகளுக்கு, போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் அமைப்பாக அவை தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை கூட வேண்டும். நாட்டு நடப்புகளைப் பற்றி விவாதிப்பது, நாடு தழுவிய கட்சிப் போராட்டங் களை தெரிந்து கொள்வது, தீப்பொறி பத்திரிகையை படித்து விவாதிப்பது ஆகியவற் றையாவது குறைந்தபட்சம் செய்திட வேண்டும். 

ஊராட்சி / பகுதி/ உள்ளூர் கமிட்டிகள்

இரண்டுக்கும் மேல் கிளைகள் இருக்கும் பகுதிகளில், ஊராட்சிகளில் ஊராட்சி / பகுதி/ உள்ளூர் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள், 200 வெகுமக்கள் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்

அல்லது சேர்க்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் 10 தீப்பொறியாவது விநியோகிக்க வேண்டும். ஊராட்சிமட்ட மக்கள் பிரச்சனைகளைப் படிப்பது, பிரச்சனைகள் மீது போராட்டங்களைக் கையிலெடுக்க திட்டமிடுவது, மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்குவது, போராட்டங்களின் மூலம் எழுந்து வரும் முன்னணிகளை கம்யூனிஸ்டுகளாக்குவது, கட்சி உறுப்பினராக்குவது என்பன அந்த கமிட்டிகளின் கடமையாகும்.

மக்களிடம் செல்வோம்!

அதே போல, கட்சியின் வெகுமக்கள் அமைப்புகள் அதனை இன்னும் பரந்த தளத்திற்கு, பரந்த வெகுமக்கள் மத்தியில், அவர்களது உடனடி பிரச்சனைகளை சேர்த்துக் கொண்டு செல்வதற்கான அமைப்புகள் ஆகும்.

இவற்றை வலுப்படுத்துவதன் மூலம் தான், சுதந்திரமாக செயல்பட வைப்பதன் மூலம் தான் கட்சி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும்.

அரசியல் பரப்புரை இயக்கத்தின் மூலம் கிளைகள் உள்ளூர் கமிட்டிகளை செயலூக்கப்படுத்துவது 

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மோடி அரசாங்கம் வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மிகக் கடுமையாக குறைத்திருக்கிறது. டிஜிட்டல் வருகைப்பதிவு மூலம் தொழிலாளர்களை சொல்லொனா இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது. நூறு நாள் வேலை என்பது ஆண்டுக்கு ஒரு வார வேலை கூட இல்லை எனும் நிலை உருவாகி இருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பைக் குறைப்பதன் மூலம், கிராமப்புற தொழிலாளர்கள் நகர்ப்புறத்தை நோக்கிச் செல்ல வேண்டும், அதன் மூலம் நகர்ப்புற முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கம். நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை ரூ 500 ஆக உயர்த்துவதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஒன்றிய அரசுக்கு கடிதமும் எழுதியது. ஆனால், இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு நாள் கூலி 600 ஆக கொடுக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.

அனைவருக்கும் வேலை, 200 நாள் வேலை, ரூ 600 கூலி, அனைவருக்கும் வீடு, வீட்டு மனை,சிலிண்டர் விலையை 400 ரூபாய்க்குக் குறைப்பது போன்ற இன்னும் சில கோரிக்கை களை வலியுறுத்தி, ஒரு பரப்புரை இயக்கத்தை விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை திரட்டும் விதத்தில் அயர்லா மற்றும் சிபிஐஎம்எல் திட்டமிட்டி ருக்கிறது. கட்சிக் கிளைகள் அனைத்தும் அயர்லா கிளைகளோடு இணைந்து இந்த பரப்புரை இயக்கப் பயணத்தை வெற்றியடைய செய்திட வேண்டும்.

அதே போல, நாளொன்றுக்கு ரூ 1000 கூலி, மாதத்திற்கு ரூ 26000 சம்பளம், அனைவருக்கும் இ எஸ் ஐ, பிராவிடண்ட் பண்ட், பணிக் கொடை,ரூ 10000 பென்சன், அனைவருக்கும் தரமான வேலை, வீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பரப்புரை இயக்கத்தை நகரப் பகுதிகளில் விரைவில் துவக்கிட வேண்டும். தொழிலாளருக்கு எதிரான, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மோடியின் புதிய சட்டத் தொகுப்புகளை ரத்து செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையும் அதோடு இணைக்கப்பட வேண்டும்.

இந்த பரப்புரை பயணங்களை வெற்றி யடைய செய்வது, கட்சிக் கிளைகளைப் புத்துயிர் பெறச் செய்வதன் மூலமும், உள்ளூர் கமிட்டி களை செயலூக்கப் படுத்துவதன் மூலமும் அடையப்பட வேண்டும். அதை நோக்கி கட்சி அமைப்புகள் பணியாற்றிட வேண்டும்.

ஒன்றிய / பகுதி மட்ட போராட்டங்கள்

கட்சி அமைப்புகளை செயலூக்கப்படுத்து வதன் நிறைவாக ஒன்றிய மற்றும் நகர பகுதி மட்டங்களில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டங்களைக் கட்டமைக்க முயற்சித்திட வேண்டும். இந்தப் போராட்டங்கள் உழைக்கும் மக்களின் நிகழ்ச்சி நிரலை, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை, மாநில, அகில இந்திய அரசியலில் முனைப்பாக கொண்டு வரும் திசையில் செயலாற்றிட வேண்டும். கார்ப்பரேட் மயமாக்கத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் அரசியலை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக மாற்றிடுவது மட்டுமல்ல, மோடியின் காவிப் பாசிச, கார்ப்பரேட் ஆட்சியை, மனுஅநீதி ஆட்சியைத் தூக்கியெறிந்திட சபதம் ஏற்றிட வேண்டும். அத்தகைய ஒரு அரசியல் பார் வையை மையமாக கொண்டுதான் வேர்க்கால் மட்ட கட்சி அமைப்புகளை செயலூக்கப்படுத்தும் கடமையை முன்னெடுத்து இருக்கிறோம்.கட்சியின் அனைத்து கமிட்டிகளும் இதனை தலையாய கடமையாக கொண்டு இந்த இயக்கத்தை மாபெரும் வெற்றியடைய செய்திட வேண்டும்.

மாநில மாநாட்டு அறைகூவல்!

"கட்சியை வெகுமக்கள் அடித்தளம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்த்தெ டுப்பது என்பது, அடிப்படையில், பரந்த வெகுமக்களைக் கவரும் விதத்திலான நமது அரசியல் முழக்கங்கள், செயல்பாடுகள், செயல்திறன் மிக்க, தாக்கம் ஏற்படுத்தத் தக்க அரசியல் தலையீடுகள், கட்சியின்பால் ஈர்ப்பு கொண்ட பரந்த ஜனநாயக சக்திகளோடு உறவாடல், மக்கள் கோரிக்கைகள், விருப்பங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டங்கள் போன்றவை குறித்ததாகும். அதனை அடைந்திட வேண்டுமானால், பல்லாயிரக் கணக்கான வெகுமக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்கு, பன்முகப்பட்ட வேலை, மாநிலம் முழுவதும், ஒவ்வொரு மாவட்டத் திலும் பல்லாயிரக் கணக்கானோரை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் பலம், மேலிருந்து கீழ் வரை அரசியல் கருத்தியல் ரீதியில் ஒன்றுபட்ட, செயல்துடிப்பான கட்சி அமைப்பு, அரசியல் மற்றும் நடைமுறை வேலைகளில் திறன் பெற்ற ஊழியர் அணிவரிசை ஆகியன முன்நிபந்தனை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை தமிழக நிலைமைகளில் சக்திமிக்கவையாக மாற்றிட வேண்டுமானால், மாவட்ட கமிட்டி களை, மாவட்ட வேலைகளை நமது செயல் பாட்டின் மையமாக வளர்த்தெடுப்பதும், குறிப் பிட்ட சில வர்க்க மற்றும் மக்கள் பிரிவுகளை நமது சமூக அடித்தளமாக வளர்த் தெடுப்பதும், அவர்கள் மத்தியில் நமது அரசியல் செல்வாக்கை வளர்ப்பதும் தேவை ஆகும். அதற்கு நமது சொந்த மறு ஆய்வின் அடிப் படையில், ஒரு முழு விரிவான திட்டத்தின் அடிப்படையில், ஆழமாக வேலை செய்வது அவசியம் ஆகும்.'' என அறைகூவல் விடுத்தது நமது மாநில மாநாடு.

மாவட்ட கட்சி அமைப்புகளை முறைப் படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறோம். அதனை மேலும் முன்னெ டுத்துச் சென்றிட வேண்டுமானால், நமது கட்சிக்கிளைகளை, உள்ளூர் கமிட்டிகளை புத்துயிர் பெறச் செய்வது அவசியம் ஆகும். அந்த திசையில்தான் ஒரு முழுவிரிவான கட்சி ... வேலை மறுசீரமைப்பு இயக்கத்தை, கட்சி முழுவதையும் அணிதிரட்டிக் கொள்ளக் கூடிய ஒரு இயக்கத்தை, கட்சி வேலைகளை மாற்றிய மைக்கத்தக்க ஒரு இயக்கத்தை, கட்சியை வெகு மக்கள் அடித்தளம் கொண்டதாக, வெகுமக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதாக, மாவட்டங் களில் ஆழமான வேலை கொண்டதாக, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்த் தெடுக்கத் தேவையான ஒரு இயக்கத்தை, நாம் முன்னெடுக்க வேண்டிய அவசியம் மிகப்பெரும் சவாலாக முன்வந்திருக்கிறது.

இதுவரை நாம் செய்து கொண்டிருந்தவற்றை முற்றிலும் மாற்றி அமைத்திட நாம் மனரீதியாக தயாராக வேண்டும். புதிய சவால்களை ஏற்றிட முன்வர வேண்டும். நாம் நம்முடைய சிந்தனை முறையை, வேலைநடையை மாற்றிடவில்லை என்றால், மீண்டும் பழைய விதத்திலேயே பயணிப்போமே தவிர மாற்றங்கள் சாத்திய மாகாது. அந்த சவாலை எதிர்கொண்டு, கட்சியை, கட்சி வேலைகளை மறுசீரமைத்திட நாம் முழுமூச்சுடன் இறங்கி செயல்பட சபதம் ஏற்போம்!

11வது காங்கிரஸ் வெற்றிகரமாக நிறைவேறியது, கட்சி முழுவதும் பெருத்த நம்பிக்கை, உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை, கட்சியை வலுப்படுத்துவது, கட்சிக் கமிட்டிகளின் செயல்தரம் கட்சி வேலை நடையின் தரத்தை மேம்படுத்துவது, ஒட்டுமொத்த கட்சியின் கருத்தியல் அரசியல் மட்டத்தை உயர்த்துவதை நோக்கி வழிப்படுத்திட வேண்டும். கட்சி ஏட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, பரிசீலனை விரிவாக படிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் விரைவில் இறுதி செய்யப்படும், அவற்றை முறையான வகையில் படித்திட வேண்டும். கட்சிக் காங்கிரசின் வெற்றிக்கு திறவுகோலானவை பீகாரில் கட்சியின் உள்ளார்ந்த வலுவும் இன்றைய இக்கட்டான கட்டத்தில் நமது (கட்சி) வழியின் முக்கியத்துவமும்தான். நமது கட்சியை வலுப்படுத்தவும் கட்சியின் பாத்திரத்தை உயர்த்திடவும் நமது கட்சி நடைமுறையின் பல்வேறுபட்ட அம்சங்களையும் இயங்கியல் ரீதியில் ஒருங்கிணைத்ததையும் கட்சி முழுவதும் கிரகித்துக் கொண்டாக வேண்டும்:

அதாவது,

(i) கட்சியின் சுதந்திர அறுதியிடலும் வெகுமக்கள் போராட்டங்கள் என்ற வகையிலும் தேர்தல் தலையீடு என்ற வகையிலும் சாத்தியமான பரந்துபட்ட ஒற்றுமை,

(ii) வலுவான வேர்க்கால் மட்ட வேலை, துணிச்சலான அரசியல் முன்முயற்சி, புரட்சிகர அகில இந்திய பார்வை,

(iii) வர்க்கம், வர்க்கப் போராட்ட மய்யத் தன்மையில் உறுதியாக ஊன்றி நிற்கும் அதே வேளை, பல்வேறுபட்ட அடையாளங்கள், தகுதியுள்ள சமூக/ கலாச்சார காரணிகளுக்கும் தீர்வு காண்பது என்பதாகும். 

(iv) விரிவாக ஆழமாகச் செல்லும் வெகுமக்கள் வேலை, கூடவே, சமூக ரீதியாகவும் பூகோள ரீதியான விரிவாக்கம்

(v) கிளர்ச்சி, பிரச்சாரம், கல்வி, அமைப்பாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைந்த வகையிலும் ஒன்றை ஒன்று சார்ந்த திட்டமாக செயல் படுத்துவதும்

(vi) கூட்டாக திட்டமிடல், மேற்பார்வையிடுதல், தனிநபர் பொறுப்புடைமை, (vii) அமைப்பு விரிவாக்கமும் கருத்தியல்அரசியல் உறுதிப்படுத்தலும்.

(மத்திய கமிட்டி சுற்றறிக்கையிலிருந்து...)

[கிளை/ உள்ளூர் கமிட்டி புனரமைப்பு / அமைப்பு புத்துருவாக்க இயக்கம்:

ஏப்ரல் 22 அனுபவத்திலிருந்து முறையான பாடங்களை கற்றுக்கொண்டு அந்த உணர்வை |முன்னெடுத்துச் செல்ல கிளைகள், உள்ளூர் கமிட்டிகள் போன்ற வேர்க்கால் மட்ட அமைப்புகளை |புத்துருவாக்கம் செய்ய விரிந்த பிரச்சார இயக்கத்தை துவங்குவது என அரசியல் தலைமைக் குழு முடிவு செய்தது. மொத்த கட்சி உறுப்பினர்களையும் செயலூக்கமிக்க வகையில் அணி திரட்டிக் கொள்ள நாம் |நமது வேலைப் பகுதிகள் அனைத்திலும் கட்சிக் கிளைகளை புதுப்பிக்க / மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். அதேபோல், ஊராட்சி மட்டத்தில் உள்ளூர் கமிட்டிகளை புதுப்பிக்க / மறு கட்டமைப்பு செய்திடவும் வேண்டும். கட்சியின் ஆழமான வேலைப் பகுதிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளூர் கமிட்டியை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். கட்சி வேலையின் செல்வாக்கு மெலிந்து விரிந்திருக்கும் பகுதிகளில் உள்ளூர் கமிட்டியானது அருகாமையில் உள்ள இரண்டு மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

மே 25 முதல் ஜூலை 28 வரையிலான காலகட்டத்தில் புதுப்பித்தல்/ மறு கட்டமைப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இயக்கத்தின் முடிவில் ஒவ்வொரு பகுதி/ மாவட்ட கமிட்டியும் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி | செய்து சம்பந்தப்பட்ட மாநிலக் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற கிளைகளின் கிளைச் செயலாளரை மறுபடி தேர்ந்தெடுப்பது, தேவைப்படும் இடங்களில் கிளை / தலைமைக் குழுவை மறு கட்டமைப்பு செய்வது, எங்கெல்லாம் முடியுமோ அல்லது தேவையோ அங்கெல்லாம் புதிய கிளைகள் / உள்ளூர் கமிட்டிகளை உருவாக்குதல் என்பதாக இந்த புதுப்பித்தல் / மறு கட்டமைப்பு இயக்கம் இருக்கும். வரும் ஜூலை 28 அன்று எப்போதும் போல் நமது வழக்கமான கிளைக் கூட்டங்களை மீண்டும் நடத்தியாக வேண்டும்.

பாஜகவை தோற்கடிப்போம் இந்தியாவை பாதுகாப்போம்:

அமைப்பை புத்துயிர்ப்புபெறச் செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்த 2024 தேர்தலுக்கு கட்சியையும் | மக்களையும் தயார் செய்யும் குறிக்கோளையும் கொண்டு வெகுமக்கள் அரசியல் கருத்துப்பரப்பல், கல்வி, அணி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்வதும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும்.

பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக நடந்து வரும் முயற்சிகளை நாம் வரவேற்கிறோம். எதிர்க்கட்சி ஒற்றுமையானது மக்களின் நிகழ்ச்சி நிரலை உள்வயப்படுத்தியதாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அது ஒரு அரசியல் மாற்றணிக்கான நாடு தழுவிய இயக்கத்தை துவங்கி மதிப்புமிக்க, வலுவான அடித்தளத்தை எழுப்புவதாக இருப்பதோடு, அந்த திசையில் உந்துதலை தருவதாகவும் இருக்க வேண்டும்.

நம் தரப்பிலிருந்து நம்முடைய கவனம், கீழ்க்கண்ட மக்களின் முக்கிய கரிசனங்கள், உரிமைகள் மீதானதாக இருக்கும். கல்வி, வேலை, அனைத்து விளை பொருள்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்குமான நியாயமான விலையை உறுதி செய்யும் விவசாய வளர்ச்சி, குடியிருப்பு, சுகாதாரம், சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பு, அதுபோல் விலைவாசி உயர்வு, கார்ப்பரேட் கொள்ளை, தனியார்மயம், சாதிய, பாலியல் ஒடுக்குமுறை, மதவெறி வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நாம் |தீவிரப்படுத்திட வேண்டும். பாசிச தாக்குதலை நாம் முறியடிக்க, பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஜனநாயகத்தை விரிவாக்க, கூட்டாட்சி முறையை வலுப்படுத்திட, பேச்சுரிமை மற்றும் மாற்றுக் கருத்துரிமை ஆகியவற்றை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும்.

(அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கூட்ட சுற்றிக்கையிலிருந்து...))