: “ஹஸ்தே காடுகளிலிருந்துஅதானிதிட்டங்கள்அப்புறப்படுத்தப்படவேண்டும்”
கார்ப்பரேட் கொள்ளை, சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும்.
வன உரிமைகள்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படவேண்டும். வனநிலங்கள் மற்றும்வளங்களின் மீது வனங்களில் வாழுகிறவர்களுக்கானஉரிமைகள் எவ்விதத்திலும் நீர்த்துப்போகப்படவிடக்கூடாது. வனங்களில் இருந்தும்அவர்களது நிலங்களில் இருந்தும்பழங்குடியினர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஹஸ்தே வனங்களிலிருந்து அதானியின் திட்டங்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும்.
-இகக(மாலெ) தேர்தல் அறிக்கையிலிருந்து…
பக் 12,
11 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை நீதி
—----------------------------------------------
சத்திஸ்கரில் உள்ள ஹஸ்தே காடுகள், 1600 சதுர கிமீட்டர்களில் விரிந்து பரந்திருக்கிறது. 4,25,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த மாநிலத்தில் 32% பழங்குடி மக்கள் உள்ளனர். கோர்பா, சுர்குஜா, சுராஜ்பூர் பிலாஸ்பூர், ஜாங்கீர்-சம்பா உள்ளிட்ட மாவட்டங்களின் வாழ்வும் பொருளாதாரமும் இந்தக் காடுகளைச் சார்ந்தே உள்ளன. ஹஸ்தே காடுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் ஹஸ்தே ஆறு உருவாகி, ஹஸ்தே பாங் அணைக்கட்டு வழியாக 600 கிமீ பயணம் செய்து ஒடிஷாவின் மகாநதியில் கலக்கிறது. 11 லட்சத்து 25ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. பழங்குடி மக்களது 60-70% ஆண்டு வாழ்வாதாரத்தை இந்தக்காடுகளே வழங்குகின்றன. இவர்களுக்கு வசிப்பிடம், வாழ்வாதாரம், மருத்துவம், வழிபாடு, பண்பாடு அனைத்தும் இந்த காடுகள்தான்.
வளமிக்க பன்மை உயிர்ச்சூழல் கொண்ட இந்தப் பகுதியில் பல பத்து லட்சம், சால், ஓக் போன்ற அரிய மரங்கள் உள்ளன. யானைகள் வழித்தடங்களும், வசிப்பிடங்களும் உள்ளன. இந்தியாவிலுள்ள யானைகளின் 10%, (2700 யானைகள்) இந்த காட்டுப்பகுதியில் வசிக்கின்றன. புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், அரியவகை கரடிகள் வசிப்பிடங்களும் உள்ளன. 406 வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள்என வளமான பல்லின உயிர்ப்பெருக்கம் கொண்ட பகுதி.ஆனால், ஹஸ்தே காடுகளுக்கு கீழே 5 பில்லியன் (50 கோடி) டன் நிலக்கரி புதைந்து கிடப்பதுதான் இயற்கையின் விபரீத முரண்பாடு.
மொத்தம் 23 திட்டுகளில் நிலக்கரி உள்ளதை அடையாளம் கண்ட சத்திஸ்கர் அரசு, புதைந்து கிடக்கும் நிலக்கரியை எடுக்க 2010ல் முடிவு செய்தது. ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனத்துக்கு நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமையை வழங்கியது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சிகள் இருந்ததால் ஒப்பந்தம் எளிதாக முடிந்தது. ஆனால் ராஜஸ்தான் அரசு நிறுவனம் நிலக்கரி வெட்டும் பணியை அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்கு வழங்கியது. மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிகள் ஏற்பட்ட பின்னரும் அதானிக்கு எவ்வித தடையும் இல்லை. மாநில, ஒன்றிய ஆட்சிகளின் சுயாட்சி அமைப்புகள் காடழித்து நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு தடை விதித்தபோதும் 2012ல் ஹஸ்தே காடுகளில் அதானி நிறுவனம் கால்பதித்தது.காடுகளில் ராட்சத இயந்திரங்களை இறக்கிய உடனேயே ஏற்பட்ட பழங்குடியினரது எதிர்ப்பை எதிர்கொள்ள அங்குள்ள ஆண்களுக்கு பணம், மதுவைக் கொடுத்து நிலத்தை அபகரித்தது. கல்வி, மருத்துவ நடவடிக்கைகள் என்ற பெயரில் நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தது. மூன்றாவதாக, மாநில, ஒன்றிய அரசிலுள்ள அனைத்து அடுக்குகளிலும் உள்ளே நுழைந்து,அனைத்து தடைகளையும் ஊதித்தள்ளியது.
முதல்கட்ட நிலக்கரி வெட்டும் நடவடிக்கை, பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியது. இயற்கையான, மண் வீடுகளில் வாழ்ந்த பழங்குடியினர் கிராமங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். பெண்கள் அருகிலுள்ள சிறு நகரங்களுக்கு வீட்டுவேலைகளுக்குச் செல்லும் அவலம் உருவானது. குடும்பத்தின் பொருளாதாரச் சுமை முழுவதும் பெண்கள் மீது விழுந்தது. காற்றும், ஆறும் மாசுபட்டதால் சுத்தமான குடிநீரை இழந்தனர். நல்ல தண்ணீர் தேடி நீண்டதூரம் சென்றனர். இதன் காரணமாக “ஹஸ்தே காடுகளைப் பாதுகாப்போம்” இயக்கத்தில், பெண்களே முன்னணியில் இருந்தனர். சிப்கோ இயக்கத்தை நினைவு படுத்தும் வகையில் மரங்களைக் கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர். தங்களது நிலம், மூலவளங்கள், வீட்டிற்கான போராட்டத்தை நடத்தி வந்தனர்.
அதானியின் நிலக்கரிக் கொள்ளைக்கு ஒரு பருக்கை உதாரணம். ராஜஸ்தான் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு ஒரு டன் நிலக்கரி, ரூ. 2175 வீதம் விற்ற அதானி நிறுவனம், சத்திஸ்கரில் நடத்திவரும் தனது மின் உற்பத்தி நிலையங்களுக்காக அதே ராஜஸ்தான் நிறுவனத்திடமிருந்து டன் ஒன்றுக்கு ரூ. 450 விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு 2.6 மில்லியன் டன் நிலக்கரியை வாங்கி ரூ.450 கோடி லாபமடைந்திருக்கிறது! பருக்கையே இப்படி என்றால் பானைச் சோறு எப்படியிருக்கும்?
‘நிலக்கரி ஊழல்’ நாடுமுழுவதும் எழுப்பிய அதிர்வலைகளைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நிலக்கரித் திட்டுகள் ஒதுக்கீட்டை ரத்துசெய்தது. இதில், ஹஸ்தே காடுகளுக்கு உட்பட்ட தாரா திட்டும் அடங்கும். 2014ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மோடி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை ரத்துசெய்து, நிலக்கரி ஒதுக்கீட்டை தனியாருக்குக் கொடுக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். அதுமுதல் அதானி காட்டில் அடைமழை! ஹஸ்தே காடுகளை கபளிகரம் செய்ய அனைத்து கதவுகளையும் திறந்து விட்டார். இவ்வாறுதான், திவாலாகும் நிலையிலிருந்த அதானியை, உலகப் பணக்காரர்களுள் ஒருவராக அசுர வளர்ச்சி காண வைத்துவிட்டார் மோடி. அவருக்கு அதானியின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி!
பழங்குடி மக்களது போராட்டம் உச்சமடைய, 2022 ஜூலையில் காங்கிரஸ் ஆட்சியின், சட்டப்பேரவை நிலக்கரி ஏலத்தை தடைசெய்து ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தது. பழங்குடி வாக்குகளை குறிவைத்து, 2023ல் தேர்தலில், பழங்குடி மக்களது நிலம், நீர், காடுகள் பாதுகாக்கப்படும் என்று மோடி “உத்தரவாதம்” அளித்தார். தேர்தலில் பாஜக வென்றவுடன், “உத்திரவாதம்” காற்றில் பறந்து விட்டது. மாநிலத்தில் முதல்முதலாக முதல்வராக்கப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரைக்கொண்டே சட்டப்பேரவை தீர்மானத்துக்கு எதிராக, காடுகளை அழிக்கும் செயலை பாஜக அரசாங்கம் மீண்டும் தொடங்கியது. பழங்குடி மக்களுக்கு துரோகம் செய்தது.
மோடி அரசாங்கம் தனது கார்ப்பரேட் நண்பர் அதானிக்காக அரசமைப்புச் சட்டத்தின்படி இயற்றப்பட்ட சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளது. அரசமைப்புச் சட்டம், அட்டவணை 5ன்படி ஹஸ்தே பகுதிக்கென்று சிறப்புச்சட்ட, நிர்வாக ஏற்பாடுகள் உள்ளன. இது பழங்குடி மக்களது நலன்களை, உரிமைகளை பாதுகாக்கும் அரசமைப்புச்சட்ட ஏற்பாடாகும். காடுகள் உரிமைச்சட்டம் 2006, பெசா சட்டம் 1996, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு, மறுகுடியமர்த்தும் சட்டம் 2013, ஆகிய சட்டங்களை “இரட்டை என்ஜின் அரசுகள்” காலில்போட்டு நசுக்கின.நிலம் கையகப்படுத்தலுக்கு முன் கிராமசபைகள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற இந்த சட்டங்கள் பலவந்தமாக புறக்கணிக்கப்பட்டன. 2015ல் 20 கிராமசபைகள் காடுகளில் நிலக்கரி திட்டம் வேண்டாமென்று ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. மாறாக, அதானி நிறுவன ஏற்பாட்டில் பொய்யான கிராமசபை தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். அதானியின் அதிகாரம், ஆகாயம்வரை என்பது உண்மையாகிவிட்டது.அதானியின் திட்டம் தொடர்ந்தால், ஹஸ்தே காடுகள் அழிந்து சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும். வறட்சி, பெருவெள்ளம் உண்டாகும். ஹஸ்தே ஆறு வறண்டுபோகும். இதனால், கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் மகாநதியே கடுமையாக பாதிக்கப்படும். இதனால்தான் பழங்குடி மக்களும் இடது, முற்போக்கு, சுற்றுச்சூழல் இயக்கங்களும் கடந்த 13 ஆண்டுகளாக “ஹஸ்தேவை பாதுகாப்போம்” இயக்கத்தை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தானிலும் சத்திஸ்கரிலும் தேர்தல் பரப்புரையின் போது பழங்குடி மக்களை பார்த்து பேசிய மோடி, இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. மாறாக, காங்கிரஸ் நாட்டின் சொத்துக்களை பறித்து “ஊடுருவல்காரர்களிடமும் அதிகம் பிள்ளைப் பெறுபவர்களிடம் (இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள்), “நமது சகோதரிகளின் தாலிகளையும் பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்கள்” என்று வெறுப்பின் உச்சத்தை உமிழ்ந்திருக்கிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடி, பூர்வகுடி மக்களின் நிலம், நீர், காடுகள், வாழ்வாதாரம். வழிபாடு. பண்பாடு அனைத்தையும் பிடுங்கி அதானியிடம் ஒப்படைத்தவர் மோடி. செல்லாதபண நடவடிக்கை, கொடூர ஜிஎஸ்டி வரிவிதிப்பு, குடியுரிமை திருத்தச்சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், கோவிட் கொடூரம் இவற்றால் கோடானகோடி மக்கள் வாழ்வைப் பறித்துவிட்டார் மோடி. இதை மறைப்பதற்காகத்தான் மோடி, வெறுக்கத்தக்க இஸ்லாமிய ‘வெறுப்பை’ உமிழ்கிறார். இதற்கு பதிலடியாக, “மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்பட்ட 16 லட்சம் கோடியை எடுத்து, ஏழைகளுக்கு கொடுப்போம்’ என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, “ஹஸ்தே காடுகளிலிருந்து அதானி அப்புறப்படுத்தப்பட வேண்டும். பெரும் பணக்காரர்கள் மீது 1% செல்வவரி, வாரிசுரிமை வரி விதிக்கப்படவேண்டும். கார்ப்பரேட் வரிவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், செயல்படாத சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். காட்டுநிலங்கள், கடற்கரைப்பகுதிகள், பாரம்பரிய மீன்பிடிப்பு மண்டலங்களில் தனியார்மயமாக்கமும் வர்த்தகமயமாக்கமும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”. இவை, 2024 தேர்தல் தீர்ப்பாக அமையவேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்கும் சர்வாதிகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
-இளவழகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)