ஒரு நாடு, ஒரு தேர்தல் ஒரு தீய திட்டமாகும்: அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிப்போம்
ஹரியானாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் 2019 இல் அக்டோபர் 21 அன்று ஒரே கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. தற்போது தனித்தனியாக நடைபெறுகின்றன. மகாராஷ்டிராவிற்கு இன்றுவரையிலும் கூட தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் மோடி அமைச்சரவை தனக்கு மிகவும் விருப்பமான 'ஒரு நாடு, ஒரு தேர்தல்' (ஓஎன்ஓஈ) நிகழ்ச்சிநிரல் மீது கவனத்தை திசைதிருப்ப மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறது. ஓஎன்ஓஈ திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் அதனை அமல்படுத்துவதற்கான தன்னுடைய உறுதியையும் அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவசியமான அரசமைப்புச் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். மக்களவையிலோ மாநிலங்களவையிலோ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இதனை அமல்படுத்த எந்த மாதிரியான வழிமுறைகளை மிகச்சரியாக இந்த அரசாங்கம் கைகொள்ளும் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. இது நிர்வாக ஆணை/அவசர சட்டம் மூலமாக செயல்படுத்தப்படலாம். இதற்கு சட்டமியற்றும் துறையும் நீதித்துறையும் எவ்வாறு எதிர்வினையாற்றும் எனக் காத்துக் கொண்டிராமல், இந்திய மக்களாகிய நாம், இந்த ஜனநாயகத்திற்கு எதிரான யோசனையை நம்முடைய அனைத்து வலிமையையும் கொண்டு நிச்சயமாக நிராகரிக்க வேண்டும்.
அவசர தேர்தல் சீர்திருத்தமாக இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது. இது தேர்தல் செலவினங்களைக் குறைக்கும், அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் ஏற்படும் இடையூறுகளை நிறுத்தி, இடையூறற்ற வளர்ச்சியை ஊக்குவிக்கும் என முன்வைக்கப்படுகிறது. 'வளர்ச்சி'யின் விலையுயர்ந்த இடையூறாக தேர்தல்களை முன்வைத்து, இந்தப் பிரச்சனையை கட்டமைக்கும் விதத்தின் இயல்பிலேயே ஜனநாயகத்திற்கு எதிரான தன்மையுள்ளது. உண்மை என்னவென்றால் முக்கிய அரசியல் கட்சிகள் செலவழிக்கிற ஒட்டுமொத்த தேர்தல் நிதியோடு ஒப்பிட்டால் ஒரு சிறிய பகுதி மட்டுமே தேர்தலை நடத்துவதற்கு அரசு செலவழிக்கிற நிதியாகும். அதிலும் குறிப்பாக மோடி காலத்தில் பாஜக தேர்தல்களை ஒரு பொருளாதார பெருங்களியாட்டமாக மாற்றியுள்ளது. தேர்தல் செலவினங்கள் உண்மையிலேயே குறைக்கப்பட வேண்டுமென்றால் அரசியல் கட்சிகள் செலவழிப்பதற்கு அனுமதிக்கப்படும் நிதிக்கு நிச்சயமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு தற்போது எந்த உச்ச வரம்பும் இல்லை. அதோடு ஒவ்வொரு தேர்தலை ஒட்டியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமலுக்கு வரும் நடத்தை விதிமுறைகள் 'வளர்ச்சி'யை தடுப்பதில்லை. அது, சம்பந்தப்பட்ட அரசாங்கம் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் அறிவிப்பதிலிருந்து மட்டுமே அதனை தடுக்கிறது.
ஆக மொத்தத்தில் செலவைக் குறைத்தல், இடையூறற்ற வளர்ச்சி என்ற தர்க்கம் ஒரு பூச்சாண்டி மட்டுமே. உண்மையில் கோவிந்த் கமிட்டி அறிக்கை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதை நிச்சயமாக உறுதி செய்யவில்லை. அது மக்களவை, சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பேசுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூன்று அடுக்குகளுக்கும் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் காலம் பல மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்பதாகும். ஒருவேளை ஒரு அரசாங்கம் தனது பெரும்பான்மையை தனது பதவிக் காலத்திற்கு முன்னதாகவே இழந்துவிட்டால் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் மீதமுள்ள ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சியில் இருக்கும். முழு ஐந்து ஆண்டுகளுக்கு இருக்காது என முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் நாம் அதிக தேர்தல்களை, இரண்டு வேறுபட்ட மதிப்புகளை கொண்ட வாக்குகளுடன் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இடைத்தேர்தலில் அளிக்கப்படும் வாக்கு குறைக்கப்பட்ட மதிப்புடையதாகவும், பொதுத்தேர்தலில் அளிக்கப்படும் வாக்கு முழுமையான ஐந்து ஆண்டுகளின் மதிப்புடையதாகவும் இருக்கும்.
அரசமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. இங்கு மாநிலங்கள் தங்களுக்குரிய உரிமைகளுடன் முழுமையாக ஒன்றியத்தில் இணையும். கூட்டமைப்பு அல்லது கூட்டாட்சி என்னும் கூற்று அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக பயன்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் கட்டமைப்பு தெளிவாகவே கூட்டாட்சி தான்; நிச்சயமாக ஒற்றையாட்சி அல்ல. இந்திய அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு எதிராக ஆர்எஸ்எஸ் எப்போதும் ஒரு ஒற்றையாட்சி இந்தியாவையே ஏற்றுக்கொள்கிறது. 1956 இல் மாநிலங்களின் மறுசீரமைப்பு கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், "நமது நாட்டின் அரசமைப்புச் சட்டக் கூட்டாட்சி கட்டமைப்பு பற்றிய அனைத்து பேச்சுகளையும் நாட்டின் நன்மைக்காக ஆழக்குழி தோண்டி புதைக்க வேண்டும்; ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் 'தன்னாட்சி', அரை-தன்னாட்சி 'மாநிலங்களின்' இருத்தலை துடைத்தெறிய வேண்டும்; அதாவது நமது ஒருங்கிணைந்த ஒத்திசைவுக்கு பேரழிவு விளைவிக்கும் வாய்ப்புகளை வழங்கும் பெருமைகளாக உள்ள கூறுகள், மண்டலங்கள், இனங்கள், மொழிகள், பிற வகைகளின் எவ்வித தடயமும் இன்றி ஒரு நாடு, ஒரு அரசு, ஒரு சட்டமன்றம், ஒரு நிர்வாகம் உடையதாக பாரதம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்" என ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் வெட்கமின்றி ஒற்றையாட்சி மாதிரிக்கு ஆதரவாக வாதிட்டார்.
ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலத்தின் மாநில அந்தஸ்தை பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்கள் என இரண்டாக பிரித்த போது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு மாறாக அதனுடைய ஆட்சி நிர்வாகத்தின் அரசமைப்பு சட்ட உரிமைகள் பறிக்கப்படுகிற போது, மத்திய அரசால் மாநிலங்களின் நிதி உரிமைகள் திட்டமிட்ட வகையில் திருடப்படுகிற போது, விரிவாக்கவாத மத்திய அரசின் புகழப்படும் நகர்மன்றங்கள் அல்லது காலனிகளுக்காக மாநிலங்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதற்கான முயற்சிகளை நாம் தெளிவாகக் காணலாம். மாநிலத் தேர்தல்களை மக்களவைத் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் தற்போதைய தெளிவான முயற்சியே ஒரு நாடு ஒரு தேர்தல் ஆகும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளர்ச்சிக்கு சிறந்த உத்தரவாதம் கிடைக்கும் என்ற தத்துவமான 'இரட்டை என்ஜின் அரசாங்கம்' என்ற நிலையாக ஒலிக்கும் மந்திரம், மையப்படுத்துதல் திட்டத்தை ஒப்புக் கொள்ளுகிற மற்றொரு நிகழ்வாகும். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிகரித்த அளவில் அதிபர் முறையுடையதாக மாற்றியமைக்கும். மோடி வழிபாடு தற்போது மிகவும் வெளிப்படையானதாக ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு தேர்தலாக அவருடைய பெயரைச் சொல்லி அவர் வாக்கு கேட்கிறார். ஆக 'ஒரு கட்சி, ஒரு தலைவர்', என்ற துணைத் தலைப்பை அதனுடன் நாம் சேர்க்கும் போது மட்டுமே இந்த 'ஒரு நாடு, ஒரு தேர்தல், என்ற முழக்கம் முழுமை அடைகிறது.
மோடி ஆட்சியைப் பொறுத்தவரையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான, எந்த வழியிலேனும் அதில் நிலைத்திருப்பதற்கான ஒரு சடங்கு தான் தேர்தல்களாகும். மோசடியாக வாக்குகளை எண்ணுகிற வெட்கக்கேடான சண்டிகர் மாதிரியையும், கட்சிகளை உடைத்து பின் கதவு வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆபரேஷன் தாமரையின் தொடர் நடவடிக்கைகளையும் நாம் பார்த்துள்ளோம். "ஒரு நாடு, ஒரு தேர்தல்" திட்டமென்பது தேர்தல்களின் மூலமாக அவர்களின் குரல்கள் கேட்கப்படுகிற மக்களின் உரிமைக்கு வரம்பு நிர்ணயிக்கிறது. அதன்மூலம் தேர்தல்கள் சிறுமைப்படுத்தப்படுவதை நிறுவனமாக்கும். இதனை நோக்கமாக கொண்டிருப்பது தான் "ஒரு நாடு, ஒரு தேர்தல்" திட்டமாகும். அரசியல் கட்சிகளால் செலவழிக்கப்படும் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, தேர்தல் ஆணையம் நடுநிலையை பராமரிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையர்கள் நியமனம் சம்பந்தமான சட்டத்தை திருத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவதற்கு முன்பு தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது, திரும்பப்பெறும் உரிமையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாக்காளர்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவது ஆகியவைதான் உண்மையிலேயே தற்போது தேவைப்படுகிற அவசர தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகும். 'ஒரு நாடு, ஒரு தேர்தல்' என்பது ஜனநாயகத்திற்கு எதிரான மோசமான யோசனையாகும். அது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
ML Update Vol. 27, No. 40 (24 – 30 September 2024)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)