மதுரை மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனமான வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ("Hindustan Zinc Limited"), ற்கு, கடந்த நவம்பர் 07 ல், பாஜக ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் தாரை வார்த்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான அழகர்மலைக்கும் பெருமாள்மலைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில், தமிழர் நாகரிகத்தின் பெருமை பேசும் அரிட்டாபட்டி, மாங்குளம் பகுதிகளில் இந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்கான 2015 ஹெக்டேர் சுமார் 5000 ஏக்கர் இருக்கிறது. அரிட்டாபட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் இந்த சுரங்கப் பரப்பு வருவதாக சுரங்கத் துறை வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கங்கள் ஏன் வேண்டாம்?
டங்ஸ்டன் கனிம சுரங்க செயல்பாடுகள் அப்பகுதியில், மண் அரிப்பை ஏற்படுத்தும் தண்ணீரை மாசுபடுத்தும். விவசாயப் பயிர்கள் வளர்ச்சி பாதிப்படையும். மண்புழுக்கள், நீர்வாழ் உயிர்களை அழித்துவிடும். மேலும், டங்ஸ்டன் கனிமத்தை பிரித்து எடுக்கப் பயன்படுத்தப்படுகிற சயனைட் கெமிக்கல் சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவிடும். மனிதர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்கும்; கருவுறுதலை பாதிக்கும்.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் சூழல் மண்டலம், பெருமாள் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படும் :-
தமிழ்நாடு அரசு, கடந்த 22.11.2022 ல் அரிட்டாபாடியில் சுமார் 477.4 ஏக்கர் பரப்பை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் சூழல் மரபுதளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது; இந்தப் பகுதியில் உள்ள கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை / ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளில பல்வேறு அரியவகை வன விலங்குகள், பறவைகளின் வாழ்விடமாக உள்ளன.
சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட பெருமாள்மலை – புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் வாழிடமாக விளங்குகிறது.
சுரங்க செயல்பாடுகள் துவக்கப்பட்டால் இவை அனைத்தும் கட்டங்கட்டமாக அழிந்துபோகும்.
தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு விடும்:-
தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்கப்பெற்ற தமிழி கல்வெட்டுகளில் காலத்தால் பழமையான, கிமு 3 ம் நூற்றாண்டு மாங்குளம் கல்வெட்டு (2300 ஆண்டுகள் தொன்மையானது) மீனாட்சிபுரம் ஒவா மலையில் உள்ளது. இங்குள்ள குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட சமணர் படுக்கைகள் எனப்படும் கற்படுக்கைகள் உள்ளன.
அரிட்டாபட்டி காமன்குளம் கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் - பெருங்கற்கால சின்னங்கள் தமிழர் நாகரிகத்தின் தொன்மை அடையாளமாக காணப்படுகிறது. அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் 2000 ஆண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகிறது; குகை தளத்தில் 10க்கும் மேற்பட்ட சமணர் படுக்கைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, கிபி 8 ம் நூற்றாண்டு பழமையான சிவன் கோயில் / குடைவரை கோயில் இங்கு அமைந்துள்ளது. கிபி 10 ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பமும், தமிழி வட்டெழுத்து கல்வெட்டும் கூட உள்ளது. இவை அனைத்தும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு,
Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 சட்டத்தின் கீழ் தொல்லியல் சின்னங்களாக பராமரிக்கபட்டும் வருகிறது.
கூடுதலாக, இப்பகுதியில் தமிழர் பண்பாடு பறைசாற்றும் ஏராளமான அய்யனார் மற்றும் அம்மன் கோவில்கள் இன்றளவும் உள்ளன. சுரங்க செயல்பாடுகள் வந்தால், இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே, எண்ணற்ற கிரானைட் குவாரிகளால், கடுமையாக சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்ட மதுரை மாவட்டம், மீண்டும் வேதாந்தா பன்னாட்டு கம்பெனியால் மிகப்பெரியதொரு அழிவை சந்திக்க உள்ளது.
இத் திட்டம் அமலானால், பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுவார்கள். விவசாயம் இயற்கை - சுற்றுச்சூழல் ஆகியவை எண்ணற்ற வகையில் பாதிப்புள்ளாக்கும்; அரிட்டாப்பட்டி பல்லுயிர் சூழல் மண்டலத்தை அழிக்கும். தமிழர் தொல்லியல் அடையாளச் சின்னங்களை ஒழித்துக் கட்டும்.
தமிழ்நாடு அரசு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்!
ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் கனிமவளங்களை தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் இருந்து ஏலத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனது நிலை பற்றிய விளக்கங்களை மக்கள் மத்தியில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)