இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலிருந்தும் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி வெளியேறி விட்டார்! வழக்கம் போல், முதல் நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  தேசியகீதம் முதலாவதாக இசைக்கப்படவில்லை என்றுகூறி ஆளுநர் வெளியேறிவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன் வைக்கும் அறிக்கையையே   சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிவிட்டார்.  இந்த ஆண்டு மட்டுமல்ல தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி இவ்வாறு தான் நடந்து கொள்கிறார். தமிழ்நாடு அரசின் அறிக்கையை வாசிப்பதற்கு அவருக்கு மனமில்லை. அப்படியே வாசித்தாலும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் உள்ள சமூக நீதி, திராவிடம் போன்ற வார்த்தைகளை வாசிக்கமாட்டார். அரசின் அறிக்கையில் இல்லாதவற்றை கூடுதலாக குறிப்பாக ஆர்எஸ்எஸ் கொள்கைத் திட்டங்களை வலியுறுத்தும் விதத்தில் நடந்து கொள்வார். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மரபு இருக்கிறது. துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடுவதுதான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீண்டகாலமாக இருந்து வரும் மரபு. அதனை மாற்றி அமைப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.  தமிழ்நாடு, ஒன்றிய பாஜக அரசின் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருப்பதால் மோடி - ஷாவின் பிரதிநிதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பலவிதமாக பாஜகவின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்திட  வம்பிழுத்து வருகிறார். தமிழ்நாடு அல்ல, தமிழகம் என்பார். பொங்கல் வாழ்த்துச் சொல்லும் போது பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்பில்லாத, பிற மத மக்களுக்குத் தொடர்பில்லாத ஸ்ரீராமனின் நெஞ்சில் இடம் பெற்றிருக்கும் குடிமக்கள் என்பார். இவ்வாண்டு பொங்கல் வாழ்த்துகூட சொல்லவில்லை. இந்திய வரலாறு  மாற்றி எழுதப்பட வேண்டும் என்பார். தமிழ்நாடு ஆன்மீக பூமி எனக் கூறுவார். வள்ளுவரின் சிலைக்கு காவி வர்ணம் பூசச் செய்வார்.  வள்ளலாரை  வாய் கூசாமல் சனாதனியாக்குவார். நீட், ஆன்லைன் ரம்மி, 7.5% இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் இழுத்தடிப்பார். இப்படி  ஒன்றிய பாஜக அரசின் ஆணைக்கேற்ப ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பட்டமாகச் செயல்பட்டு வருகிறார்.

ஆளுநர் என்ற பதவி  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நிர்வாகக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டே மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை வைத்திருந்தனர். இன்று ஆங்கிலேயர் காலத்து குற்றவியல் சட்டங்கள் என்று சொல்லி அவற்றை மாற்றும் பாஜக, ஆங்கிலேயர் காலத்து ஆளுநர் பதவியை மட்டும் இன்னும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளது. ஏனென்றால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலைச்  செயல்படுத்துவற்காக. ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் அவசியமில்லாதது என்றார் அண்ணாதுரை. பெரியாரும் ஆளுநர் பதவியை ஒழிக்கச் சொன்னார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தது. அதற்குப் பின்னும் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.  அவரை குடியரசுத் தலைவர் மாற்றவும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களை, தமிழ்மொழியை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வெளிநடப்புச் செயலை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.  பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக அன்புமணியும் கூட கண்டனம் தெரிவித்துள்ளார்.  அதிமுகவோ ஆளுநரை வெளியேறுமாறுச் செய்துவிட்டார்கள் என்று திமுக அரசை குற்றம் சாட்டுகிறது.   

ஆளுநர் பதவியிலிருப்பவருக்கு  இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்  நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது. அப்படியிருக்கும்போது அரசமைப்புச் சட்டப்படி பதவியேற்ற ஆளுநர், அரசமைப்புச் சட்டப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசின் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார் என்று சொன்னால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தை,  இந்திய இறையாளுமையை, ஜனநாயகக் கோட்பாட்டை மதிக்கத் தயாரில்லை என்றுதானே பொருள். ஆகவே, குடியரசுத் தலைவர் ஆர்.என்.ரவியைத் திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, அவசியமற்ற, ஜனநாயகக் கோட்பாட்டிற்கு விரோதமான ஆளுநர் பதவியையே ஒழித்துக் கட்ட வேண்டும்.