தினெட்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் தயாரிப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. 2019 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி ஈட்டிய ஸ்டாலின், தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றவேண்டிய சவாலை சுமக்கிறார். தோல்வியை தொடர்ந்து சுவைத்து வரும் அதிமுக, வெற்றி பெறாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறி என்ற நெருக்கடியை எடப்பாடி சுமக்கிறார்! சட்டையை கழட்டிக்கொண்டு சாட்டையால் அடித்துக்கொள்ளும் பாஜக தலைவர் அண்ணாமலை, இது வெறும் டீசர்தான், போகப்போக இன்னும் தெரியும் என்று அச்சுறுத்துகிறார்!! மற்ற கட்சிகளும் தங்களுக்கே உரிய வகையில் தேர்தலை நோக்கி செயல்படத் தொடங்கியுள்ளன.

2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியுள்ள திமுக,  “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற வழக்கமான முழக்கத்துடன் 2021 தேர்தலில், தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா? திமுகவின் தேர்தல் அறிக்கையில் 90 விழுக்காடு நிறைவேற்றப்பட்டு விட்டதாக திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆ. ராசா சொல்லியிருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் 100 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாக சொல்லிவிட்டார். 

1952 தேர்தல் முதல் தேர்தல் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக, தேர்தல் அறிக்கை மக்களது விருப்பமாக அதை வெளியிட்டு வருவதாகவும் சொல்லிவருகிறது. 2021 தேர்தலில், 63 தலைப்புகளில், 505 வாக்குறுதிகளை அளித்துள்ள தேர்தல் அறிக்கை, அதற்கென்று அமைக்கப்பட்ட தேர்தல் குழுவால் விரிவான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது. குழுவின் ’கூர்த்த அறிவுக்கும்,.. குறைவிலா உழைப்புக்கும்” மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்திருப்பதற்கேற்ப குழு விரிவாக வேலை செய்திருக்கிறது.

73 பக்கங்கள், 63 தலைப்புகளில் 505 வாக்குறுதிகளுக்குக் கூடுதலாக, தேர்தலுக்கு முன்பாகவே திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் அளித்த 7 வாக்குறுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கான உறுதிமொழிகள் அவை. அதிமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி, மக்கள் திமுகவை அதிகாரத்தில் அமரவைத்ததற்கு தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று திமுகவினர் சொல்லிக் கொண்டார்கள். உண்மைதான். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போல, “7 ஆண்டு கால பாஜக ஆட்சி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி” ஏற்படுத்திய மக்கள் விரோத ஆட்சிமுறையால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புணர்வை, தேர்தல் அறிக்கையால் அலையாக எழுந்ததில் பயணம் செய்து திமுக ஆட்சியைப் பிடித்தது. இத்தகைய வெற்றிக்கு காரணமான திமுக தேர்தல் அறிக்கை திரு. ஆ. ராசா சொல்வதுபோல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா 4 ஆண்டுகால திமுக ஆட்சி? இதற்குள் செல்வதற்கு தோதாக, ஸ்டாலின் அளித்த 7 உறுதிமொழிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, மருத்துவம், நகர்ப்புர வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய 7 உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த உறுதிமொழி 10 ஆண்டுகளுக்கானது. 5 ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, 50 விழுக்காட்டை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

ஆனால், தொழிலாளர், விவசாயிகள், அரசு ஊழியர்கள், சாமான்ய மக்கள், இன்னும் பல பிரிவினரும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, நிறைவேற்ற வலியுறுத்தி குரலெழுப்பி வருகின்றனர், போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் நீண்டகால, உடனடி பிரச்சனைகள் பற்றி தேர்தல் அறிக்கை பேசுகிறது. ஒவ்வொன்றுக்கும் வாக்குறுதி அளிக்கிறது. ஒவ்வொரு மக்கள் பிரிவினர் பற்றியும் பேசுகிறது. அந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் வாக்குறுதி அளிக்கிறது. அந்த வகையில், அறிக்கை அனைத்து அம்சங்களையும் பிரச்சனைகளையும் தழுவிய ஒரு அரசியல் அறிக்கை என்று கூறலாம். அனைத்து மக்கள் பிரிவினரையும் கவனத்தில் கொள்கிற ஒரு அறிக்கை என்று கூறலாம். 

தேர்தல்களில், போட்டி மிகுந்த மக்கள் மயக்கு திட்டங்களுடன் கட்சிகள் வருவது இப்போது வாடிக்கையாகி விட்டது. அந்த நோக்கம் திமுக தேர்தல் அறிக்கைக்கும் உண்டு. அதேசமயம், 70 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியில் பொருளாதாரம், அரசியல், கலை இலக்கியம், பண்பாடு, மொழி, சமூக நீதி என விரிவான சமூக, அரசியல் அறிக்கையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. 16 மாதங்களில் 70 விழுக்காடு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக 2022 செப்டம்பரில் திமுகவினர் பேசிக்கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலின், 99 விழுக்காடு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதாக செப்டம்பர் 13ல் கூறியிருந்தார். செப்டம்பர் 15 அன்று வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகையோடு 100 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேறிவிடும் என்றும் கூறியிருந்தார்.  ஆனால் வெறும் 10 விழுக்காடு வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏப்ரல் 2024ல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று திமுக கூறிக்கொண்டாலும் அதிமுக ஆட்சி விட்டுச் சென்ற 9 லட்சம் கோடி கடன் சுமை, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாமல் பொருளாதார முட்டுக்கட்டை போட்டு, திமுக அரசுடன் வன்மம் பாராட்டும் ஒன்றிய அரசு என இந்த இரண்டு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் திமுக தலைவர்கள் கூறிவருகின்றனர். 13-01-2025ல் இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்துள்ள திமுக அமைச்சரவையின் இரண்டாவது நிதி அமைச்சர் தங்கம். தென்னரசு பேட்டியிலும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கை, ஊழல் ஒழிப்பு, உற்பத்தி பெருக்கம், நிதி நிர்வாகம், ஆடம்பர செலவினங்கள் ஒழிப்பு, மேம்பட்ட வரி வருவாய் இவற்றின் மூலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதியை திரட்டமுடியுமென்று அழுத்தமாக கூறியதை திரு. தங்கம் தென்னரசு அறியமாட்டாரா? கூடுதலாக, நலத்திட்ட செலவினங்களையும் விவேகமான நிதி மேலாண்மையையும் சமன் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதன் பொருள் எந்த அளவுக்கு செலவு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அரசுக்கு வருவாயும் கொண்டு வரப்படுகிறது என்பதே பொருள். ஜிஎஸ்டி வரி வருவாய், டாஸ்மாக் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அதிகரித்துள்ள பத்திரப்பதிவு வருமானம், பெரும் எண்ணிக்கையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை உருவாக்கி மக்களிடம் அதிக வரி வசூல் விதிப்பு ஆகிய முறைகளில் அரசு வருவாய் ஈட்டி வருகிறது.

ஆனாலும் திமுக அறிவித்த பல முக்கியமான வாக்குறுதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை துரத்திக்கொண்டிருக்கின்றன. அரசுப்பணிகளில் 3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஆண்டுதோறும் புதிதாக 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, போக்குவரத்து தொழிலாளருக்கு அளித்த வாக்குறுதிகள், தூய்மைப்பணியாளர்களுக்கு அளித்த பணி, சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான வாக்குறுதிகள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஆசிரியர்கள்,  சாலைப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்ட வாக்குறுதி, (நிதி அமைச்சர், தென்னரசு மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்!) இதுபோன்ற இன்னும் பல அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். 1996, 2006ல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப்போலவே இந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை அளித்த 2021 திமுக தேர்தல் அறிக்கை, கேள்விகளையும், போராட்டங்களையும் எதிர்கொள்கிறது.

விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்ட உரசல்கள் உருவாக்கிய பரபரப்புகள் அடங்கியுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுகவுக்கு வழிவிட்டுவிட்டது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு புகழ் வெற்றிக் கழகம், அதிமுக, பாஜக இவர்களது கூட்டாளிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திமுக வெற்றி உற்சாகத்தில் இருக்கிறது. ஆனால், 2026 தேர்தலில் 2021ன் வாக்குறுதிகள் பின்துரத்துவது உறுதி.