சென்னையில் 1998 ஆம் ஆண்டு ஆட்டோவில் வந்தவர்களால் சரிகா ஷா பாலியல் சீண்டலுக்குள்ளாகி தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த பின்னணியில் 1998ல் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டம் (Tamil Nadu prevention of women harassment act 1998) உருவானது. அதில் பிரிவு 4 தான் பெரும்பாலும் இன்றைக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. அந்த பிரிவுக்கு 3 ஆண்டுகள் தண்டனைதான் என்ற போதிலும் அது பிணையில் வெளி வரமுடியாத பிரிவாகத்தான் காவல்துறை ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்தது. அது மட்டுமின்றி அவர்கள் விருப்பத்திற்கு எவரையும் சிறையிலடைக்கவும் பிணையில் விடாமல் இருக்கவும் மிகவும் மோசமாக இப்பிரிவை அதிகமாகப் பயன்படுத்தி வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இப்பிரிவு பிணையில் விடக் கூடியது என்று சொன்னதற்குப் பிறகு காவல்துறையின் அதீதச் செயல் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. இப்போது அண்ணா பல்கலைக் கழக மாணவி மீதான கொடுமையைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின்  10.1.2025 அன்று சட்டமன்றத்தில் மேற்படி பிரிவிலான குற்றத்திற்கு தண்டனையை 5 ஆண்டுகள் என்று ஆக்கியும் பிணை கிடையாது என்றும் அபராதத் தொகை ரூ.10,000 என்பதை ஒரு லட்சம் என அதிகரித்தும் திருத்தம் கொண்டு வந்துள்ளார். இந்தப் பிரிவு அனைத்து வகை மின்னணு வடிவங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தற்போது உள்ளடக்கியுள்ளது.  அதேபோல், பாசிச பாஜக கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சங்கிதா (BNS)2023, பாரதிய நகரிக்  சுரக்ஷா சங்கிதா (BNSS)2023 ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழக அரசு. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள்  தண்டனைகளை 14 ஆண்டுகள் என்றும், ஆயுள் காலத் தண்டனை என்றும், மரண தண்டனை என்றும் தண்டனைகளை அதிரிகரித்து மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு. ஏற்கனவே, பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு, பெண்கள் மீதான வன்முறைக்கு பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மரண தண்டனை வரை வரையறுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மக்களுக்கு எதிரான கொடூரச் சட்டங்கள், அவற்றை ஏற்க முடியாது என்று சொல்லி திராவிட முன்னேற்ற கழகமும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அச் சட்டங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்க ஒரு நபர் ஆணையத்தையும் திமுக அரசு அமைத்தது. எந்தச் சட்டங்களை மக்களுக்கு எதிரான சட்டங்கள் என திமுக அரசு எதிர்த்ததோ அதே சட்டங்களில் தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் என்று சொல்லி மரண தண்டனை உட்பட தண்டனைகளை அதிகரித்து பாஜகவின் கொடூரச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது திமுக அரசு. பெண்களைப் பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை என்கிறது தமிழ்நாட்டின் திருத்தச் சட்டம். தண்டனைகளை அதிகரித்ததால் குற்றங்கள் குறைந்து விட்டன என்பதற்கு இதுவரை எந்தவொரு ஆதாரங்களும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், காவல்துறையினரின் அத்துமீறல்களே அதிகமாக இருக்கின்றன. எது பாலியல் குற்றம், எது பெண்களுக்கு எதிரான செயல் என்பதை காவல்துறையினரே அவர்கள்  புரிந்து கொண்ட விதத்தில் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பயன்படுத்தப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் ஆணாதிக்க மனப்பான்மைதான்  பெண்களுக்காக உருவாக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள காவல் அதிகாரிகள், காவலர்களிடம் உள்ளது. அண்ணா பல்கலைக் கழக நிகழ்வுக்குப் பின்னர் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவியர்கள் இரவு 7 மணிக்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்று விதிகளைக் கொண்டு வந்துள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை எதுவும் செய்ய முடியாது, குற்றச் செயல் நடக்காமல் இருக்க நாம் தான் ஒதுங்கிப் போக வேண்டும் என்கிற பிற்போக்கு மனோபாவத்தையே இது காட்டுகிறது. மேலும் எந்தவொரு சட்டத்தையும் காவல்துறையினர் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் சரியான அமலாக்கமும் உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கிற்குப் பின்னர் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் தண்டனை அதிகரிப்புகள் வந்த பின்னரும் நாட்டில் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில், ஏழு தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும் என முதல்வர்  அறிவித்திருக்கிறார். அநேகமாக இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நீதிபதி பதவியில் மகளிர் நீதிமன்றங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் அந்தஸ்த்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரே நீதிபதி இரண்டு மூன்று நீதிமன்றங்களைப் பார்க்கும்  அவல நிலைதான்  உள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதிகள்கூட சமூகச்  சூழல்தான் குற்றங்களுக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளவர்கள்தான், வழக்கறிஞர்கள் பணியில் குறைந்தபட்ச அனுபவம் இல்லாதவர்கள்தான்  நியமிக்கப்படுகிறார்கள். அது மட்டுமின்றி, வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிமன்றங்கள், பணியாளர்கள் இல்லை. நேரடி நீதிமன்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்து ‘விர்ட்சுவல் கோர்ட்’என்ற பெயரில் காணொலி நீதிமன்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனி நீதிமன்றங்களில் 18 வயது நிரம்பாத சிறார்களிடையேயான காதல் காரணமாகவே பல வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதைக் காணமுடிகிறது. பண பலம், அரசியல் செல்வாக்கு, சாதியக் கண்ணோட்டம் போன்றவற்றால் வழக்குகள் பதியப்படுவதில்லை என்பது ஒருபுறம் என்றால், பதியப்பட்ட வழக்குகள் விசாணைக்கு வருவதும் விரைந்து விசாரணை முடித்து உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் கேள்விக்குறியாகவே உள்ளன. தெரிந்தே குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையின் மீதான அச்சம் இருப்பதேயில்லை.

மரண தண்டனைக்கு எதிராக அதிகமான போராட்டங்களை நடத்திய மாநிலம் தமிழ்நாடுதான். அதன் விளைவாகவே எழுவர் விடுதலை சாத்தியமானது. அப்படிப்பட்ட ஒரு முற்போக்கான மாநிலத்தில், உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுத்துக் கொண்டுவரும் சூழலில், மரண தண்டனைக்கான சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளதானது பிற்போக்கு, பாசிச பாஜகவின் திட்டங்களை முற்போக்கு, சமூக நீதி அரசும் பின்பற்றுமானால் திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு என்ன பொருள் இருக்கும். ஆயுள்தண்டனை, மரண தண்டனை என தண்டனையை அதிகரிப்பதற்குப் பதிலாக பெண்களுக்கு சுயமரியாதை வழங்கிடக் கூடிய, ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றிடும் அறிவியல் பூர்வமான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதுதான் பெரியார் மண் என்பதற்குப் பொருள் தரும்.