வெற்றிகரமான பொது வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை இகக(மாலெ) வாழ்த்துகிறது... ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது...
மய்ய தொழிற்சங்க அமைப்புகள், விடுத்த பொதுவேலைநிறுத்த அழைப்பை ஏற்று மாபெரும் வெற்றிபெறச் செய்ததற்காக இந்தியா முழுவதுமுள்ள தொழிலாளர் வர்க்கத்தையும் தொழிற்சங்க அமைப்புகளையும் இகக(மாலெ) வாழ்த்துகிறது. பல பத்து லட்சங்களிலான தொழிலாளரை, தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு வெளியே நிறுத்தும் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பிற்கு எதிராகவும் பொதுத்துறை நிறுவனங்களை தறிகெட்டத்தனமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் இந்த பொதுவேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
வேலைநிறுத்தத்தை நடத்திய தொழிலாளர், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பையும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை சட்டத்தையும் ரத்துசெய்ய வேண்டுமென்றும் அனைத்து தனியார்மயமாக்க நடவடிக்கையை கைவிடக் கோரியும் தேசிய பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும் வருமான வரி கட்டு அளவிற்கு மாத வருமானம் இல்லாத குடும்பங்கள் அனைத்துக்கும் மாதம் ரூ7500 வருமான உத்தரவாதம் கேட்டும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புர வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க கோரியும் நகர்ப்புர பகுதிகளுக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தக் கோரியும் அனைத்துவகை முறைசாரா தொழிலாளருக்கும் அனைத்தும் தழுவிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரியும் அங்கன்வாடி, மதிய உணவுத் திட்ட, இன்னும் பிற திட்டத் தொழிலாளருக்கு சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்பு கோரியும் பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளருக்கு முழுப்பாதுகாப்பும் காப்பீடும் வழங்கக் கோரியும் அனைத்துவகை ஒப்பந்த, திட்ட தொழிலாளரையும் வரன்முறைப் படுத்தக் கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரியும் விவசாயம், கல்வி, மருத்துவம் பிற முக்கியமான பொது சேவைகளில் பொதுமுதலீட்டை அதிகரிக்க பணக்காரர்களிடம் வரி வசூலிக்க வலியுறுத்தியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மத்திய சுங்க வரியை குறைக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
மோடி ஆட்சியின் ஏழைகள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் அனைத்துப்பிரிவினரின் கோரிக்கைகளையும் பிரதிபலித்ததால் வேலைநிறுத்தத்திற்கு பரந்துபட்ட ஆதரவும் பங்கெடுப்பும் இருந்தது.
மோடி ஆட்சியின் இஸ்லாமிய பூச்சாண்டி நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தி தோற்கடிக்கச் செய்யும் வைராக்கியத்தையும் வேலைநிறுத்தம் எதிரொலித்தது.
எதிர் வரும் போராட்டங்களில் இன்னும் கூடுதலான மாபெரும் ஒற்றுமையுடனும் எதிர்ப்புடனும் முன்னேறிச் சென்று வெற்றிபெறட்டும்!