ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர்கள் சட்டங்களை, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றி, தன் கார்ப்பரேட் எசமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்பை திருப்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய மோடி அரசின் இந்த சட்டத் தொகுப்புக்கு ஏற்ப சட்ட விதிகளை உருவாக்குவதற்காக முயற்சிகளில் மாநில அரசாங்கங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது. தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்புக்கு விதிகளை உருவாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறி அகில இந்திய தொழிற்சங்கம் (ஏஐசிசிடியு) சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏஐசிசிடியு மாநில நிர்வாகிகள், இகக(மாலெ) தலைவர்கள், புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் பங்கு பெற்றார்கள்