சென்னையிலும் ஒரு ரோஹித் வெமுலா
சென்னை, பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் கலைக்கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ராகவி என்ற தலித் மாணவி கடந்த 24.03.22 அன்று கல்லூரியிலிருந்து திரும்பிய சிறிது நேரத்தில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற சிறிது நேரத்தில் தன் தாயை அலைபேசியில் தொடர்புகொண்ட அவர், பதட்டத்தோடு தன் அப்பாவை அழைத்துக் கொண்டு உடனே வரும்படி கூறியிருக்கிறார். பின்னணியில் மாணவர்களின் சிரிப்பொலி கேட்டிருக்கிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவரது தாயார் புவனேஸ்வரி உடனடியாக தன் கணவரை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார். மாணவியின் தந்தை சின்னா தனது மனைவியுடன் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். பெற்றோரைப் பார்த்ததும் அழுதுகொண்டே வந்த ராகவி தன்னை மற்ற மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்து, தன்மீது பேப்பர் பால் அடித்தும் தன் பையில் உள்ள பொருளை எடுத்து உடைத்து தருவதும் ஆக தன்னை துன்புறுத்துவதாக கூறியிருக்கிறார். ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் தன் உடை, நடத்தைப் பற்றி குறை கூறி மற்ற மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்குள் அங்கே வந்த பேராசிரியர்கள் பிரேமலதா, துர்காதேவி, துறைத் துணைத்தலைவர் சுகுமாரன் ஆகியோர் மாணவியின் பெற்றோரை அழைத்துச் சென்று ஒரு தனியறையில் அமரவைத்து, அவர்களிடம் ராகவியைப் பற்றி பல புகார்கள் கூறியுள்ளனர். உங்கள் மகள் லெக்கின்ஸ், டீ ஷர்ட் போன்ற கல்லூரியில் தடை செய்யப் பட்ட ஆடைகளை உடுத்தியும் தலைமுடியை கலரிங் செய்து கொண்டும் வருகிறார். வகுப்பில் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டு மாணவர் களோடு கைகுலுக்கி பேசுகிறார் என்றும், மதிய உணவு இடைவேளையில் இஞ்ஜினியரிங் படிக்கும் ஒரு மாணவரோடுதான் உணவு அருந்துகிறார் என்றும் எஞ்ஜாய் என்றும் மது குடிப்பது போன்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுகிறார் என்றும் புகார் கூறியுள்ளனர். அதற்கு சின்னா, நீங்கள் ஏன் இதுபற்றியெல்லாம் எங்களை முன்பே அழைத்துப் பேசவில்லை,
இப்போது கூட எங்கள் மகள் அழைத்துத்தானே நாங்கள் வந்திருக்கிறோம் என்று கேட்டிருக்கிறார். இவ்வளவு நிகழ்வையும் சக மாணவர்கள் ஜன்னல்களில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்காத பெற்றோர் தங்கள் மகளைப் பற்றி பேராசிரியர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் கூறியதால் எதிர்த்துப் பேச முடியாத இயலாமையோடு டிசி கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு மகளுடன் வீடு திரும்பி விட்டனர். தன் வகுப்பு மாணவர்கள் முன்னி லையில் தான் அவமானப்பட்டது, தன் பெற்றோர் தனக்காக வாதாட முடியாமல் போன இயலாமை போன்றவை இனி எப்படி மற்றவர் முகத்தில் விழிப்பது என்பது ராகவிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்த வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கில் தொங்கிவிட்டார்.
காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது பல்லாவரம் காவல் நிலையத் திற்கும் தாம்பரம் காவல் நிலையத்திற்குமாக சின்னா அலைகழிக்கப்பட்டார். அதற்கு பிறகு இகக(மாலெ) தாம்பரம் பகுதிச் செயலாளர் தோழர் ஆபிரகாம் உடனடியாக பகுதி மக்களை திரட்டி போராடியதின் விளைவாக தாம்பரம் காவல் நிலையத்தில் கல்லூரியில் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது ஒரு நிறுவனப்படுகொலையாகும். கல்லூரியின் சார்பில் இழப்பீடு தர முயற்சித்தபோது மாணவியின் பெற்றோர் அதற்கு இணங்கவில்லை. ஏப்ரல் 28 அன்று பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில், இகக(மாலெ) தலைமையில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் அ.மார்க்ஸ் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தோழர் திருமாவளவன், பேராசிரியர் சிவக்குமார், வழக்கறிஞர்கள் பிரசாத், ஹேமந்த் குமார், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐடி ஊழியர் சங்கத்தின் பரிமளா, எழுத்தாளர் க்ருஷாங்கினி, சமூக ஆர்வலர் பாரதிகண்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு மே 6 அன்று காலை மாணவியின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோர், சகோதரி, நண்பர் ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர்
கல்லூரிக்குச் சென்று திரு. குணசேகரன் என்ற அதிகாரியை சந்தித்தனர். தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறை இணை ஆணையரையும் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் உண்மை அறியும் குழு, 17.5.22 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
கல்லூரி நிர்வாகம் ராகவி, உதயா என்ற மாணவரை காதலித்ததாகவும் இந்த உண்மை தெரிந்த பெற்றோர் அவரை கண்டித்ததால் தான் ராகவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி தங்கள் தவறை மறைக்கப் பார்க்கின்றனர். உண்மையில் அந்த மாணவர் உதயா, ராகவியின் குடும்பத்தினரோடு நெருங்கிப் பழகுபவராவார். தினமும் ராகவியின் தாய் உதயாவுக்கும் சேர்த்து மதிய உணவு தன் மகளிடம் கொடுத்தனுப் பியிருக்கிறார். ராகவியின் பெற்றோர் கண்டித் ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பொய்யாகும். கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களின் படுபிற்போக்குத்தனமான சிந்தனையும் சாதியாதிக்க மனோபாவமும் கல்லூரி மாணவர்களிடத்தில் காணப்பட்ட தலித் பெண் வெறுப்பு பிற்போக்குச் சிந்தனையும்
அதைச் சரி செய்வதற்குப் பதிலாக ராகவியைக் குறை கூறிய கல்லூரி நிர்வாகமுமே அந்த மாணவின் மரணத்திற்குக் காரணமானவர்கள். ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கும் ராகவியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. இன்றைய இந்துத்துவ மத வெறி பாசிச சக்திகள் பரப்பி வரும் தலித்கள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் மன ரீதியான உடல் ரீதியான தாக்குதல்களின் பின்னணியில்தான் இந்த மரணமும் நடைபெற்றுள்ளது. ஒழுக்கம், நன்நடத்தை என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதிப்பதும் அதேவேளை சீருடை ஆடைக் என்ற பெயரில் மதவெறி முன்னிறுத்தி முக்காடிட்டு (ஹிஜாப்) அணிந்து வரும் பெண்களை அந்த உடையை அணியக்கூடாது என்பதும் இன்று நாட்டில் இந்துத்துவ மதவெறி பாசிஸ்ட்டுகளின் அன்றாடச் செயல்பாடுகளாக மாறிவருகின்றன. இதற்கு கல்வி நிறுவனங்கள் பெரும் துணை போகின்றன என்பதுதான் வேதனைக்குரியதும் உடனடியாகக் களையப்பட வேண்டியதுமாகும். இந்தத் திசையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் பரப்புரை இயக்கத்தை, கிளர்ச்சிகளை முன்னெடுக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)