பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 7 அன்று, மாவட்ட மட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5, 1974 அன்று, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர்களின் கூட்டத்தில், ஒட்டு மொத்த அமைப்பையும் மாற்றியமைப்பதற்காக முழு புரட்சி நடத்தப்பட வேண்டுமென, ஜெயபிரகாஷ் நாராயண் (ஜெபி) அறைகூவல் விடுத்தார். அந்த இயக்கத்தை நசுக்குவதற்காக அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயகமும் இந்திய மக்களுமே இறுதியில் வெற்றி பெற்றனர். 1977ல் அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டு, தேர்தல்கள் நடைபெற்றபோது, மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டதை இந்தியா கண்டது. கற்பூரி தாக்கூரின் தலைமையின் கீழ் அமையப்பெற்ற ஒரு காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை பீகாரும் கண்டது.
அதன்பிறகு கோசி, கங்கை, சோனா ஆகிய ஆறுகளில் எவ்வளவோ தண்ணீர் பாய்ந்து விட்டது. ஜெபி இயக்கத்தில் பங்கெடுத்த பலரும் இன்று 'ஜெபி யிலிருந்து பிஜேபி நோக்கி' என்ற பாதையில் வேகமாக பயணிக்கின்றனர். மேலும் அவர்கள், சங்-பிஜேபி படை மற்றும் மோடி அரசாங்கத்தின் பாசிச தாக்குதலை அங்கீகரித்தும் அதற்கு வழிவகை ஏற்படுத்தியும் வருகின்றனர். பீகாரிலுள்ள போராடும் சக்திகளின் ஆற்றல்மிக்க ஒற்றுமையையும் போராட்டத்தையும் கொண்டு, பாசிசப் படையினை எதிர்கொண்டு தோற்கடிக்கும் வல்லமை, ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்), மற்ற இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கூட்டணியான பீகாரின் (மகாகத்பந்தன்) மகா கூட்டணிக்கு உள்ளது. நக்சல்பாரி எழுச்சியில் வேர்கொண்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் நீரோட்டம், முழு புரட்சி இயக்கத்தினரால் ஆதரவு அளிக்கப் பட்ட சோசலிச நீரோட்டம் ஆகியவற்றின் வரலாற்று மரபும் பாதைகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஜூன் 5 முழு புரட்சி நாளின் நினைவாக, புல்டோசர் ஆட்சி, விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ(எம்எல்) பீகார் மாநில செயலாளர் குணால் தெரிவித்தார். மகா கூட்டணியின் கட்சிகளால் பாட்னாவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிதிஷ் அரசாங்கத்திற்கு எதிராக, ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டது. அனைத்து குறியீடுகளிலும் பின்தங்கியுள்ள பீகார் மாநிலத்தின் மோசமான நிலையினை நிதி ஆயோக் அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். வறுமை அளவீட்டின்படி மாநிலத்தின் மக்கள் தொகையில் 51.9% பேர் ஏழைகளாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலும் கொள்ளையும் அதிகரித்துக் கொண்டே உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் ஊழல் முறைகேடுகளின் வரிசை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பணியிட மாற்றமும் துணைவேந்தர்கள் நியமிப்பதும் ஊழலுக்கான புதிய வாய்ப்புகளாகி உள்ளன. மகாதலித்துகளின், கிராமப்புற ஏழைகளின் குடிசைகளைத் தரைமட்டமாக்க புல்டோசர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. கும்பல் படுகொலைகள், குற்றங்கள், தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள், தலித்துகளையும் ஏழைகளையும் அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவது, விஷ சாராய படுகொலைகள், போதை மருந்துகளின் வழியாக இளைஞர்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வது, வேலையில்லா திண்டாட்டம், விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு, புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்ட தொழிலாளர்கள், விவசாய நெருக்கடி, சுற்றுப்புறச் சூழலை அழிப்பது ஆகியவை இந்த கேடுகெட்ட ஆட்சியின் அறிகுறிகளாக உள்ளன. இந்த பிஜேபி-ஆர்ஜேடியின் மக்கள் விரோத, அடக்கு முறை, புல்டோசர் ஆட்சிக்கு எதிராக, 74ஆம் ஆண்டு போராட்ட மரபின் வழியில், மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முழு புரட்சி நாளில் மகா கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த சபதத்தை மறு உறுதி செய்துள்ளன.