புதுச்சேரி- பாரதிய ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும் மின்துறை ஊழியர் தனியார் மய எதிர்ப்புப் போராட்டம்.
புதுச்சேரி பகுதிகளை விட்டு பிரெஞ்சு ஆட்சியாளர்கள் வெளியேறிய பின்பு புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பின் ஒரு துறையாக மின் துறை 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் 1000 தற்காலிக ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்தியாவிலேயே இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே மின் துறை புதுச்சேரி மின்துறையாகும். கடந்த 65 ஆண்டுகளில் துறை ஊழியர்களால் உருவாக்கப்பட்ட சொத்து 852 ஏக்கர் நிலம், அரசாங்க மதிப்புகளின் படி 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உள் கட்டமைப்புகளாகும். 1972 ஆம் ஆண்டிலேயே புதுச்சேரி மாநிலம் 100% மின் வசதி பெற்ற மாநிலமாக துறை ஊழியர்களால் உருவாக்க பட்டுவிட்டது. இது நாட்டிலேயே முதன் முறையாக நிகழ்த்தி காட்டப்பட்ட சாதனையாகும். மாநிலத்தின் தற்போதைய மின் நுகர்வோர் எண்ணிக்கை 5,11,829 என உள்ளது. இதில் 3.58 லட்சம் வீட்டு இணைப்புகள். வணிக இணைப்புகள் 56050. விவசாய இணைப்புகள் 7029. இதர மத்திய, மாநில, தொழிலக இணைப்புகள். சிறு விவசாயிகளுக்கு மாத மின்கட்டணம் குதிரை திறன் ஒன்றுக்கு ரூ 20/ இதர விவசாயிகளுக்கு ரூ 75 மட்டுமே. 35000 குடிசைகளுக்கு இலவச மின்சார இணைப்பு உள்ளது. வீட்டு இணைப்புகளுக்கு அலகு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ 1.90.300 அலகுகளுக்கு மேல் ரூ 6.45கட்டணம் வசூலிக்கபடுகிறது. தொழிற்சாலைகளுக்கு அலகு கட்டணம் ரூ 5.15 பாண்டிச்சேரி பவர் கார்ப்பரேஷன் என்ற மாநில பொதுத்துறை நிறுவனம் காரைக்காலில் உள்ளது. எரிவாயு, நீராவி மூலம் 33 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் இது இலாபத்தில் இயங்குகிறது. காரைக்கால் மின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. புதுச்சேரி மின் துறை மின்சாரம் செலுத்துதல், (transmission) மின் விநியோகம், சில்லறை மின் விற்பனை செய்யும் அரசு துறையாகும். மின் தேவைகள் மத்திய தொகுப்பு மூலம் முழுமையாக பெறப்படுகிறது. 2022-2023 நிதி ஆண்டில் மின் துறைக்கு சுமார் 136/- கோடி ரூபாய் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 41/- கோடி ரூபாய் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வைத்துள்ள புதுச்சேரி மின்துறைக்கு வர கடன் வேண்டிய பாக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. மின்சாரம் வாங்குவதிலும், விற்பதிலும் புதுச்சேரி மின் துறைக்கு அலகு ஒன்றுக்கு 5 பைசா வேறுபாடே உள்ள நிலையில் துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக நிதி ஆயோக் ஒப்புக்கொண்டுளது.
இப்படி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்படும் புதுச்சேரி மின் துறை உள்ளிட்ட, நாட்டில் உள்ள எட்டு ஒன்றிய ஆட்சி பரப்புகளில் அரசு வழங்கும் மின் சேவையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை மோடி அரசு மின்சார திருத்த வரைவு சட்டம் 2020ல் வெளியிட்டு தனியார் மயமாக்கத்தை வேகபடுத்த ஆரம்பித்தது. கொள்கை முடிவுகள் வெளியான உடனேயே புதுச்சேரி மின் ஊழியர் தங்களது எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். சென்ற காங்கிரஸ் ஆட்சியில் மின் பொறியாளர், தொழிலாளர் தனியார்மய, கார்ப்பரேஷன்மய எதிர்ப்பு போராட்டக் குழு தீவிர தொடர் போராட்டம் அறிவித்து இறங்கியது. ஒன்றிய மோடி அரசின் நிர்பந்தத்தின் காரணமாக அவசர பணிகள் பராமரிப்பு சட்டம் (ESMA) தொழிலாளர் மீது பாயும் என்று என்ஆர். காங்கிரஸ் அரசு அச்சுறுத்தியது
ஆனாலும் தொடர் போராட்டம் காரணமாக மின் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிராகசட்டமன்றதில் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பாரதிய ஜனதா- என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி
அமைந்ததற்கு பின்னால் மின் துறை தனியார் மயம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. தற்போது தீவிர போராட்டதை ஊழியர் துவக்கியுள்ளனர். சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ஐ தொழிலாளர் மீது ஏவியும் ஊழியர்கள் தீரமுடன் போராடி வருகின்றனர்.
இகக(மாலெ), இகக(மா), இகக, காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மாணவர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் ஊழியர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்களில் குதித்துள்ளனர். போராட்டதின் இடையே முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமசிவாயம் ஊழியர்களை கலந்து ஆலோசிக்காமல், அவர்களின் ஒப்புதல் இன்றி தனியார்மயம் இல்லை என்று வாக்களித்தனார். ஆனாலும் மோடி அரசின் கொள்கை முடிவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. புதுச்சேரி மின் துறை தனியார் மயத்தின் முதல் கட்டமாக டிலாய்ட் என்ற இங்கிலாந்து நிறுவனத்திடம் துறை விற்பனை செயல் முறைகள் பற்றி ஆலோசனை கோரப்பட்ட்டுள்ளது.
இது பற்றி அனைத்து மையதொழிற் சங்கத் தலைவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கேட்ட போது "மின்துறை தனியார் மயமானால் சேவைகள் மேம்படும்" என்று பதில் அளித்துள்ளார்.
முதல்வரின் இந்த பதில் ஊழியர் மத்தியில் கடும் கோபத்தை, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் பற்றி எரியத் துவங்கியுள்ளது
ஏஐசிசிடியூ, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி எல்பிஎப், எல்எல்எப், எம்எல்எப், அரசு ஊழியர் சம்மேளனம் ஆகியன கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து கடந்த 2.6.2002 முதல் மின்துறை தனியார்மயதிற்க்கு எதிராக மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்தி வருகின்றன.
அதே போல் எதிர் கட்சிகள் மனித சங்கிலி நடத்தி ஆதரவு அளிக்கின்றன. மின் ஊழியர் விதிப்படி வேலை, அலுவலக வேலை புறக்கணிப்பு, விடுப்பு எடுத்து தொடர் பட்டினி போர் என்று பல வடிவங்களில் போராடி வருகின்றனர். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்று வது போல் தற்போது ஒன்பது தனியார் மின் நிறுவனங்கள் இத்தாலி எனல் குரூப், அதானி குழுமம், டரண்ட் பவர் லிமிட், க்ரீங்கோ, ரிநியூ பவர் வெண்ட்சர், ஸ்டெர்லைட் பவர், என்டிபிசி, சிஇஎஸ்எல், டாடா பவர் புதுச்சேரி மின் துறையை ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது சண்டிகார் அரசு மின் துறையை ஆர்.பி. சஞ்சய் கோயங்கா சிஇஎஸ்எல் லிமிடெட் ஏலத்தில் எடுத்து உள்ளது. பாஜக ஆட்சியின் உண்மை முகம் தெரிய ஆரம்பித் துள்ளதால், பாஜக - என்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு பதில் எதிராக மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் கொப்பளித்து மின் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி வருகிறது
-பாலசுப்பிரமணியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)