தோழர் சுப்பு நினைவு நாள்! செவ்வணக்கம் தோழரே!

அன்றைய இராமனாதபுரம் மாவட்டத்தில் கண்ணங்குடி யூனியன் சிறுவாச்சிக்கு மேற்கேயுள்ள மாடக்கோட்டை என்ற தலித் கிராகத்தில் பண்ணைச் சமூக அமைப்பில் தோழர் சுப்பு பிறந்தார். ஆரம்ப பள்ளியில் கூட இறுதி வரையில் படிக்க முடியாத சமூக குடும்ப அவலம்; பண்ணை அடிமையாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆயினும் சாதி அடக்கு முறைகளையும் தீண்டாமையையும், சமுதாயக் கொடுமைகளையும் நினைத்து நினைத்து உள்ளம் குமறி வந்தார்.

எழுபதுகளின் துவக்கத்தில் துடிப்போடும், ஆற்றலோடும் பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உரிய வயதில் காளியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.தோழர் சுப்புவுக்கு இரண்டு சகோதரர்களும்,ஒரு சகோதரியும் உண்டு. சிங்கமுகம்,பரிமளா,ராதிகா என்ற மூன்று குழந்தைகள்.தனது இளம் பருவத்திலேயே ஜாதி வேறுபாடுகள் பார்க்காது கஷ்டப்படுபவர்களை நேசித்தார். இயன்ற அளவில் எல்லோருக்கும் உதவுவார்.

சமூக கௌரவத்திற்கான போராட்டம்,விவசாயிகளின் வர்க்கப் போராட்டம்,பரந்த மக்கள் நலன்களுக்கான அரசியல் போராட்டம் ஆகியவற்றிலெல்லாம் பங்கெடுத்து வந்தார்.தாம் பிறந்த ஜாதியைவிட "தாழ்ந்த ஜாதிகள்" என்று சமுதாய நடைமுறையில் அறியப்பட்ட அனைத்து பிரிவினரோடும் மதிப்பும் அய்க்கியமும் கொண்டார். தலித் மக்கள் டீக்கடையில் தனிபாத்திரம் ஏந்தி நிற்கும் அவல நிலையைக் கண்டு கொதித்த சுப்பு தம் மக்களுக்கென மாடக்கோட்டையில் டீக்கடையைத் துவங்கினார். புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டு கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1978ல் தனது பணிகளை மாடக்கோட்டை பகுதியில் துவங்கியது. தோழர் சுப்பு கட்சியின் முன்னோடிகளில் முதன்மையானவராக இருந்தார். அவரது டீக்கடை புரட்சிகரக் கட்சியின் பாசறையாக இருந்தது. 78ல் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்கும்படி CPIML கட்சி அறைகூவல் கொடுத்தது.அடிமைத்தொழில் செய்ய மறுப்பதென மாடக்கோட்டை மக்கள் முடிவெடுத்தனர். முத்துநாட்டு ஆதிக்கசக்திகள் நாட்டுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து மாடக்கோட்டையை விலக்கி வைத்தனர். அவ்வாண்டு பால்குடம் எடுக்காவிட்டாலும்,நாட்டுக் கட்டுப்பாட்டை எதிர்த்து நிற்பதில் மாடக்கோட்டை நிமிர்ந்து நின்றது. அப்போராட்டத்தில் மக்கள் பாதுகாப்புக் குழுவின் தளபதியாக சுப்பு இருந்தார். 79ல் உஞ்சனை படுகொலை நடந்தது.CPI கட்சியைச் சேர்ந்த(P.R.சந்திரன்)உஞ்சனை படுகொலையிலும் பங்காற்றிவிட்டு,அந்தப் படுகொலையை எதிர்ப்பதிலும்,(மேடை போட்டு) முதல் நபராய் நிற்கிறார் என்பதை அறிந்த தோழர் சுப்பு கோபம் கொண்டார்.

மக்கள் நம்பிக்கையோடு அவரை 'தலைவர் சுப்பு' என்றே அழைத்தார்கள்.சிறுவாச்சி பஞ்சாயத்தின் தலைவராகவும் அவரால் இயங்க முடிந்தது. அதுபோலவே உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும், பசும்பொன் மாவட்ட CPIML தலைமைக்குழு உறுப்பினராகவும், பேராற்றலும் விடாப்பிடியுள்ள கம்யூனிஸ்ட்டாகவும் தோழர் சுப்புவால் பிரகாசிக்க முடிந்தது.

தோழர் சுப்பு முதன்முதல் சிறுவாச்சிப் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றது சமூக ஆதிக்கக் கும்பலின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. அவரது நேர்மையும், நியாயங்களுக்காக துணியும் போக்கும் அரசியல் எதிரிகளை அச்சம் கொள்ளச் செய்தன, கொன்றொழிக்கத் திட்டமிட்டனர்.

உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் முதல் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 92இல் பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுவாச்சி ஆலய நுழைவுப் போராட்டத்தில் தலைமைதாங்கினார். இதனால் ஆதிக்கச் சமூக அரசியல் எதிரிகள் வெஞ்சினம் கொண்டு எழுந்தனர். தோழர் சுப்புவைத் தீர்த்துக் கட்டச் செயல் முனைப்புக் கொண்டனர். போலீசைப் பயன்படுத்தி பல பொய் வழக்குகள் புனைந்தனர். இறுதியில் 03.05.94 தேவகோட்டையில் நடந்த கொலையில் தோழர் சுப்புவை முதல் எதிரியாக்கி தோழர் நாராயணனை இரண்டாவது எதிரியாக்கினர். இரண்டு மாத சிறை வாசத்துக்குப் பிறகு தோழர்கள் சுப்புவும், நாராயணனும் கண்டிஷன் பெயிலில் திருநெல்வேலியில் தங்கியிருந்து கையெழுத்துப்போட்டு வந்தனர்.வாய்தாவுக்கா தேவகோட்டை கோர்ட்டுக்கு வந்தபோது சமூக,அரசியல் ஆதிக்கக் கும்பல் வெறிக்கொண்டு அலைந்தது. தோழர்களின் சமயோசித அறிவால் எதிரிகளின் கொலை முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

நிலைமை அப்படியே நீடிக்கவில்லை 13.09.94 மாலை 5மணியளவில் திருநெல்வேலி பாலம் காவல் நிலையத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு வந்து, தெரிந்தவர் கடையருகே பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டது.

தலைவர் சுப்புவை இசக்கி என்ற கூலிப்படை கொலைகாரன் வெட்டி சாக்கிறான். அருகில் இருந்த தோழர் நாராயணன் கடுமையாகப் போராடி கொலைக்காரனை மடக்கிப்பிடித்தார். சுற்றி நின்று கொலைகாரனுக்கு அடையாளம் காட்டிய கொலைக்காரக் கோழைகள் உயிருக்கு பயந்து ஓடிமறைந்தனர்.தலைவர் சுப்பு தியாகி சுப்பு ஆனார்.

எல் எல் செய்திக்கடிதம்

CPIML கட்சியின் வாராந்திர வெளியீடு

எண்; 20

நாள்; 18.09.1999