கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4000 தொழி லாளர்கள் பணி புரிகிறார்கள். கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்தும்கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தமுறையிலேயே தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.333 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வும் வழங்கப் படவில்லை. கொரோனா பொது முடக்க காலத்தில் தங்களின் உயிரைப் பொருட்படுத் தாமல் பணி புரிந்த முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை எதுவும் கொடுக்கப் படவேயில்லை.

2017ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் கடந்த 5 ஆண்டுகளாக கொடுக்கப்படவேயில்லை. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்த ஒரு நாள் ஊதியம் ரூ.721 கூட வழங்கப்படாமல் இருந்தது. இதை அமல்படுத்தக் கோரி கோவை மாநகராட்சியில் செயல்படும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தனித்தனியாக போராட்டங்கள் நடத்தின. தனித் தனியாக போராடி பயன் ஏதும் ஏற்படாததால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பில் ஏஅய்சிசிடியுவும் அங்கமாக இருந்தது.

கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சியில் பணி புரியும் அனைவரையும் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கக் கேட்டல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் திட்டமிட்டபடி அக்டோபர் 2ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கியது. வேலை நிறுத்தத்தை உடைப்பதற்காக நிர்வாகமும் ஒப்பந்ததாரர்களும் மற்றும் திமுக கவுன்சிலர்களும் (பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்) தொழிலாளர்களை மிரட்டினார்கள். யாராலும் தொழிலாளர்களை பணிய வைக்க முடியவில்லை. முதல்நாள் அன்றே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். தங்களது கோரிக்கைகளை நிர்வாகமும் அரசும் கண்டு கொள்ளாததால் பேரணியாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மனு கொடுக்கப்பட்டது.

இரண்டாவது நாளான அக்டோபர் 3 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி வழியில் போராடுவதற்கு ஆட்சியர் அலுவலகம் முன்பாக மிகப் பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் திரண்டு இருந்தனர். நிர்வாகத் திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சனைகளில் காவல்துறை தலையீடுகூடாதுஎன்ற நீதிமன்ற உத்தரவை மீறி சட்ட ஒழுங்கை காரணம் காட்டி காவல்துறை தொழிலாளர் களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் கைதுசெய்தது. கைதிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருந்ததால் பாதிப்பேரைக்கூட கைது செய்யமுடியவில்லை. அதனால், மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிற்சங்கத் தரப்பில் கைதுசெய்யப் பட்டவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சு வார்த்தையில் பங்கேற்போம் என சொன்னதால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. எனினும் எழுத்து பூர்வமாக பதில் கொடுக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற போது போராட் டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்க, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் கிளிஃப்டன் மற்றும் 7 தோழர்களும் வந்திருந்தனர். அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் ஏஅய்சிசிடியு தலைமையில் தூய்மைப்பணியாளர்களை ஒருங்கிணைத்து அணிதிரட்டி 5 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் ஆளும் பாஜக அரசு அனைவரையும் நிரந்தரம் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். தொழிலா ளர்களின் கவுரவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி தோழர் கிளிஃப்டன் கோவை தொழிலாளர்கள் மத்தியில் தமிழிலேயே பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

மூன்றாம் நாளான அக்டோபர் 4 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட் டத்தின் சூடு தணியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். அந்தச் சாலையே போக்குவரத்தின்றி முடங்கியது. அன்று காலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஏஅய்சிசிடியு சார்பாக மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் சந்தானம் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படாது என எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக, வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்பே நிர்வாகம் தீபாவளி போனசாக ரூ.3,750 அறிவித்தது. 8.33%க்கும் குறைவாக போனஸ் வழங்குவது சட்ட விரோதம் எனவும் 20% போனசாக வழங்க வேண்டும் எனவும் ஏஅய்சிசிடியு கோரியது. (போனசாக வழங்கும் சிறு தொகையும்கூட ஏஅய்சிசிடியு போராட்டத்தால்தான் கிடைத்தது). தற்போது அறிவித்ததை திரும்பப் பெறுவதாக அறிவித்த நிர்வாகம் போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நடத்தலாம் என சொன்னதை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.


தொழிற்சங்க கூட்டமைப்பில் பல்வேறு கருத்தியல் முரண்பாடுகள் இருந்தபோதும், போராட்ட ஒற்றுமை பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல என கூட்டமைப்பில் உள்ள தொழிற்சங்கங்கள் சொன்னபோதும் ஒப்பந்தமுறை தொடர்வதற்கும் தொழி லாளர்களுக்கு சமூக அந்தஸ்து, கவுரவம் இல்லாததற்கும் ஒப்பந்த முறையில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் தொடர்வதற்கும் அரசே காரணம். எனவே இது அரசைப் பொறுப்பாக்கும் போராட்டம் என ஏஅய்சிசிடியு முன்வைத்தது.


ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் உள்ளாட்சியில் ஊழல், முறைகேடுகள், சாதியாதிக்கம், பெண்ணடிமை என திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. தூய்மைப்பணிகளில் ஒப்பந்தமுறை இனியும் நீடிக்கக்கூடாது. மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து அனைவ ரையும் நிரந்தரம் செய்யக்கோரி போராட்டங் களை முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.