இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக் கமிட்டி, தோழர் என்.கேவின் திடீர் மரணத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.

நீண்ட கால கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் என்.கே, தமிழக கட்சி வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சிப் பொறுப்புகளை முன்மாதிரியான கடப்பாற்றுடனும் விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வந்திருக்கிறார். அவரது 40 ஆண்டுகால நீடித்த கட்சி வாழ்க்கையில் அவர் தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடப்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பாளராக பல துறைகளிலும் பல மாவட்டங்களிலும் செயலாற்றி இருக்கிறார்.

கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது நமது தொழிற்சங்க தலைவரும், செயல் வீரர்களும் அரசு நிர்வாக கூட்டின் கடும் ஒடுக்கு முறைக்கு ஆளாகி இருந்த போது, தோழர்.என்.கே, கட்சியையும் தொழிற்சங்கத்தையும் அளப்பரிய நிதானத்துடனும் தீர்மானகரமாகவும் வழி நடத்தினார். அவர் சாதாரண தொழிலாளர்களிடம் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்பது மட்டுமல்ல அவர் தொழிலாளர்களின் மன உறுதியையும் உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச்சென்றார்.

கட்சியின் மான்ஸா மாநாட்டுக்கு பிறகு, மத்தியக் கமிட்டி,மாநிலக் கமிட்டி மற்றும் மாவட்டக்கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்கள் ஒரு குழுவாக கட்சியை விட்டு சென்ற பின்பு,தோழர்.என்.கே.மத்தியக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். மறு அமைப்பாக்கம் செய்யப்பட்ட மாநில கமிட்டியின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக் கமிட்டியுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, கட்சியின் அமைப்பு மட்டத்தை உயர்த்தியதோடு செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தவும் செய்தார். தஞ்சாவூரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்புக்கருத்தரங்கம், நவம்பர் 25-27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் கட்சி வலுவடைந்திருப்பதையும் கட்சி மீதான நம்பிக்கை அதிகரித்து இருப்பதையும் பறைசாற்றுகிறது.

டிசம்பர் 13 முசாபர்பூரில் நடைபெற்ற கட்சி மத்தியக் கமிட்டி கூட்டத்தில் அவர், தோழர்களிடையே இந்த புதிய நம்பிக்கையை பிரதிபலிப்பவராக இருந்தார். தமிழகத்தின் இந்த வளர்ச்சி குறித்து மொத்த கட்சியும் உற்சாகம் பெற்றிருந்தது.

இந்த இயங்காற்றலை முன்னெடுத்துச் செல்வதும் தமிழ்நாட்டிலும் தேசிய சூழலிலும் கட்சியை அனைத்தும் தழுவிய விரிவாக்கத்துக்கும் உறுதிப்படுத்தலுக்கும் இட்டுச் செல்வதும் தான் நமது அன்பிற்கினிய தோழருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
தோழர்.என்.கே.நடராஜனுக்கு செவ்வணக்கம்!

அவரால் முடிக்கப்படாத கடமைகளை நிறைவேற்றிட நம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்!