டிசம்பர் 5: 75 நாட்கள் மர்ம சினிமாவின் இறுதிக்காட்சி சோகமாக முடிந்து போனது. டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது மரணத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள "அம்மாவின் ஆட்சியே" விசாரணை ஆணையம் அமைத்தது! ஆனால் திமுக ஆட்சியிலும் ரகசியம் வெளிவரவில்லை. எம்ஜிஆர் இறந்தபிறகு இரண்டு துண்டுகளான அதிமுகவை வெற்றிகரமாக ஒன்றுபடுத்தி, இறப்பு வரை தனது சுருக்குப்பையில் வைத்திருந்த 'இரும்புப் பெண் மணியால்' அவரது இறப்புக்குப்பிறகு நான்கு துண்டுகளானதை அவரால் 'வானுலகத்திலிருந்து' வேடிக்கை தான் பார்க்கமுடிந்தது!
நாட்கள் நினைவுபடுத்தும் ஆளுமைகளும் அல்லது ஆளுமைகள் நினைவுப்படுத்தும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டவை அல்ல, தற்செயல் நிகழ்வுகள் தான். ஆயினும் சில நாட்களை சில ஆளுமைகளோடு சேர்த்துப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. டிசம்பர் 24, எம்ஜிஆர் மறைந்த நாள். அந்த ஆண்டு கிறித்துவர்கள் தங்கள் கிறிஸ்மஸ்த் கொண்டாட்டத்தைக் கொண்டாட முடியவில்லை. சென்னை அண்ணாசாலை யிலிருந்த அவரது நண்பர்! கருணாநிதியின் சிலை கடப் பாரைக்கு இரையானது.
விதி விசித்திரமானது. டிசம்பர் 24, "திராவிடத் தலைமகன்' பெரியார் மறைந்த நாளுமாகிவிட்டது. திராவிட இயக்கத்தை ஏறத்தாழ, நூறாண்டு கால நீரூற்றி வேர் விடச் செய்து வளர்த்த முதன்மை ஆளுமை பெரியார். அந்த வேரிலேயே வெந்நீரை ஊற்றிய புரட்சித் தலைவரும் புரட்சித்தலைவியும் இறந்த நாட்களும் டிசம்பர்தான்! திராவிட இயக்கத்தின் பெரும்பாதியை தீவிர வலதுசாரி திசைக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். அதனால் கூட இவர்களுக்கு 'புரட்சி'பட்டம் வாய்த்திருக்கலாம்!
இந்திய ஜனநாயகத்தை இருள் கவ்விவரும் வேளையில், அய்யா பெரியார் விதைத்த சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, மாநில உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று தேவைப்படுகிறது என்பதையும் இந்த நாட்கள் நினைவுறுத்து கின்றன. அதனால்தான் என்னவோ, ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பெயரை உச்சரிக்க நடுங்குகிறார். சனாதனம் தமிழ்நாட்டில் பிறப்பெடுத்து 'பாரதம்' முழுவதும் பரவியதாக புரட்டுபேசுகிறார்.
13 ஆண்டுகளுக்கு திமுகவை, மாநில ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைத்தவர் எம்ஜிஆர். அதே சமயம், 'உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்" என்று கூறி ஒன்றிய அதிகாரத்தில் நீண்டகாலம் பங்குபெறும் காரியசாத்தியமான 'அரசியல் சாணக்கியர்' என்ற பெயரை கருணாநிதி | தட்டிச் செல்வதற்கும் எம்ஜிஆரின் அதிமுக காரணமாக இருந்தது. கருணாநிதி, எம்ஜிஆரை அடிக்கடி எனது 'நண்பர்' என்று கூறிக்கொள்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்! ஏதாவதொரு அதிகாரம், மாநில அல்லது ஒன்றிய அதிகாரம், இல்லாமலிருந்தால் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதை உணர்ந்திருந்தவர் கருணாநிதி. சினிமாவில் 'புரட்சி நடிகராக' இருந்து அரசியலில் 'புரட்சித்தலைவராக' உயர்ந்தவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவரது ஆட்சி, தருமபுரி, வடார்க்காடு மாவட்டங்களின் புரட்சியாளர்களை வேட்டையாடிய 5 'வேட்டைக் காரன்' ஆட்சியாக மாறியது. சாகுபடியாளர் இயக்கத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டியது. 46 பேர் கொல்லப்பட்டனர். சிவில் உரிமை அமைப்புகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் ஆட்சி அந்த சிவில் உரிமை இயக்கங்களையே ஒடுக்கியது.
ஜெயலலிதாவோ திராவிட நிலத்தில், "நவ பார்ப்பனியத்தின் வருகை"யாக அதிமுகவை எழுப்பி நிறுத்தினார். அவரது ஆட்சிமுறை, நவதாராளவாத பொருளாதார கொள்கைகளும் திராவிட அரசியலை விளிம்புக்குத் தள்ளும் கருத்தியல், அரசியல் 5 நடவடிக்கைகளுமாக இருந்தன. அயோத்தியில் கோயில் கட்ட கல் அனுப்பியதிலிருந்து பாஜகவுடன் 5 கூட்டணி வைப்பது வரை அவரது வலதுசாரிப் பயணத்தைத் தெரிந்து கொள்ளலாம். அரசியலில் சாணக்கியர் என்று பெயரெடுத்த கருணாநிதி, திராவிட போட்டி அரசியலில், தனது பாதையை பின்பற்றச் செய்தவர் ஜெயலலிதா! கெட்ட கட்சியில் ஒரு நல்ல தலைவர் வாஜ்பாய் என்று கூறி பாஜகவுடன் கூட்டணி கண்டார் கருணாநிதி.
எம்ஜிஆர் பிம்பம் மட்டுமே அரசியலில் கை கொடுக்காது என்று புரிந்து வைத்திருந்த அரசியல்வாதி ஜெ, தனக்கென ஒரு தனி அடையாளத்தை கடினப்பட்டு சம்பாதித்துக் கொண்டார். இL ஒதுக்கீட்டில் கைவைத்து, காலை சுட்டுக்கொண்ட எம்ஜிஆரின் தோல்வி, ஜெவுக்கு தக்க பாடத்தை போதித்தது. 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, ''சமூகநீதி காத்த வீராங்கனை" என்று கி.வீரமணி அவர்களால் போற்றப்பட்டார். முக்குலத்தோர், கொங்கு வேளாளர் சமூகங்களின் குலதெய்வமாக எழுந்து நின்றார். சாதி ஒழிப்பில் தனது பயணத்தை தொடங்கிய திராவிட இயக்கம், தேர்தல் சாதிக் கணக்குள் வழியாக மேட்டுக்குடி சாதியமாக இழிந்து போனது. அதனால்தான், "சமூகநீதி அரசு" என மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், வேங்கை வயல் அநாகரிகத்தை கண்டிப்பதற்கு 15 நாட்களாகின்றன. திராவிடக் கட்சிகள் எதுவும் இந்த கொடூரத்தைக் கண்டிக்க வில்லை. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அம்பேத்கரிய அமைப்புகள் மட்டுமே கண்டித்தன, களத்துக்கு வந்துள்ளன. திராவிடக் கட்சிகள், வேங்கைவயல் தலித்துகளுக்கு ஆதரவாக பேசினால் பிற்படுத்தப்பட்டோரது வாக்குகள் கிடைக்காது என்ற தேர்தல் கணக்கு மட்டும் காரணமல்ல. இந்தக் கட்சிகளின் தலைமையே மேட்டுக் குடி சாதித் தலைமையாக இருப்பதுதான் காரணம்.
பாசிச பரிவாரங்கள்:
மிகவும் கவனிக்க வேண்டியது, திராவிட நிலம், திராவிட கருத்தியல், அரசியல் காலநிலை, அஞ்சுமள வுக்கு கணிசமாக மாறிப் போய் விட்டது. பாஜக தனது படைகளுடனும் பசப்புகளுடனும் திராவிட நிலத்தில் கால் வைத்துள்ளது. மாநில அடையாளத்துடன் கூடிய அரசியல் சக்திகள், ஒன்றிய அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவது என்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலான கட்டம் முடிந்து போய்விட்டது. ஒன்றிய அதிகாரத்தைக் கொண்டு, மாநில அரசியல் சக்திகளை அடித்தோ, விழுங்கியோ ஒழித்துக்கட்டுவது என்ற கட்டம் வந்துவிட்டது. ஒரே தேசம், ஒரே மொழி என்று தொடங்கி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்று செல்லுமளவுக்கு மாறிவிட்டது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பார்கள். "காற்று கனத்த விஷத்தைக்' கூட சுமந்து வரலாமல்லவா? வெற்றிடத்தை ஏற்படுத்தியது திராவிட அரசியல்தான்.
"ஒற்றைத் தலைமை" முழக்கத்துடன் அதிகாரப் போட்டியிலிறங்கியுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகம் தமிழ்நாட்டில் இல்லை. தில்லியில் இருக்கிறது. பாரதிய ஜனதாவின் மய்ய அலுவலகத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இருக்கிறது. சட்டப் பேரவையிலிருந்து ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்வதற்கு வழி காட்டிய எடப்பாடி, மோடியின் கடைக்கண் பார்வை பன்னீர்செல்வத்திடமிருந்து தன்மீது விழவேண்டுமென்பதற்காக செய்த 'கில்லாடி' வேலை என்பது சொல்லாமலே விளங்கும். தாமதமாக என்றாலும் ஸ்டாலின் "திராவிட மாடல் அரசு" என்பதை நாள்தோறும் பேசி வருவது, பாஜகவை எரிச்சலடைய வைக்கிறது என்பது உண்மையே. ராஜ்பவன் காதுகளை குடைகிறது என்பதும் தெரிந்ததே. மோடியின் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மம்தாவை அன்றாடம் எரிச்சலடைய வைத்த மேற்கு வங்க ஆளுநரை துணை குடியரசுத் தலைவர் ஆக்கியது போல் ஆர்.என்.ரவிக்கும் ஏதாவது கிடைக்கலாம்.
குறுக்குச்சாலையில் திராவிட அரசியல்:
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று, எடப்பாடி வீராப்பு பேசினாலும் பாஜகதான் பந்தை உருட்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. லேடியா? மோடியா? என்று கேட்ட ஜெவின் அதிமுக, 'மோடியே துணை' என்று தொழுது கிடக்கிறது. திராவிட அரசியல் ஒரு திருப்பு முனைக் கட்டத்திலிருப்பதையே பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நினைவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு உணர்த்துகின்றன. இந்த கட்டத்தை, திமுக தனக்கு கிடைத்த நல்வாய்ப் பாக காணுகிறது. அதிமுக சொந்த பலத்தில் எழ வாய்ப்பில்லை; மதிமுக போன்ற வகையறாக்கள் திமுகவின் இளைய கூட்டாளியாகி விட்டன. தேமுதிக எழுவது கடினம். பாமக எப்படியும் போகலாம் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், நிரந்தரமான திமுக ஆட்சி என்று பேசத் தொடங்கியிருக்கிறது. அதிமுக வினரும் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
டிசம்பர் 6, இரண்டு திட்டங்கள்:
டிசம்பர் 6, அம்பேத்கர் நினைவுநாள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த இரண்டும்கூட தற்செயல் நிகழ்வுதான். ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ர(த்)த யாத்திரையின் திட்டம் பாபர் மசூதியை இடிப்பது. மசூதி இடிப்பையும் தாண்டிய திட்டம் அதனிடம் இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை அடித்தளத்தை தகர்க்கும் கேடுகெட்ட நோக்கம் கொண்டது. விடுதலைப் போராட்டத்தின் மூலம் உருவாகி வளர்ந்த, மக்கள் ஒற்றுமைக்கு அடித்தளமான மதச்சார் பின்மையைத் தகர்த்து, இந்து பெரும்பான்மைவாத ஆட்சியைக் (இந்து ராஜ்யத்தைக்) கொண்டு வருவதற்கான தொடக்கமாக இருந்தது. அதனால்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)ன் அன்றைய பொதுச் செயலாளர் வினோத்மிஸ்ரா, "பாசிசத்தின் காலடி ஓசை கேட்கிறது" என்று சொன்னார்."இந்தியாவில் இந்து ராஜ்யம் அமைவது, ஒரு பேரிடராக முடியும். எனவே இந்து ராஜ்யம் வருவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்தாக வேண்டுமென, தொலை நோக்குப் பார்வையோடு டாக்டர் அம்பேத்கர் சொன்னார். எனவே, இந்து ராஜ்யத்துக்கான பேரழிவுத்திட்டமும் அதை முறியடித்து மதச்சார்பின்மையையும் அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டி டிசம்பர் 6, நினைவூட்டுகிறது. அவர்கள் மசூதி இடிப்பை, அயோத்தியில் கோவில் கட்டிவருவதை வெற்றியாக பார்க்கிறார்கள் என்றால், அந்த பிற்போக்கு பாசிச சக்திகளுக்கு கடும் தோல்வியைக் கொடுப்பதில், அரசியலிலும் சமூகத்திலும் அந்த சக்திகள் விளிம்புநிலைக்கு கொண்டு செல்ல வேண்டியதின், பாசிச எதிர்ப்பின் அவசியத்தை அம்பேத்கரின் நினைவுநாள் நினைவூட்டுகிறது.
இந்த டிசம்பர் 6ல்தான் இக(மாலெ) தமிழ்நாடு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பி.வி.சீனிவாசன் தலைநகர் தில்லியில் மறைந்தார். நக்சல்பாரி தெறிப்புகள் தமிழ்நாட்டின் கிராமப்புரங்களிலும் வலுமிக்க சுடராக ஒளிரப் பாடுபட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை வெளி யிட்டு பரப்புரை நடத்தியதிற்காக மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். மக்கள் கவிஞர் இன்குலாபுக்கு பெரும் படைப்பு உந்துதலைக் கொடுத்ததில் பெரும் பங்கு வகித்தவர். அவரால் முழு நேரப் புரட்சியாளராக அழைத்து வரப்பட்டவர்தான், டிசம்பர் 10 (சர்வதேச மனித உரிமை நாளில்) மறைந்த கட்சியின் 11வது மாநிலச்செயலாளர் தோழர் என்.கே.நடராசன். சாம்பலாக்கிவிட்டோமென கொக்கரித்த ஆட்சியாளர்களை அஞ்சி நடுங்கச் செய்து, இந்திய வானில் ஒரு புரட்சி நட்சத்திர மாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)அய் அகில இந்திய கட்சியாக ஒளிரச் செய்த தோழர் வினோத்மிஸ்ரா மறைந்த நாள் டிசம்பர் 18.
1967ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் மீதான அரசியல் கோபம் கொண்ட நிலப்பிரபுத்துவ சக்திகள் நிகழ்த்திய வெறியாட்டம்தான் கீழ்வெண்மணி. நிலப்பிரபுக்களின் கோட்டையான காங்கிரசை வீழ்த்தி, திமுகவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தவர்கள், அடித்தட்டு விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள். செங்கொடியை கீழேப் போட மறுத்து பண்ணையார்களின் ரத்தவெறி அரசியலுக்கு சவால் விட்டவர்கள். அதனால்தான் 44 பேர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். டிசம்பர் 25 அன்று நடந்த இந்த கோர நிகழ்வை, கிராமப்புறத் தொழிலாளர்களின் அரசியல் செல்வாக்கிற்கும் புதிதாக எழுந்து வந்த புதிய பண்ணையார்களுக்கும் இடையே நடந்த "ரத்தம் சிந்தும் அரசியல் போராட்டத்தைக்” கண்டு, செங்கொடி சுமந்த 44 வறியவர்கள் கொல்லப் பட்டது கேட்டு இந்தியாவே அதிர்ந்து போனது. ஆனால், இங்கிருந்த ஆட்சியாளர்களோ, விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயி களும் கோபம் கொண்டு வீதிக்கு வந்து விட்டதை தணிப்பதில்தான் கவனமாக இருந்தார்கள்!
வெண்மணி நாளை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமென்று ஒரு இடதுசாரி தலைவர் கோரிக்கை வைக்கிறார். மற்றொரு மூத்த இடதுசாரித் தலைவர், வெண்மணி வழக்கில் உயர்நீதிமன்றம் எப்படி 'தொழிலாளர் விரோதமாக நடந்து மீண்டுமொருமுறை 44 பேர்களையும் கொன்றது' என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதுவும் தேவையான அம்பலப் படுத்தல் தான். இப்போதிருக்கிற அரசு, டிசம்பர் 25அய் அரசு நிகழ்ச்சியாக நடத்துவதற்கு கூட ஒப்புக் கொள்ளக்கூடும். ஆனால், மிக மிக முக்கியமானது, செங்கொடி பின்னால் ஒரு வலிய அரசியல் சக்தியாக எழுந்து நின்ற விவசாயத் தொழிலாளரின் வலிமையை உடைத்ததுதான் வெண்மணி நிகழ்வு. ஆகவே, அவர்களை மீண்டும் ஒரு அரசியல் சக்தியாக எழவைப்பது தான் இன்றைய அரசியல் தேவை. வெண்மணி முதல், வேங்கைவயல் வரை மூர்க்கத் தனமான ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் போடுவதற்கு காரணம், கிராமப்புறத் தொழிலாளர் வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாக திரட்டப்படாமலிருப்பதுதான். தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஒரு அரசியல் சக்தியாக அணி திரட்டப்படவேண்டும். ஜனநாயக, முற்போக்கு சக்திகள் இதன் பின்னே அணிவகுக்க வேண்டும்.
பாசிச மூர்க்கத்தனத்துடன், ஆர்எஸ்எஸ்- பாஜக, பரிவாரங்கள் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை நுழைந்து கொண்டிருக்கின்றன. இதை வலுவாக எதிர்கொள்வதற்கு கிராமங்களை பாசிச எதிர்ப்புக் கோட்டைகளாக மாற்றிட வேண்டும். அதை இடது, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் தான் செய்யமுடியும். அதுதான் காலத்தின் தேவை. இந்த தேவையை நிறைவேற்றும் போராட்டத்தில்தான் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் தோழர்கள் தியாகிகளானார்கள். தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு தங்களின் இறுதி மூச்சுவரை போராடி மடிந்தார்கள். பல இடதுசாரித் தோழர்களும் களப்பலியாகி இருக்கிறார்கள்.
டிசம்பர் 26, மிகப் பெரும் துயரமாக தமிழ் நாட்டின் கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்திய நாள். 2004ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த இந்த மாபெரும் துயரத் தில், 8000க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். அப்போதைய முதலமைச்சர் ஜெ. மிகத் தாமதமாக பார்வையிட வந்து மக்களது கோபத்துக்கு இலக்கானார். அரசு செயலற்று இருந்தபோது, துயர்துடைக்கும் மானிட ஒருமைப்பாடு அலை அலையாய் வந்தது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் "உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறி களத்தில் நின்றனர். ஆண்டுதோறும், கடற்கரை கிராமத்து மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்தப் பேரழிவு ஏற்படுத்திய விளைவுகள், காயங்கள், துயரங்கள் இன்னும் மறைய வில்லை. அதிமுக அரசும் இப்போதிருக்கும் திமுக அரசும் ஆறாத் துயருற்ற மக்களுக்கு, கடற்கரைப் பகுதிகளை பாதுகாப்புள்ளதாக்க எதுவும் செய்ய வில்லை. இயற்கைப்பேரிடர்கள் கடற் கரையை தாக்காமலிருக்க நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கக் கூடாது? காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்களை உருவாக்கி வரும் போது கடற்கரைப் பகுதிகளையும் அதுசார்ந்த மக்களையும் காப்பதும் அரசின் முக்கிய கடமையல்லவா?
ஆதிச்சநல்லூர், கீழடியோடு வேங்கைவயலையும் நினைவு கொள்வோமா?
டிசம்பர் 26, அருவருக்கத்தக்க கருப்பு பக்கத்தையும் எழுதிக்காட்டியுள்ளது. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டுமென்று அறிஞர்களும் அரசியல் வல்லுநர்களும் சொல்கிறார்கள். நல்லது. ஆதிச்சநல்லூர், கீழடி தமிழர் நாகரிகம். தமிழர் பெருமை என்று சொல்லப்படுகிறது. பெருமைதான். மனித மலத்தை மனிதர் அள்ளும் இழிவு ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தலித்துகள் குடியிருக்கும் ஒரு ஊரையே மலம் உண்ண வைத்தது எந்த நாகரிகம்? யாருடைய பெருமை?
காற்றும் நிலமும் காக்கப்பட வேண்டும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், வளரும் நாடுகள் மீது 1960களில் திணிக்கப்பட்ட “பசுமைப்புரட்சி” எண் ணற்ற பேரழிவைக் கொண்டு வந்தன. உணவு உற்பத்தியில் "தன்னிறைவு", "ஏற்றுமதி" முழக்கங்களை முழங்கிக் கொண்டு, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் தாக்குதலை சந்தித்தன. அதிக உற்பத்திக்கு, நவீன விவசாயம் தேவை. நவீன விவசாயத்துக்கு உரம், பூச்சிமருந்து, நவீன இயந்திரம், கடன் தேவை என்று கூறினர். இந்த முதலாளித்துவக் கொள்கைகள் நிலம்,நீர்,காற்று,கிராம வாழ்வு, அனைத்தையும் நஞ்சாக்கின. கிராமங்கள் வெறிச் சோடின. இந்த, ஏகாதிபத்திய லாபவெறிக்கு எதிராக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அரசுப் பணியை துறந்து, அயராது தமிழ்நாட்டைச் சுற்றிவந்து விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அரசாங்கம் செய்யவேண்டியதை அவர் ஒருவராக நின்று செய்துகாட்டியவர். நிலம், நீர், காற்று,உணவு நஞ்சாவதை தடுத்து நிறுத்தப் போராடியவர்.காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் பிசாசு நுழையமுற்பட்டபோது, பேரியக்கத்தைக் கட்டமைத்தவர்.மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளோடு உறவாடியவர். அந்த சுற்றுச்சூழல் போராளி, மண்ணுக்கு விதையாக விழுந்தது டிச 30.
அவரது நினைவாக ஒரு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்பது டெல்டா விவசாயி களின் கோரிக்கை ஏற்புடைய கோரிக்கைதான். இந்த அரசால் செய்ய முடிந்த கோரிக்கைதான். ஆனால் மிக முக்கியமானது, நிலத்தையும் விவசாயத்தையும் கார்ப்பரேட் பிடிகளிலிருந்து காப்பாற்றுவதுதான் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உரிய, உயரிய நினைவிடமாக இருக்கும். நிலத்தை, நீரை, காற்றை, உழைப்பை விழுங்கி மக்கள் வாழ்விடத்தை பாலைவனமாக மாற்றும் என்எல்சி போன்ற தொழிற்சாலைகளை கட்டுப் படுத்தி இயற்கையை பாதுகாப்பதுதான் உடனடித் தேவை. இதைச் செய்யச் சொல்லி ஒன்றிய, மாநில ஆட்சிகளை வறுபுறுத்துவதுதான் உடனடித்தேவை.
இறுதியாக, டிசம்பர் ஆக முக்கியமான செய்திகளை நமது கவனத்துக்கு கொண்டு வருகிறது. அனைத்துக்கும் மிகமிக அடிப்ப டையாக “ஜனநாயகம் காக்கப்படுவதும் தேசம் காக்கப்படுவதும் இன்றைய உடனடித்தேவை. எல்லா நீண்டகால நோக்கங்களுக்கும் இந்த உடனடி நோக்கம் அடிப்படையானது. இந்த உடனடி நோக்கத்தை எட்டுவதே ஒரு நீண்டகாலத் தன்மையைக் கொண்டது. இந்த புரிதலின் அடிப்படையில் சாத்தியமான அனைத்து வகை சக்திகளுடனும் கரம் கோர்ப்பதும் அவசியமானது. பாசிசம் எதிர் திராவிடம் என்பது தமிழ்நாட்டின் அரசியல் களமாக உள்ளது. பாசிசம் தோற்கடிக்கப்பட, 'திராவிட மாடல் அரசு', நவதாராளவாத கார்ப்பரேட் பொருளா தாரக் கொள்கைகளிலிருந்து தள்ளி நிற்க வேண்டும். சாதி ஒழிப்பு சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, தலைவர் வழிபாடு நீங்கிய பகுத்தறிவு தேவை. இதற்காகத்தான், மக்கள் கவிஞர் இன்குலாப், பிவிஎஸ், என்.கே, விஎம், போராடி மறைந்தார்கள். வெண்மணித் தியாகிகள் பலியானார்கள். நம்மாழ்வார் போன்ற ஆளுமைகள் களமாடினார்கள்.
டிசம்பர் காட்டும் சரியான வெளிச்சத்தில் நடை போட வேண்டும். டிசம்பரில் தமிழ் மாதம் மார்கழியும் இருக்கிறது. மார்கழிக்கு விடை கொடுத்தால் தமிழ்த் தை வரவேற்கும்."தை பிறந்தால் வழிபிறக்கும்" என்பது தமிழ் பண்பாட்டின் வாழ்வியல் நம்பிக்கை. ஜனவரியும் தையும் போராட்ட, புத்தாண்டாக மாறட்டும். பாசிசம் மறைந்து ஜனநாயகம் ஒளிர வேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)