நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் கடிதத்திற்கு இகக(மாலெ) அளித்துள்ள பதிலில் இந்த முன்மொழிவு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத் துக்கு விரோதமானது என்று சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் சாவு மணி அடிக்கிற செயலாகும். ஒரே சமயத்தில் தேர்தல் என்ற ஏற்பாட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்வது என்ற முன்மொழிவு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மீறுகிற செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசமைப்புச் சட்டத் தையே திரும்ப எழுதுவதற்கு ஒப்பானதாகும்.
சட்ட ஆணையம் இது போன்ற ஒரு கடிதத்தை 2018 லேயே அனுப்பி இருந்தது. அப்போது பல அரசியல் கட்சிகளும் அதை ஜனநாயக விரோதமானது என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இப்போது டிசம்பர் 23, 2022 தேதியிட்ட கடிதம் மூலம் சம்பந்தப் பட்டவர்களின் கருத்துகள் கேட்கப்படு கின்றன. ஒரே சமயத்தில் தேர்தல் என்பதற்கான இந்த புதுப்பிக்கப்பட்ட அழுத்தம், வேறு வார்த்தை களில் சொல்வதானால் "ஒரே தேசம், ஒரே தேர்தல்" என்ற பாஜகவுக்கு பிடித்தமான இந்தக் கருத்து, அரசமைப்புச் சட்டத்தின் குருதி ஓட்டமான ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வை அரித்துப் போகச் செய்வதாகும். இன்று "ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற பெயரில் பாஜக காலச்சக்கரத்தை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறது. அரசமைப்புச் சட்ட திருத்தம் மூலம் அரசியலில் ராணுவ ஒழுங்கை திணிக்கிறது.
ஒரு கட்சி ஆதிக்கத்தை உருவாக்கும் முயற்சி
2018ல் வெளியிடப்பட்ட ஒரே சமயத்திலான தேர்தல்கள் என்ற நகல் அறிக்கையில், சட்ட ஆணையம் இவ்வாறு குறிப்பிடுகிறது 1960ன் மத்தியப்பகுதி வரை ஒருமுகப்படுத்தப்பட்ட தேர்தலை நடத்தியதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், அப்போது ஒரே ஒரு தேசிய கட்சிதான் ஆட்சி செய்தது. அதிகாரத்தில் இருந்தது. பிராந்திய கட்சிகள் சக்தி மிக்கதாக இல்லை. தாக்கம் செலுத்துவதாகவும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் பெற்றிருந்த தேர்தல் ரீதியிலான ஆதிக்கத்தை இன்று பாஜக பெற்றிருக்கிறது என்கிறது. இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதோ, காலச்சக்கரத்தை பின்னுக்குத் தள்ளுவதோ முடியாது. இந்தியாவை ஆளுகிற கட்சியாக பாஜக இருக்கும் என்றும், இன்னும் சொல்லப் போனால் ஒரே கட்சியாக இருக்கும் என்றும், அதுவும் அடுத்த அய்ம்பது ஆண்டுகளுக்கு இதுதான் நிலைமை என்றும் பாஜக தன்னுடைய லட்சியத்தை வெளிப்ப டையாக அறிவித்திருக்கிறது. ஆட்சி அதிகாரத் தில் இருக்கும் கட்சியின் அரசியல் லட்சியங்க ளுக்கு பொருந்துகிற வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது கூடாது.
நிதி, தளவாடப் பொருள் போக்குவரத்து வசதி காரணங்களுக்காக ஜனநாயகத்தை சிறுமைப் படுத்த முடியாது.
எப்படி ஊராட்சி, நகராட்சி தேர்தல்களுக்கு அதற்கே உரிய குறிப்பான சூழல் உள்ளதோ அதைப்போலவே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கும் உண்டு. தளவாடப் பொருள் போக்குவரத்து காரணங் களுக்காக தேர்தல்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது, சட்டமன்றத் தேர்தலுக்கே உரிய சுயாட்சி வரம்பை நீக்கி அதை மைய சூழல் தன்மைக்கு கீழ்ப்படியும் படி வைத்து விடும். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் தளவாடப் பொருள் போக்குவரத்து வசதியாக இருக்கும், நிதி மிச்சப்படுத்தப்படும் என்ற யூகத்திற்கு அடிப்படையான தளவாடப் பொருள் போக்கு வரத்து ஏற்பாடு பற்றியோ, தேர்தல் செலவினங்கள் பற்றியோ எவ்வித நம்பகமான படிப்போ, பகுப்பாய்வோ இதுவரை இல்லை. இதை நகல் அறிக்கையே ஒப்புக் கொள்கிறது. இது நிதி செலவினம் தொடர்பாக சட்ட ஆணையத்தின் முடிவை கேள்விக் குள்ளாக்குகிறது.
மேலும் சட்ட ஆணைய வரைவு அறிக்கையின்படி, 2014 தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ரூ3586 கோடி செலவிட்டுள்ளது (பாரா 2.10). 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒன்றிய அரசாங்கம் மின்னணு ஊடக விளம்பரங்களுக்கு என்று ரூபாய் 3260.79 கோடியும் அச்சு விளம்பரங்களுக்கு என்று ரூபாய் 3230.77 கோடியும் செலவிட்டுள்ளது. உண்மை யிலேயே நிதியை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு வேறு இடத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.ஜனநாயகத்தின் கருவான கொள்கைகளை வழி நடத்திட செலவி னத்தை முக்கிய விசயமாக பார்க்கக் கூடாது.
மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய ஆணையத்தின் பார்வை 'ஜனநாயகத்தில் மக்களே மையமானவர்கள்' என்பதற்கு எதிரான முடிவாக உள்ளது.
மாதிரி நடத்தை விதிகளைச் சுற்றி ஒரு நேர்மையற்ற விவாதத்தைக் கட்டமைத்து, ஒரே சமயத்தில் தேர்தல் என்பதை நியாயப்படுத்த சட்ட ஆணையம் முயற்சிக்கிறது. மாதிரி நடத்தை விதிகள் வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தவோ அல்லது அதில் குறுக்கிடவோ இல்லை. மாதிரி நடத்தை விதிகள், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் மூலம் வாக்காளர் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு சிலக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அரசாங்கம் பற்றியும், வளர்ச்சி செயல்பாடுகள் என்று சொல்வது பற்றியும் மக்கள் தங்கள் கருத்துக் களைச் சொல்வதற்கு தேர்தல்கள் உதவுகின்றன. ஆட்சி முறைக்கும், மக்கள் தங்கள் பிரதிநிதி களை தேர்ந்தெடுக்கும் உரிமை, அரசாங்கம் பற்றி, அதன் செயல்பாடு அல்லது அவர்களால் செயல்படுத்தப்படும் வளர்ச்சி நிகழ்ச்சிகள் பற்றி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கும் இடையில் செயற்கையான முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் வாயிலாக, மாதிரி நடத்தை விதிகள் வளர்ச்சிக்கு தடை என்று முன்னிறுத்துவதானது ஜனநாயகத்தில் மக்களே நடுநாயகமானவர்கள் என்பதற்கு எதிரான கருத்தாகும்.
அரசமைப்பு அறநெறி மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவது
அடிப்படைக் கட்டமைப்பு' என்ற கோட்பாடு பற்றி சட்ட ஆணையம் தவறாக சட்ட வியாக்கியானம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. கோட்பாட்டின் செயல் தளத்தை வரம்புக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தை திருத்தி எழுதுவது என்பது அடிப்படைக் கட்டமைப்பை மீறிய செயலாகாது என்று சட்டப்படி தாக்குப் பிடித்து நிற்க முடியாத ஒரு விவாதத்தை கடினப்பட்டு தயாரித்து முன்வைக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் மாறுகிற அரசமைப்புச் சட்ட வாதம் (Transformative constitutionalism) என்பது அடிப்படைக் கட்டமைப்பு பரிசோதனையோடு கூடவே எந்த ஒரு அரசமைப்புச் சட்ட திருத்தமும் அரசமைப்புச் சட்ட அறநெறிகள், அரசமைப்புச் சட்ட ஆளுகை, அரசமைப்புச் சட்ட நோக்கு நிலை என்ற லட்சியங்களுக்கு உட்படுகிறதா என்ற பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். எப்படி இருந்த போதிலும், இருக்கக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயக முறையை செயலூக்கமிக்க வகையில் மாற்றுகிற பாரதூரமான அரசமைப்புச் சட்ட திருத்தங்கள் இடம் பெற்றுள்ள போதும் கூட, மொத்த நகல் அறிக்கையிலும் 'அரசமைப்புச் சட்ட அறநெறி' என்பது காணப்படவே இல்லை.
சட்ட ஆணையம் ஒரே சமயத்தில் தேர்தல் என்பதைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளும் பாரதூரமான திருத்தங்களை நியாயப்படுத்தும் முயற்சியாக, இந்திய சட்டவியல் அளித்துள்ள வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றை தேவை யில்லாமல் குறைத்து மதிப்பிடுகிறது. நாடாளு மன்ற ஜனநாயகத்தில் கட்சி ஆட்சி பல முறையும், சுதந்திரமான நியாயமான தேர்தல் களும் அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டமைப்பின் உட்பொதிந்த அம்சங்களாகும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை கட்டாயமாக ஒரே சமயத்தில் நடத்துவதை உறுதி செய்யும் எந்த அரசமைப்புச் சட்டத் திருத்தமும் அரசமைப்புச் சட்டத்தின் 'அடிப்படை கட்டமைப்பு' மீது நடத்தப்படும் தாக்குதலாகும். மேலும் அது அரசமைப்புச் சட்டத்தின் குருதி ஓட்டமாக இருக்கும் ஜனநாயகம், கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வுகளை அரித்துப் போகச் செய்வதுமாகும்.
ஆகவே தேவையற்ற, பேரழிவுக்கான சாத்தியக் கூறுகள் கொண்ட இந்தத் திட்டத்தை அமலாக்குவதை கைவிடுமாறு சட்ட ஆணை யத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)