மதுரை வழக்கறிஞர்கள் முகம்மது யூசுப் மற்றும் முகம்மது அப்பாஸ் இருவரும் தேசிய புலனாய்வு முகமை(NIA)யால் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜரானார்கள் என்பதற்காக அவர்களையும் குற்றவாளிகள் ஆக்கி கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. இது வழக்கறிஞர்களின் உரிமையை மட்டுமின்றி வழக்கறிஞர்கள் தொழிலையே முடக்கும் செயல் ஆகும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும் அச்சட்டத்தின் படி குற்றவாளிகள் என்கிற சரத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மிகவும் மோசமான சரத்தாகும். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய பல்வீர் சிங்கிற்கு எதிராக பாதிக்கப் பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் மகராஜனை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள். இதுவும் மனித உரிமை மீறல் ஆகும். குற்றவாளி பல்வீர் சிங்கை இது வரை கைது செய்யவில்லை. பல்பிடுங்கிய வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போதும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் வாதாடும் வழக்கறிஞர்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறை கைது செய்து சிறையில் அடைக்கிறது. குறிப்பாக சிறுபான்மை யினருக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

வழக்கறிஞர்கள் அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததைக் கண்டித்தும், வழக்கறிஞர் மகாராஜன் அவர்களை தென்காசி மாவட்ட காவல்துறை பொய் வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும் பல் பிடுங்கிய வழக்கில் குற்றவாளி பல்வீர்சிங் மற்றும் காவல் அதிகாரிகளைக் கைது செய்யக் கோரியும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும் 12.5.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க(AILAJ)த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜி.ரமேஷ் த லமை தாங்கினார். அகில இந்திய வழக்கறிஞர் சங்க(AILU)த்தின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கு.பழனி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறி ஞர்கள் முபாரக், முருகன், சுதர்சன் மற்றும் அப்துல் நிஜாம், ஆரிப், பிரபாகர்,லியோன், அசார், தௌபிக், கோதண்டராமன், முகமது நயினர், காதர், முகமது ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.