ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-25
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை மக்களவையில் ஜூலை 23, 2024 செவ்வாய் அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையும், சீதாராமனது ஏழாவது தொடர்ச்சியான நிதிநிலை அறிக்கையுமாகும். இந்தியா சுதந்திரம் பெற்ற நூறாவது ஆண்டான 2047 இல் 'விக்சிட் பாரத்' அல்லது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அறிமுக பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் இந்த விக்சிட் பாரத்தின் முக்கியத் தூண்களாக இருப்பார்கள்; அவர்களது வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு அதிக கவனம் குவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
அதிகரித்து வரும் விவசாயிகள் நெருக்கடி
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா விவசாயிகளின் தொடர் போராட்டங்களை சந்தித்து வருகிறது. அவர்களது முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிதிநிலை அறிக்கையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவசாயம், அது தொடர்பான துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு நிதியாண்டு 2024 இல் ₹1.41 லட்சம் கோடி என்பதிலிருந்து நிதியாண்டு 2025-ல் ₹1.52 லட்சம் கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அது வெறும் 8% உயர்வு மட்டுமே. பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ₹6.22 லட்சம் கோடியோடு ஒப்பிடும் போது இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானதாகும். உரம், உணவுக்கான மானியங்கள் தற்போதைய ₹2.15 லட்சம் கோடியில் இருந்து ₹1.64 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மையை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்பது அவர்கள் கார்ப்பரேட்டுகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள், கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்கவைக்கப்படுவார்கள் என்றே அர்த்தமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயம், அது தொடர்புடைய துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 4.2% ஆக இருக்கிறது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் எந்த ஒரு காலகட்டத்திலும் மிக மிக குறைவான வளர்ச்சி விகிதம் ஆகும். ஏழை விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டமான பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு நிதி எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதேயளவு ஒதுக்கப்பட்டுள்ளது. 2018 டிலிருந்து ஓராண்டுக்கு ₹6000 என்று நிர்ணயிக்கப்பட்டது மாற்றப்படாமல் அப்படியே தொடர்கிறது. கிட்டத்தட்ட 45% மக்கள் விவசாய வேலைகளை நேரடியாக நம்பி இருக்கிறார்கள். அதுபோக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.2% ஐ நாட்டின் விவசாயிகள் வழங்குகிறார்கள். இருந்தபோதிலும் மத்திய அரசு கிராமப்புற பொருளாதாரத்தை சீரழிக்கப்பார்க்கிறது. வேளாண் துறையை கார்ப்பரேட் கைகளுக்கு வாரி வழங்க துடிக்கிறது. இதன்மூலம் விவசாயத் துறையை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. இப்படி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயத் துறைக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, காலநிலையைத் தாங்கும் உயர் விளைச்சல் தரும் மரபணு வகை மாற்றுப்பயிர்களை பெரு முதலாளிகள் ஆக்கிரமிப்பதற்கு நிதியமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய விவசாயத்தில் மரபணு மாற்றுப் பயிர்களை கொண்டுவருவதற்கு எதிராக நாட்டின் விவசாயிகள் மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற போதும் இவ்வாறு நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஏழைகளைக் கசக்கிப் பிழியும் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி, பிற மறைமுக வரிகளின் சுமைகளால் ஏழைகள் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். ஏழைகள் வரிகளை செலுத்துவதில்லை என வாட்ஸ்அப் பரப்புரைகள் கூறலாம். வெறும் இரண்டு கோடி மக்கள் மட்டுமே நேரடி வருமான வரி செலுத்துகின்றனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 2.2% தான். ஆனால் யதார்த்தத்தில் ஒவ்வொன்றிலும் இருந்து பெரும் வரி வசூலிக்கப்படுகிறது. மக்கள் வாங்கும் மாவு, பருப்பு, அரிசி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் 5% ஜிஎஸ்டி வரி முதல், சாலை வரி, டோல் வரி, பெட்ரோல், டீசல் மீதான வரி என ஒவ்வொருவரின் சட்டைப் பையிலிருந்தும் பிடுங்கிக் கொள்ளப்படுகிறது. பெரும் செல்வச் சீமான்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் படி ஜிஎஸ்டி, பிற வரிகளில் இருந்து 18% மும், வருமான வரியில் இருந்து 19% மும் பெறப்பட்டுள்ள நிலையில் கார்ப்பரேட் வரியிலிருந்து 17% மட்டுமே வசூலிக்கப்பட்டு வரவாகியுள்ளது. ஜிஎஸ்டி ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் ₹1.74 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 111 வது இடத்திலுள்ளது. மேலும் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அதேபோன்றதொரு திட்டம் நகர்புறங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுப்பப்படும் கோரிக்கை காது கேளாதவர் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. இந்த திட்டத்திற்கு கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அதே ₹86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்திற்கான தேவை 2.5 லட்சம் கோடி என இந்தத் திட்டம் குறித்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிதி ஒதுக்கீடு தவிர டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு, சம்பள பட்டுவாடா போன்றவைகளும் இந்த திட்டத்தில் இருந்து ஏழைகளை விலக்கி வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
திறன் மேம்பாடு என்ற முதலாளிகள் ஆதரவு திட்டம்
பொருளாதார ஆய்வறிக்கையின்படி, அதிகரித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் சக்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 80 லட்சம் புதிய வேலைகள் தேவைப்படுகின்றன. 2014 இல் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்து போது ஒரு ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றது. அப்படி செய்யப்பட்டிருந்தால் இந்த 2024 வரை 20 கோடி புதிய வேலைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இருக்கும் வேலைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள வேலைகள் காலியாக விடப்பட்டுள்ளன. அல்லது தற்காலிக, ஒப்பந்த பணிகளாக்கப்பட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பெருந்தொற்று போல பரவிக் கொண்டிருக்கிறது. இதன் விகிதம் 9.2% ஆக உள்ளது. மேலும் அது இளைஞர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவும் உள்ளது. எங்காவது வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றால் ஒரு இடத்துக்கு நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியிடும் நிலையை நாம் செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு முக்கிய தேவையாகும். இந்த பற்றி எரியும் பிரச்சனை பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில், அரசாங்கம் சற்றும் பொருட்படுத்தவில்லை. இளைஞர்களுக்கு நிரந்தரமான, கௌரவமான வேலை வழங்குவதற்கு மாறாக வேலை பெறுவதற்கு தேவையான திறன் மேம்பாடு, பயிற்சி வழங்குவது என்ற திட்டத்தை முவைத்துள்ளது. இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாடு திட்டத்தில் பயனடைவார்கள் என அரசாங்கம் கூறுகிறது. ஆயிரம் தொழில் பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டமும் முன் வைத்திருக்கிறது. 500 முக்கிய தனியார் நிறுவனங்களில் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு கோடி இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஒரு மாதத்திற்கு ₹5000 வீதமாக ஓர் ஆண்டுக்கு இந்த அரசாங்கம் உதவித்தொகை வழங்கும். மேலும் வேலையில் சேரும்போது உதவியாக ₹6000 ஒருமுறை வழங்கும். இது முதலாளிகளுக்கு அற்ப கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. நிறுவனங்கள் இந்த பயிற்சித் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்காமல் வேலை வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பெண்கள்
இந்த நிதிநிலை அறிக்கையிலும் பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவதற்கான எந்த ஒரு குறிப்பான திட்டங்களோ அல்லது நிதி ஆதரவோ வழங்கப்படவில்லை. பெண்களின் முக்கியமான தேவைகளையும் கண்டுகொள்ளத் தவறிவிட்டது. பொருளாதாரம், சமூகம், உடல்நலம் ஆகியவற்றில் பெண்களின் முன்னேற்றம் குறித்த எதிர்பார்ப்புகளையும் இந்த நிதிநிலை அறிக்கை புறக்கணித்து விட்டது. பெண்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் ₹3 லட்சம் கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீதாராமன் செவ்வாய் அன்று அறிவித்தார். பெண்கள் பொதுவாக தொழிலாளர் சக்தியில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணியிடங்களில் பாதுகாப்பு, கண்ணியமான பணி நிலைமைகள், பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றுக்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களின் தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கான நமோ ட்ரோன் தீதி என்ற திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கான ட்ரோன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் தீன் தயாள் அந்தியோதயா யோஜனாவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 89 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 15,000 குழுக்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு இந்த நிதி வழங்கப்படும். ₹10 லட்சம் மதிப்புள்ள ஒரு ட்ரோனை வாங்குவதற்கு ஒரு சுய உதவி குழுவுக்கு அதிகபட்சமாக ₹8 லட்சம் மானியமாக வழங்கப்படும். மீதி உள்ள நிதியை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படியான திட்டங்களின் கோலாகலமான அறிவிப்புக்கும் நடைமுறை சாத்தியப்பாடுகளுக்கும் உள்ள இடைவெளி நாம் அனைவரும் அறிந்ததே! கிராமப்புறங்களில் உள்ள பரந்த பெண்கள் இது போன்ற திட்டங்களில் இருந்து எப்போதும் விலக்கி வைக்கப்படுவார்கள். நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கு உற்பத்தி, அடிப்படை கட்டமைப்பு தொழில்துறைகளில் வேலை வாய்ப்புகள் குறித்த எவ்வித குறிப்பான திட்டங்களும் கூட இல்லை.
எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
இது 'குர்ஷி பச்சோ' அல்லது நாற்காலியை பாதுகாப்பதற்கான நிதிநிலை அறிக்கை என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உண்மைதான். இந்த பாஜக ஆட்சிக்கு ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய ஆதரவு வழங்குகின்றன. அவர்களை கோபப்படுத்தாமல் இருக்க பாஜக நிதிநிலை அறிக்கையில் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. ஆந்திர பிரதேசத்திற்கு பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் ₹65 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ₹58,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற முக்கிய மாநிலங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டியின் பங்கு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி ஆகியவற்றை குழி தோண்டி புதைக்க நினைக்கும் பாஜக, சங்கிப்படைகளுக்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு ஆயுதமாக இந்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை பயன்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)