டெல்லியில் நாசகார புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்- இகக(மாலெ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
பாசிச மோடி-அமித்ஷா அரசு, மிகக் கொடூரமான, நாசகாரக் குற்றவியல் சட்டங்களை கடந்த ஜூலை 1 முதல் நாட்டில் அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிரான விழிப்புணர்வை வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் வகையிலும் இச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நடத்தி வந்தது. தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் சார்பாக டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 29.7.2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் சிபிஐ (எம்எல்) பீகார் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர் ராஜாராம்சிங், தோழர் சுதாமா பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AILAJ ) அகில இந்திய துணைத் தலைவர் ஜி.ரமேஷ், அகில இந்திய செயலாளர் சூர்ய பிரகாஷ், தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர்கள் வழ.முருகேசன், வழ. கென்னடி, வழ. கம்ருதீன், டெல்லி வழக்கறிஞர்கள் வெர்டிகா, அவினாஷ்குமார் AILAJ சார்பாக கலந்து கொண்டனர். இகக பொதுச்செயலாளர் து.ராசா, விசிக தலைவர் தோழர் திருமாவளவன், திமுகவின் ஆ.ராசா மதிமுக துரை வைகோ, காங்கிரஸ் கட்சியின் விஜய்வசந்த், ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர்கள் மத்தியில் தோழர் ராஜாராம் சிங்
மேடையில் அமர்ந்திருக்கும் தலைமைக் குழுவிற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்திருக்கிற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சிபிஐ (எம்எல்) கட்சி சார்பாகவும் நாட்டின் உயர்ந்த அவையான நாடாளுமன்றத்தின் சார்பாகவும் முதற்கண் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்கள் இது. அதைத்தான் நாங்கள் மாற்றினோம் என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால் பாஜக,நாட்டின் கூட்டாட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருகிறது. அரசமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வழியில், அதிக எதேச்சதிகாரம் கொண்ட, அதிக அதிகாரத்துவம் கொண்ட, அதிக சர்வாதிகாரம் கொண்ட சட்டங்களை உருவாக்கியிருக்கிறது.
நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தைப் பாதுகாப்பதற்காக, ஜனநாயகத்தைக் காப்பதற்காக, மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடுகின்ற, முக்கியமாக இந்தப் பரப்புரையை மேற்கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களைச் சந்திப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தில் இருந்து நாங்கள் நேராக வருகிறோம். உங்கள் போராட்டத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். யாரும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. இந்தியாவின் ஒற்றுமைக்காக, எளிய மக்களின் நலன்காக்க, மதச்சார்பின்மைக்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை யாரும் அழிக்க முடியாது. நீங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறீர்கள். எங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் உங்களோடு நிற்கிறோம். உங்களோடு சேர்ந்து குரலெழுப்புவோம். நன்றி.
தோழர் சுதாமா பிரசாத்
மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களே, இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் வழக்கறிஞர்களே, தைரியமான முடிவோடு, நீண்ட தூரத்தில் இருந்து டெல்லிக்கு போராடுவதற்காக வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள். விவசாயிகள் நலன்காக்க என்ற பெயரில், விவசாய வளர்ச்சி என்ற பெயரில் விவசாயச் சட்டங்கள் அப்போது கொண்டு வரப்பட்டது போலவே, அதே வழியில், விரைவான நீதி, குற்றங்களைக் கட்டுப்படுத்தல் என்ற பெயரில் இந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயச் சட்டங்கள் தங்களுடைய விவசாயத்தை முன்னேற்றவோ, தங்கள் வருமானத்தை அதிகரிக்கவோ கொண்டு வரப்படவில்லை, மாறாக விவசாய நிலங்களை கார்ப்பரேட்களின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் என்பதை பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அதன் காரணமாக, டெல்லி எல்லையில் பல்வேறு இடங்களில் அமர்ந்து ஓர் ஆண்டு 13 நாள்கள் போராட்டம் நடத்தினார்கள். 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகியானார்கள். அதன் பின் ஒன்றிய அரசு அந்தச் சட்டங்களை நிறுத்தி வைத்தது. அதே வழியில், இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் விரைவான நீதிக்கோ, குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்ல, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வெளிப்படுத்தும் சுதந்திரத்தை, உரிமையை ஒழிப்பதற்குத்தான் என்பதை தமிழ்நாட்டின் வழக்கறிஞர்கள் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். இந்தச் சட்டங்கள் நிரந்தரமாக நெருக்கடி நிலையை அமல்படுத்திடவும் நாடு முழுவதும் போலீஸ் ஆட்சியை அமல்படுத்திடவுமே கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஜூலை 1 அன்று நாடாளுமன்றத்தில் நாங்கள் இந்தச் சட்டங்களை மறுபடி திட்டமிட மீண்டும் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்று முன்வைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் கருத்துகளைப் பெற்று பின்னர் அதை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். இச்சட்டங்கள் இப்படியே அமல்படுத்தப்படுமானால், ஊர்வலங்கள் நடத்த முடியாது, பட்டினிப் போராட்டங்கள் நடத்தமுடியாது. முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்கிற முடிவு எடுப்பது இனி போலீஸ் அதிகாரிகள்தான். காவல் அடைப்பு 15 நாள் என்று இதற்கு முன்பு இருந்ததை 60 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை மாற்றி விட்டார்கள். காவல் நிலைய அதிகாரி நினைத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரையும் அவர் நினைத்தபடி இந்த 90 நாள்களில் பேச வைத்துவிட முடியும். ஆகவே இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிறோம். பீகாரின் காரகட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம்சிங்கும் அரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நானும் சிபிஐஎம்எல் கட்சி சார்பாக உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். இக்கோரிக்கைளுக்காக நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் போராடுவோம். நாங்கள் எப்போதும் 24 மணி நேரமும் உங்களுடன் இருக்கிறோம். இருப்போம். ஜெய் பீம், செவ்வணக்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)