தூத்துக்குடி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி) தூய்மைப் பணியை ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சியில் Our land என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் (Contract) வழங்கப்பட்டிருக்கிறது. Our land சொல்கிறது “Greening your life” என்று. இதற்கு தமிழில் உங்கள் “வாழ்க்கையை வளமாக்குகிறோம். செழுமையாக்குகிறோம் “ என்று பொருள். ஆனால், இவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று.
தமிழக அரசின் ஆணை (GO 62/2017) சொல்கிறது. ஓட்டுநர்களுக்கு 763₹ம் தூய்மைப் பணியாளர்களுக்கு 725₹ம் ஒரு நாளுக்கு கொடுக்க வேண்டும் என்று. மாவட்ட ஆட்சியர் ஒருபுறம் குறைந்த பட்சக் கூலி அறிவித்து இருக்கிறார். ஆனால் இந்த இரண்டு ஆணைகளையும் காற்றில் பறக்க விட்டு அடிமாட்டு விலையில் சம்பளம் வழங்குகிறது.
வார விடுமுறை கிடையாது. ஒரு நாளைக்கு 1 டன் குப்பை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வேறு. PF, ESI எண்கள் தொழிலாளர்களிடம் கொடுக்கப்படுவதில்லை. சம்பள ரசீது கொடுப்பதில்லை[1] . கேட்டால் மேற்பார்வையாளர்கள் திமிராகப் பேசுவார்கள்.
உழைப்புச் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்த தொழிலாளர்கள் தங்களுக்கு விடிவுகாலம் வராதா? என்று ஏங்கும் போது AICCTU அறிமுகம் கிடைத்தது. AICCTUல் சேர்ந்தார்கள். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கு பல மனுக்கள் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டது. அனைத்து மனுக்களும் அவர்கள் தினசரி கேட்கும் 1 டன் குப்பையில் கணக்குக் காண்பிப்பதற்கு பயன்பட்டிருக்கலாம். தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு 27 எப்ரல் 2024 பொதுக்குழு நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் மிரட்டலையும் மீறி 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 27 ஜூன் 2024 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஜூன் 26 நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. AICCTU மாநிலத் தலைவர் தோழர். சங்கரபாண்டியன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கையை முன் வைத்தார். துணை ஆணையர் பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்தார். நாமும் உடன்பட்டோம்.
ஜூலை 5 நிர்வாகம் ஏற்றுக் கொண்ட முக்கியமான கோரிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்ட தொழிலாளர்கள் ஆவேசமடைந்தனர். ஜூலை 6 சிறப்பு நிர்வாகக் கூட்டம்[2] கூட்டப்பட்டு ஜூலை 8 உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 8 தொழிலாளர்கள் வரும் முன்பே மாநகராட்சியின் இரு வாசல்களும் பூட்டப்பட்டது. ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். காலை 6 மணிக்கு மேல் 4 மண்டலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகராட்சி முன் திரண்டனர். 8 மணிக்கு மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதற்கு ஒத்துக் கொண்டதோடு, ஆணையரோடு 11 மணிக்கு பேசுவதற்கு ஏற்பாடும் செய்தார். தோழர்கள் சகாயம், சிவராமன், பொன்ராஜ், முத்துலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அடுத்தநாளே சம்பள ரசீது கொடுக்கப்பட்டது. காரணமில்லாமல் பிடிக்கப்பட்ட 50₹ திருப்பிக் கொடுக்கப்பட்டது.
AICCTU தொழிற்சங்கத்தின் சரியான வழிகாட்டலையும் தொழிலாளர்கள் ஒற்றுமையின் அவசியத்தையும் தொழிலாளர்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.
தொழிலாளர்களின் போராட்டத்தின் சில பலன்கள் இப்போது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியானதுதான். ஆனால் முழுமையாகக் கிடைக்க தனியார் மயத்தை ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் அல்லவா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)