நீட் தேர்வுபொருத்தமானதா ?
(பேராசிரியர் ஜவகர் நேசன் எழுதிய ஆங்கில கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்டது *கல்பாக்கம் நடராஜன்* )
*நீட் - மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையை வணிகமயமாக்கியது !*
மருத்துவம் வணிகமாவதைத் தடுக்கவும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மிகச்சிறந்த மருத்துவர்களை உருவாக்கவும் நீட் தேர்வு வழி வகுக்கும் என்று வியந்து ஓதப்பட்டது. இங்கு சொல்லப்பட்ட எந்த இலக்குகளையும் நீட் தேர்வு எட்டவில்லை. மாறாக, மருத்துவக் கல்வி மேலும் வணிகமயமானது. தனியார் கல்லூரிகளில் நீட் தேர்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஓர் ஆண்டிற்கான கட்டணம் ரூபாய் 25 லட்சத்திலிருந்து 35 லட்சமாக உயர்ந்துள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களின் வருமானம் 1.5 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
*தகுதியற்ற தேசிய தேர்வு முகமையின் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள்*
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (தே.தே.மு. National Testing Agency NTA ) கல்வியாளர்களால் வழி நடத்தப்படவில்லை. உண்மையில் அதில் கல்வியாளர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். மேட்டுக்குடி மக்களுக்கான நீட் தேர்வை நடத்தும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தே.தே.மு இந்த ஆண்டு, தேர்வில் நேரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, எத்தகைய அறிவியல் அடிப்படையும் இன்றி, தர்க்கமும் இன்றி கருணை அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கியது. இந்த ஆண்டு கேள்வித்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், ஒரு சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது போன்ற பல குளறுபடிகள், ஊழல்கள் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளன. இதனால் இன்று இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடந்து வருகின்றன.
நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றதால், ஒன்றிய அரசு ஏழு உறுப்பினர் அடங்கிய ஓர் உயர்மட்டக்குழுவை நியமித்து இந்த முறைகேடுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை செய்யக் கோரியது.
இந்தக் குழு முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் நீட் தேர்வுகளை நடப்பதை உறுதி செய்யுமாறு இதே தே.தே.மு வை கேட்டுக்கொண்டது. ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறையை(CBI) நீட் தேர்வின் முறைகேடுகள் பற்றி விசாரிக்கப் பரிந்துரைத்தது. நீட் தேர்வு அறிவியல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் எந்தக் குறையும் அற்றது. சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நீட் தேர்வு முறையே ஒரே வழி ; சிறந்த வழி என்று பொய்யான கருத்துக் கட்டமைக்கப்படுகிறது. நீட் தேர்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகளை, ஊழலை நீக்கினால் போதுமானது என்ற கருத்து பரப்பப்படுகிறது. இதன் மூலம் நீட் தேர்வு அடிப்படையில் கல்விக்கு எதிரானது, அறிவியல் பூர்வமானது அல்ல என்ற உண்மை மறைக்கப்படுகிறது. ஊழலை மட்டுமே மையப் பொருளாக வலியுறுத்தி பேசுவது, இந்த உண்மையை மறைக்கும் தந்திரமே.
*நீட் தேர்வின் கட்டமைப்பே மிகவும் தவறானது; பயனற்றது.*
2021 ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமித்த உயர்நிலைக் குழு மிகச் சிறந்த ஆய்வறிக்கை தந்தது. அவ்வறிக்கை, நீட் தேர்வு கல்வி ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தவறானது, பயனற்றது என்று தெளிவாக நிறுவியது. அதன் அடிப்படையே பிழையானது. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் ஒன்றிய அரசு நிறுவனமான NCERT இன் CBSE பாடத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்ப பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்களின் குழு உருவாக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனையின்படி தேர்வுக்கான பொது பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும். அந்தப் பொது பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வையும் கூட தேவையா, இல்லையா என்ற முடிவை எடுக்கும் உரிமை மாநிலங்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். நீட் தேர்வு மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது. நீட் தேர்வில் NCERT பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளும் மாணவர்களின் புரிதலை, கற்றலை பரிசோதிப்பதற்கு பதிலாக அவர்களின் நினைவாற்றலை, மனனம் செய்யும் திறமையை பரிசோதிப்பதாகவே இருக்கின்றன. இதனால் பயிற்சி மையங்கள் பெருகியுள்ளன.இந்தப் பயிற்சி மையங்களில் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் கட்டி , தொடர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் படிக்கும் மாணவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடிகிறது. எனவே நீட் தேர்வு மருத்துவக் கல்விக்கு எதிரானது மட்டுமின்றி எந்த ஓர் அறிவியல் அடிப்படையும் இல்லாதது.
*நீதிபதி ஏ. கே. ராஜன் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரைகள்*
"மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம்" என்று ஆய்வறிக்கையை தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்கள் குழு 2021 வெளியிட்டது. இந்த ஆய்வின்படி நீட்டிற்கு முந்தைய காலத்தில் 2015-16 ஆம் ஆண்டு அரசு கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு NCERT (CBSE) பாடத்திட்டத்தில் படித்த மாணவர் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. நீட் தேர்வினால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 ஆம் கல்வியாண்டில் 26.83 விழுக்காடாக உயர்ந்தது.
நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை, நீட்டிற்கு முன்பு இரண்டு இலக்கத்தில் இருந்தது; அது 2017-18 கல்வியாண்டில் சுழியமாகக் (0%) குறைந்தது. நீட் தேர்வினால் ஆங்கில வழி பயிலும் மாணவர்களின் மருத்துவ சேர்க்கை 13% அதிகரித்தது. தமிழ் மொழி கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 14.44% லிருந்து , நீட்டிற்குப் பிறகு 1.7% ஆகக் குறைந்தது. நீட்டினால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ சேர்க்கை 12 விழுக்காடு குறைந்து நகர்புற மாணவர்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எழுதிய 99% மாணவர்கள் ஏதோ ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றவர்கள். இளநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 71% , ஒரு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்கள்.
நீட் தேர்வினால் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை 10 விழுக்காடு குறைந்தது. முதல் தலைமுறை பட்டதாரி அல்லாத மாணவர்கள் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்தது.
நீட் தேர்வு நகர்ப்புறங்களில் படிக்கின்ற, ஆங்கில வழி கல்வி படிக்கின்ற மாணவர்களுக்கு சாதகமாக அதிக வாய்ப்பு அளிப்பதாக உள்ளது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கும் தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கும்
எதிராக உள்ளது. ஏழை எளிய முதல் தலைமுறை மாணவர்களை புறக்கணிக்கிறது.
எனவே இந்த நீட் தேர்வு அடிப்படையில் கல்விக்கு, சமூக நீதிக்கு எதிரானது. எனவே நீட் தேர்வு முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும்.
*மருத்துவக் கல்வியில் பனமைத்துவம் கட்டாயமாக தேவை:*
நீட் தேர்வு அறிமுகத்திற்கு பின்பு தமிழ்நாட்டில் பல்வேறுபட்ட சமூக பின்னணி கொண்ட, வர்க்கப் பின்னணி கொண்ட ஏழை, எளிய மாணவர்களின் சேர்க்கை, பங்கேற்பு இளங்கலை முதுகலை மருத்துவப் படிப்புகளில் மிகவும் குறைந்து விட்டது. தமிழகத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி, தாய்மொழிக் கல்வியில் பயிலும் மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களும், மருத்துவப் படிப்பில் சேரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேராமல் தடுக்கும் ஆயுதமாகவே நீட் தேர்வு உள்ளது.
*தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ கட்டமைப்பை அழித்தொழிக்கும், நீட் வேண்டாம்!*
மருத்துவப் பணி மனிதர்களை மய்யப்படுத்தியது. எனவே அனைத்துத் தரப்பு மக்களின் பங்கேற்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே அந்தந்த தரப்பு மக்களுக்கு மருத்துவ சேவையை சரியாக கொண்டு சேர்க்க முடியும். சமூகத்தில் நிலவும் பன்மயம் மருத்துவக் கல்வியிலும் பிரதிபலிக்க வேண்டும்; இடம்பெற வேண்டும் . இதுவே சமூக நீதி. கிராமப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் போன்ற அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு இருந்த இத்தகைய நடைமுறை மருத்துவ கல்வியையும் மருத்துவப் பணியையும் சிறப்பாக செயல்பட உதவியது. தமிழ்நாட்டில் இன்று வரை நிலவும் சிறந்த மருத்துவ கட்டமைப்பை அழித்தொழிக்கும், நீட் தேர்வுமுறை வேண்டாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)