பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ஜவுளித் தொழில் கூட்டணியின் திட்ட வடிவமைப்பு பட்டறை.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டுதலில், அய்.நா பெண்கள் அமைப்பின் தமிழ்நாடு ஜவுளித் தொழில் கூட்டணி நடத்திய மே மாத இணைய வழி கூட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக 2024 ஆகஸ்டு 8 ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் ஜவுளித் தொழில் கூட்டணியின் திட்ட வடிவமைப்பு பட்டறை நடத்தப்பட்டது. அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏஐசிசிடியு சார்பாக தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கிருஷ்ணவேணியும், மாநிலக் கவுன்சில் உறுப்பினர் தோழர் சரவணனும் கலந்து கொண்டனர். தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள், குடிமைச் சமூகங்கள் மத்தியில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.
இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு பேசிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி திருமதி பிர்லா அவர்கள், மனித உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கட்டாய வேலை ஒழிப்பு போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி வேலை செய்யும் தங்கள் அமைப்பு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பாலியல் சிக்கல்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்கான அவசியம் கருதி இந்தப் பட்டறையில் கலந்துகொள்வதாகக் கூறினார். இந்தக் கொடுமைகளுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மை என்ற முழக்கத்தை முன் வைப்பதாகக் கூறினார்.
திட்ட வடிவமைப்பு பட்டறையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து விவாதித்தனர். தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ( சிஐடியு, ஐஎன்டியுசி,பிஎம்எஸ்) தங்கள் பகுதியில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக மொழியும், ஆண்களின் குடிப்பழக்கமும் உள்ளதாகத் தெரிவித்தனர். இன்று ஜவுளித் தொழிலில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் வட இந்திய மாநிலங்களில் இருந்து அழைத்துவரப்படுவதால் அவர்களோடு பேசுவதற்கு மொழி பெருந்தடையாக இருப்பதாகவும், ஆண் தொழிலாளர்களின் குடிப்பழக்கம் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஏஐசிசிடியு தரப்பில் கலந்துகொண்ட தோழர்கள் சூழலை விளக்கிப் பேசினர். முதலாவதாக வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் பெண் தொழிலாளர்கள் முதலாளிகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கூடாரங்களில் 24மணி நேரம் கண்காணிப்பில் தங்க வைக்கப்படுகின்றனர். தங்கள் கிராமங்களில் பசி, வறுமையாலும் மேல்சாதியினரின் பாலியல் வன்கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடியே இங்கு வருகின்றனர். இங்கு மேலதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. நிர்வாகத்தின் பயமுறுத்தல், மொழிப்பிரச்னை ஆகியவற்றால் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் வாழப் பழகுகின்றனர். நிர்வாகமோ அவர்களை எந்த வகையிலும் தொழிற்சங்கங்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றன. இப்படி ஜவுளித் தொழிலில் பணிபுரியும் பெரும்பான்மை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொழிற்சங்க தோழர்களின் ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து கீழ்க்கண்ட கோரிக்கைகள் செயல் திட்டமாக தோழர் கிருஷ்ணவேணியால் முன் வைக்கப்பட்டது.
1.ஜவுளித் தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அங்குள்ள ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும்.
2. தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கான கமிட்டிகளின் பிரதிநிதிகள் தொழிலாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. பெண் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் முகாம்களுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் செல்லவும், அவர்களோடு பேசவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
4. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை மற்றும் சீண்டல்கள் முற்றாக ஒழிக்கப்படவும் ஆண்களின் குடிப்பழக்கத்திற்கு எதிராகவும் ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்கள் நடத்தவும் உறுதிமொழி ஏற்கச் செய்யவும் வேண்டும்.
5. பெண் தொழிலாளர்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றி புகார் கொடுக்க முன்வரும்போது பெயர், ஊர் போன்ற அடையாளங்கள் கேட்கப்படக் கூடாது. புகார் பெட்டி அருகில் கண்காணிப்பு கேமரா இருக்கக் கூடாது.
மற்ற பிரதிநிதிகளும் அவர்களது முன்மொழிவுகளை முன் வைத்தனர். அனைவருமே தொழிலாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பேசினர். இந்தப் பட்டறையில் முன் வைக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்ற முழக்கத்தோடு சர்வதேச தொழிலாளர் அமைப்பும், அய்.நா.பெண்கள் அமைப்பும் உருவாக்கிய ஜவுளித் தொழில் கூட்டணியின் திட்ட வடிவமைப்பு பட்டறை முடிவுற்றது.
-கிருஷ்ணவேணி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)