மின் கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும்!
ஒன்றிய அரசின் உதய் மின் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்!
அ.சந்திரமோகன்
¶தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு :-
கடந்த ஜூலை 15 ல், தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. வீடுகளுக்கான மின் இணைப்பில் மின் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.60 ஆக பெறப்பட்டது, தற்போது ரூ. 4.80 ஆக உயர்த்தப்பட்டது; 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவர்களுக்கு ரூ. 6.45 ஆகவும், 501 - 600 யூனிட் வரை, ரூ. 8.15 ஆக பெறப்பட்டது 8.55 ஆகவும், 801-1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு, ஏற்கனவே ரூ.10.20 பெறப்பட்டது ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் ஏற்கனவே ரூ.11.25 பெறப்பட்டது ரூ.11.80 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஜூலை 1 தேதி முதல் இவை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மற்றொரு புறம், தொழிற்சாலைகளுக்கான நிலையானக் கட்டண உயர்வு ( Fixed Charge) கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு படிநிலைகளாக அதிகரித்தப் பின்னணியில், தற்போதைய இந்த மின் கட்டண உயர்வு, நிலையானக் கட்டண உயர்வு மேலும் அதிகரித்து சிறு, குறு தொழில்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
திமுக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தொடர் நிர்ப்பந்தங்கள் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 'மத்திய அரசின் நிதியைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்' என்ற மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்து இருக்கிறது. மேலும், தொடரும் மின்வாரிய நட்டத்தை குறைக்கவும், தனியார் மின்சாரத்தை வாங்குவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யவும் இத்தகைய கட்டண உயர்வு தவிர்க்க இயலாது எனவும் தெரிவித்தது.
அதானியிடம் இருந்து ரூ.6000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ. 300 கோடி ஊழல் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.400 கோடி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் தான் தமிழ்நாடு மின்வாரிய நட்டத்திற்கு காரணம் எனவும் மற்றொரு புறம் விவாதிக்கப் படுகிறது.
¶ உதய் மின் திட்டமும், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும்
மின்விநியோகம் மொத்தத்தையும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு கையளிக்க, மோடி அரசாங்கம் தான் உதய் UDAY [ Ujwal DISCOM Assurance Yojana ] திட்டத்தை கொண்டு வந்தது. மின்சாரத்தை #சந்தை விலையில் விற்பது இதன் அடிப்படை கொள்கை ஆகும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உதய் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய குழப்பமான அரசியல் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான அதிமுக ஆட்சியில் தான், 2017 ல் உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்து கொள்ள அதிமுக அரசாங்கம் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கையெழுத்திட்டார். அதற்குப் பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும் உதய் மின் திட்டத்தை எதிர்க்கவில்லை.
உதய் மின் திட்டத்தின் கீழ் உள்ள மாநில அரசுகள், அவ்வப்போது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கும் போதெல்லாம் மின்கட்டணத்தை திருத்த / உயர்த்த வேண்டும்.
உதய் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாள் மின் கட்டணம் கணக்கீடு செய்வதில் "பீக் அவர் ரேட்" என்ற அம்சமும் உள்ளது. உதாரணமாக, அதிக மின் நுகர்வு செய்யப்படும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் அவர் / Peak Hours என கணக்கிடப்படலாம்; கோடை காலத்தில் இந்த பீக் அவர் என்பது, மாலை 6 முதல் இரவு 2 மணி வரை கூட கணக்கிடப்படுகிறது. ஏற்கெனவே, மின் விநியோகம் ரிலையன்ஸ், டாடா போன்ற தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் வசமுள்ள சில மாநகரங்களில், பீக் அவர் ரேட் முறையில் மின் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தன்னிறைவு மின் உற்பத்தி இல்லாத மாநிலங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் செய்யும் பொழுது, அந்த நிறுவனங்கள், அன்றன்று நிலவும் மின்சார டிமாண்ட்டிற்கு ஏற்ப மின்சார விலையை உயர்த்தி விற்கின்றன. கார்ப்பரேட் மின்சார கம்பெனிகளின் கொள்ளை இலாபத்தை நுகர்வோர் தலையில் கட்டவே, 'மின்வாரிய நிதி சுமையை ஈடுகட்ட ' பீக் அவர் ரேட் என்ற பெயரால் வசூலிப்பது நியாயப்படுத்தப் படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் வைப்பது முழு நிறைவான பிறகு தமிழ்நாட்டிலும் கூட பீக் அவர் ரேட் அமலாக்கப்படலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மின்துறையை சூறையாட வழிவகுக்கும் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மின்வாரியம் இணைந்த பிறகு, மின் உற்பத்தி - விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல்பட இயலாத நிலை உருவாகிவிட்டது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதன் கிளையான மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போடும் உத்தரவுகளை அமலாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், தனியார் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதே மாநில மின்வாரியங்கள் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமைக்குள்ளாவதற்கு காரணம் ஆகும். உதாரணமாக, அரசு சார் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 3 ரூபாய் ஆகிறது என்றால், தனியார் முதலாளிகளிடம் ரூ. 5 ல் துவங்கி ரூ.12 வரை வாங்குகிறோம். அதேபோல, காற்றாலை, சூரிய ஒளி / சோலார் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.7 முதல் ரூ.12 வரை வாங்குகிறோம். இவற்றுக்கு தீர்வு காண, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளிடம் மாநில மின் தன்னிறைவு கொள்கை இல்லை.
¶மின் உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது:-
அனல் மின் உற்பத்தியில், தொடர்ச்சியாக கார்ப்பரேட் கம்பெனிகள் அதிகரித்து வருகிறார்கள். அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அனல் மின்சார உற்பத்தியில் பெரும் சக்திகளாக உருவாகியுள்ளன. நிலக்கரி சுரங்கங்கள் பலவும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டன. மின் உற்பத்தியில் தனியார் பங்கு உயர்ந்து செல்கிறது.
தற்போது, புதுப்பிக்கவல்ல மாற்று எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் இரண்டு துறையிலும் ஏகபோக சக்திகளாக கார்ப்பரேட் மின் நிறுவனங்கள் திகழ்கின்றன. பசுமை சக்தி என்ற பெயரில், இந்த "புதுப்பிக்கவல்ல மாற்று எரிசக்தி" நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மானியமாகவும், வரிச் சலுகைகளாகவும் அள்ளி இறைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில், சுமார் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள தனியார் காற்றாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அதானி சோலார் திட்டம் :
¶ ஏன் இந்த நிலை?
தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 35 % மட்டுமே அரசு சார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிறது. மீதியை தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. கார்ப்பரேட் வளர்ச்சி பாதையில் மோடி அரசாங்கம் வேகமாகப் பயணம் செய்வதால், மாநிலங்களில் மின் தன்னிறைவு கொள்கைகளை அமலாக்க இயலவில்லை.
1) உதய் மின் திட்டம், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இருந்து அரசு சார் நிறுவனங்களை அகற்றும் விதிமுறைகள் வைத்திருப்பதால், மாநில அரசுகள், புதியதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை. இதை மீறி, மாநில அரசுகள் மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்க விரும்பினால், தங்களுடைய சொந்த பொறுப்பில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி முதலீட்டை உருவாக்கி கொள்ள வேண்டும் ; அல்லது வெளிநாட்டு கடன் உதவிகளை பெற வேண்டும். மாநில அரசுகள் இத்தகைய நிதி கடன் சுமைகளை ஏற்க விரும்புவதில்லை.
2) தமிழ்நாட்டில் உள்ள மாற்று எரிசக்தி உற்பத்தியில், தமிழ்நாடு அரசு சார் நிறுவனங்கள் ஒன்றுகூட இல்லவே இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் செயல்படும் சுமார் 20,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் 2024 ம் ஆண்டுக்கு இலக்கு தீர்மானிக்கப்பட்ட தினசரி 20,000 மெகாவாட் சூரிய ஒளி / சோலார் மின்சார உற்பத்தி ஆகியவை எல்லாம் தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தியாக இருந்தால் மின் உற்பத்தி செலவு குறையும்.
சில நூறு கோடி ரூபாய் முதலீட்டின் அடிப்படையில் அமைக்க வாய்ப்புள்ள காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் அரசு மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், , குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்ய இயலும்; கட்டண உயர்வையும் தவிர்க்க இயலும். ஆனால், இவை குறித்து தமிழ்நாடு அரசாங்கம் கொள்கை முடிவுகள் எடுக்கவில்லை.
மாறாக, மாற்று எரிசக்தி உற்பத்தியில் தனியார் வளர்ச்சிக்கு பேராதரவு வழங்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின், டான்ஜெட்கோ TANGEDCO நிறுவனத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி - தெர்மல், தமிழ்நாடு மின் உற்பத்தி - கிரீன் எனர்ஜி மற்றும் தமிழ்நாடு மின் விநியோகம் என மூன்றாக பிரித்துள்ளது. கிரீன் எனர்ஜி துறைக்கு ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மானியங்கள் சிந்தாமல் சிதறாமல் கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு செல்வதை உறுதி செய்துள்ளது.
3) தமிழ்நாட்டின் நீர் மின் நிலையங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் காவிரி ஆற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை ஆகும். நீலகிரி மலையில் உருவாகும் மழைப்பொழிவும், கர்நாடகத்தில் இருந்து பாயும் காவிரி நீர் வரத்தும் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தண்ணீர் வரத்து தங்கு தடையின்றி இருப்பதால், இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட அணைகளின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின் நிலையங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க இயலவில்லை.
¶ மின்சார திருத்த மசோதா 2023 மற்றொரு பேராபத்து :- …
இந்தச் சட்ட மசோதா, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை மொத்தமாக தனியார்மயமாக்க, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதற்கு வழிவகுக்கிறது. உதய் மின் திட்டத்தின் கீழ் இருக்கும் போதே, இத்தகைய நிலை என்றால், 'மின்சார சட்டத் திருத்த மசோதா 2023' சட்டமாக்கப்பட்டால் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் நுகர்வோர் படுமோசமான நிலைக்குத் தள்ளப்படுவர்.
மின்சார திருத்த மசோதா 2023 ல், "மின் பகிர்மானம்/விநியோகம், மின் கட்டணம், மின் உற்பத்தி" ஆகியவற்றில், நாடு முழுவதும் ஒரே கொள்கை திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் உள்ள மின்சாரம் மத்திய பட்டியலின் பிடிக்குள் சென்றுவிடும் ; மின் கட்டணங்களை தீர்மானிப்பது முதல்- இலவச மின்சாரம் வழங்குவது வரையிலான மாநில அரசின் அதிகாரங்களுக்கு முடிவு கட்டப்படும். கார்ப்பரேட் மின்சார முதலாளிகளின் கொள்ளை கொடிகட்டிப் பறக்கும்.
¶ தீர்வு என்ன?
தமிழ்நாட்டில், நீர்மின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிந்தால், மாற்று எரிசக்தி மின் உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் துவக்கப்பட்டால், துவக்கியபிறகும் பல்லாண்டு காலமாக செயல்பாட்டுக்கு வராத சில அரசு சார் அனல் மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், தமிழ்நாடு தன்னிறைவு நோக்கி முன்னேற இயலும்.
மற்றொரு புறம், மாநில மின் வாரியத்தின் தன்னாட்சியை மீட்க, தமிழ்நாடு உதய் திட்டத்தில் இருந்து வெளியே வரவேண்டும் ; உதய் திட்டத்தை திரும்பப் பெற அனைத்து மாநில அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதோடு கூட, , மின்சார திருத்த மசோதா 2023 யை சட்டமாக்க மீண்டும் மோடி 3.0 அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)