விலையைக் குறை, வேலை கொடு; முடியாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேறு!
அவிகிதொச தில்லிப் பேரணி!
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக மோடி, இம்முறையும் கிராமப்புர தொழிலாளர், வறியவர்களை புறக்கணித்துள்ளது; கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இதை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை நாட்டுக்கு தெளிவாக தெரிவித்துவிட்டது. இந்த வறியவர் விரோத, கார்ப்பரேட் மோடி ஆட்சிக்கு இந்தியாவின் கிராமப்புர தொழிலாளர், வறியவர்களின் அரசியல் சக்தியை காட்டும் வகையில் வரும் நவம்பரில், விலையைக் குறை, வேலை கொடு; முடியாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேறு! என முழங்கி நாடாளுமன்றம் நோக்கி தொழிலாளர் பேரணி நடத்துவதென அவிகிதொச அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்டு 4,5 நாட்களில் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கூடிய அனைத்திந்திய விவசாய, கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்திருக்கிறது. பொதுக்குழு துவங்கும் முன் புவனேஸ்வர், நாகபூஷன் பவன் முன்புள்ள தோழர் நாகபூஷன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அவிகிதொச முன்னாள் அகில இந்திய தலைவர் மறைந்த தலைவர் கிதிஷ் பிஸ்வால் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, நக்சல்பாரி தலைவர்களுள் ஒருவரான சரோஜ் தத்தாவின் தியாகத்தை நினைவுகூர்ந்தது (ஆகஸ்ட் 5, சரோஜ் தத்தாவின் நினைவு நாள்).
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தல்கள் குறித்து விவாதித்த பொதுக்குழு பீகாரிலிருந்து வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகியுள்ள தோழர்கள் ராஜாராம் சிங், சுதாமாபிரசாத் இருவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டது. பீகார், ஜார்க்கண்ட் மற்றுமுள்ள சில மாநில மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட இகக(மாலெ) வேட்பாளர்களுக்கு பெரும் உற்சாகத்துடன் அணிதிரண்டு வாக்களித்த கிராமப்புர தொழிலாளர், வறியவர்களுக்கு பாராட்டுதல்களையும் பொதுக்குழு தெரிவித்தது.
தேர்தலுக்குப் பின் எழுந்துள்ள நாடுமுழுவதுமான நிலமைகள் குறித்து கூட்டம் விவாதித்தது. வறியவர் விரோத கார்ப்பரேட் நிதிநிலை அறிக்கையை நிராகரித்து, தொழிலாளர், வறியவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மை மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் நாடு தழுவிய கிளர்ச்சிகள், இயக்கங்கள் நடத்துவதென முடிவு செய்தது. ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்புவது, ஆகஸ்ட் 21 லிருந்து 23 வரை பீகாரில் மாபெரும் பரப்புரை இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதில் பீகார் அரசு, ஏழைக்குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்பது வலியுறுத்தப்பட உள்ளது. இந்த இயக்கத்தில் இணைந்து கொள்கிற வகையில் மாநிலங்கள் அங்குள்ள முக்கிய பிரச்சனைகளுடன் ஆகஸ்ட் 23 அன்று சாத்தியமான வடிவங்களில் இயக்கம் நடத்தவும் அழைப்பு விடுத்தது. செப்டம்பர் 15 அன்று பெண் தொழிலாளர் கோரிக்கைகள் மீது பெண் தொழிலாளரை ஊராட்சி அளவில் அணிதிரட்டுவது (தமிழ்நாட்டில் செப்டம்பர் 13), செப்டம்பர் 23 அன்று மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் அணிதிரட்டல் நடத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் மோடி ஆட்சியை எதிர்த்து, அக்டோபர் 1 (காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2) அன்று ஊராட்சி அலுவலகங்கள் முன் பெருந்திரள் அணிதிரட்டலை நடத்துவது, இவ்வாறு இந்த ஆண்டு இறுதிவரையிலும் பல வகைப்பட்ட பரப்புரை, கிளர்ச்சி தொடர் இயக்கங்களை நடத்துவதென்று முடிவு செய்தது. இயக்கத்தின் நிறைவாக, நவம்பரில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்துவதென்றும் பொதுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பரப்புரை இயக்கத்தில் விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளம் வழங்கு; புல்டோசர் ஆட்சியை நிறுத்து, வீடு பெறும் உரிமையை சட்டபூர்வமாக்கு, தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாளுக்கு ரூ 600 கூலி வழங்கு, வயதான தொழிலாளர், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ 5000 ஓய்வூதியம் பிற பொருத்தமான கோரிக்கைகளையும் வலியுறுத்த வேண்டும்; பிரபலப்படுத்திட வேண்டும். பல்லாயிரக்கணக்கில் பல லட்சங்களில் கிராமப்புர தொழிலாளர்களை, வறியவர்களை ஈர்க்கும் உண்மையான வெகுமக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். நாடாளுமன்றம் நோக்கிய “தொழிலாளர் பேரணியை” வெற்றிகரமாக்கிட வேண்டுமென பொதுக்குழு அழைப்பு விடுத்தது.
இந்த நான்கு மாதகால இயக்கம் வாயிலாகவும் அதை தொடர்ந்த நடவடிக்கைகள் வாயிலாகவும் அடுத்து வரவுள்ள 8வது தேசிய மாநாட்டுக்குள் புதிதாக 300 மாவட்டங்கள், 3000 ஒன்றியங்கள், 5000 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அமைப்பையும் இயக்கத்தையும் விரிவுபடுத்துவதென்று திட்டமிட்டது. அவிகிதொசவின் அடித்தளம், ஊராட்சி, ஒன்றிய அமைப்புகளாகும். எனவே இந்த அடித்தளத்தை வலுப்படுத்திட தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாவட்ட, மாநில மாநாடுகள் மூலம் உறுதிசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. பெண் செயல்வீரர்கள், தலைவர்களை வளர்க்கவும் இளைஞர்களை அமைப்புக்குள் பெரிய எண்ணிக்கையில் கொண்டு வரவும் சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டுமெனவும் பொதுக்குழு அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தியது.
உள்ஒதுக்கீடு பற்றி அவிகிதொச
தலித் மக்களது உள்ஒதுக்கீடு பிரச்சனையில் மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்களை முன்னேற்றுகிற வகையில், அந்தப் பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இதை உறுதியாக செயல்படுத்துவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பதையும் பொதுக்குழு வலியுறுத்தியது. அதேசமயம் இதை பயன்படுத்திக் கொண்டு, பாஜக அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று பொதுக்குழு எச்சரித்தது. முதல் தலைமுறை அல்லது ஒரு முறை மட்டும் இட ஒதுக்கீடு எனும் ‘வசதிபடைத்தப் பிரிவினர்’ அணுகுமுறையை பொதுக்குழு நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியது.
பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து என். குணசேகரன், ஈஸ்வரி, வீ மூ.வளத்தான், மாசிலாமணி, சி.ராஜசங்கர், பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)