வேளாண் பாதுகாப்புமண்டலத்தில் வேண்டுமா சூரிய ஒளி மின்னுற்பத்தி?
சூரிய ஒளி மின்னுற்பத்தியில் இந்திய அளவில் 4 வது இடத்தில் உள்ள தமிழ்நாடு, 2030 க்குள் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ 70,000 கோடி முதலீடும் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பும் தேவைப்படும். இராமநாதபுரம், கமுதியில் அதானி குழுமம் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ 4,500 கோடி முதலீட்டில் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதை அடுத்து, இது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.என்எல்சி போன்ற நவரத்னா நிலையங்களும் வணிக ரீதியாக சூரிய ஒளி மின்னுற்பத்தியில் இறங்கியுள்ளன.
ஆனால்,பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மீதும், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியும் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு திட்டங்களும் வரவுள்ளன.
கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள கோமாபுரம் ஊராட்சி, சமுத்திரப்பட்டி சிற்றூரில், கேவி டெக் நிறுவனம் 20 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய திட்டமிட்டு வேலைகளை தொடங்கியுள்ளது. ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய ரூ 5 -7 கோடி முதலீடு தேவைப்படும் என்ற வகையில் இது ரூ 100-140 கோடி கொண்ட திட்டமாகும். ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 5-7 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும். இந்த திட்டத்துக்கு 100 - 140 ஏக்கர் போதுமென்றாலும் 300 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் விவசாய நிலங்கள் மட்டுமின்றி ஓடை, வாய்க்கால் உள்ளிட்ட பொது நீர்நிலைகள் அபகரிக்கப்படுகின்றன. ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படுகிறது.
விவசாயம், ஆடு, மாடு, மக்கள் புழக்கம், நீர் ஆதாரம் ஆகியவற்றை இந்த திட்டம் பாதிக்கும்.
ஊர் மக்களது கருத்துகளை கேட்காமலும் மக்களது எதிர்ப்பை பொருட்படுத்தாமலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊர்மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். ஆனாலும், ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் தொடர்ந்து இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். திட்டத்துக்கு பாதுகாப்புக் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போட்டுள்ளார். திட்டத்தை எதிர்க்கும் மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பும் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் வீமூ வளத்தான் மீது திமுக ஒன்றிய செயலாளர் காவல்நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி போராட்டத்துக்கு தடைவிதிக்கும் அதிகாரிகள், இந்த திட்டத்துக்காக நீர்நிலைகளை ஆக்கிரமிக்க தடைவிதித்துள்ள உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், நெப்பத்தூர் ஊராட்சியில் 110 ஏக்கர்களில் 20 மெகாவாட் சூரிய ஒளி உற்பத்திக்கான வேலை தொடங்கியுள்ளனர். இதை எதிர்த்து கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தநிலையில், ஜூன்மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையில் நெப்பத்தூர் ஊர்பிரதிநிதிகள் அவிகிதொச மாநிலப்பொதுச்செயலாளர் என்.குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஊராட்சித்தலைவர் ராஜ்குமார் தலைமையில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறினர். வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டத்துக்கு எதிரானது என்பதையும் வலியுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளார்.
அதேபோல, பெருந்தோட்டம் ஊராட்சியில் 1000 ஏக்கர் விவசாய நிலத்தில் 110 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடுகின்றனர். முதலில் இந்த நிலத்தில் சிந்தியா நிறுவனம் அனல் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது. மக்களது போராட்டத்தாலும் மக்களுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பாலும் அந்த நிறுவனம் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. அந்த நிலத்தில்,வோல்டாஸ் பாரத் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது. அந்த நிலத்தை விவசாயிகளுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று அவிகிதொச தலைமையில் ஊர்மக்கள் போராடி வருகின்றனர். ஜூலை 20 அன்று நடந்த உண்ணாநிலை போராட்டத்தில் 500 க்கு மேற்பட்ட ஊர்மக்கள் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாநிலச் செயலாளர், பெண்கள் கழக மாநிலக் குழு உறுப்பினர் மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சூரிய ஒளி மின் உற்பத்தி, விவசாயம் நடக்காத, மக்கள் வசிப்பிடங்கள் இல்லாத தொலைதூர மலை அடிவாரங்கள் பரந்து விரிந்துள்ள தரிசு நிலங்கள்,பாலைவனப் பகுதிகளில்தான் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகநாடுகளில் இவ்வாறுதான் நடக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு மிகக் குறைவானது என்ற பேரால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை போன்ற விவசாய மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கும் மக்கள்வாழும் பகுதிகளுக்கும் தீங்கு ஏற்படுத்தும் செயலில் அரசாங்கம் ஈடுபடக் கூடாது. இது தொடர்பாக திமுக அரசு தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். இந்த திட்டங்களை செயல்படுத்தும் பெரும் தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர்களை ஏஜண்டுகளாக பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இறால் பண்ணைகளுக்கு, மீதேன் திட்டங்களுக்கு நிலம் பறிக்க, மக்கள் எதிர்ப்பை பிளவுபடுத்த இது போன்ற முறையை ஆண்டகட்சிகள் பயன்படுத்தின. விவசாய நிலங்களிலிருந்தும் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற திட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும். மின்சாரம் எந்த அளவுக்கு தேவையோ அந்தளவுக்கு விவசாயமும் பாதுகாப்பான மக்கள் வாழிடமும் தேவை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இதுபோன்ற நிலத்தை விழுங்கும் சூரிய ஒளி திட்டங்கள் வேண்டுமா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மாறாக விவசாயத்துக்கு தனிநிதிநிலை அறிக்கை வாசிக்கும் மாநில அரசு விவசாயத்தை பாதுகாக்க, புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவதன் மூலம் விவசாயத்தை பாதுகாக்க முடியும். இதுபோன்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அவற்றுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். விவசாயத்துக்கு எதிரான சூரிய ஒளி மின்திட்டம் போன்றவற்றுக்கு செவிசாய்க்க கூடாது. அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கமும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையும் இந்த பிரச்சனையை விவசாய சமூகத்திடமும் அரசிடமும் தொடர்ந்து கொண்டு செல்லும்.
-என்.குணசேகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)