ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் - யுடியுசியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் ஏஐசிசிடியுவின் வாழ்த்துரை.
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் -யுடியுசி தனது 10ஆவது அகில இந்திய மாநாட்டை சேலம் மாநகரில் செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடத்தியது. தோழர் ஹித்திஷ் கோஸ்வாமி நினைவரங்கத்தில் (சேலம் மாநகராட்சி பல்நோக்கு அரங்கம்) நடைபெற்ற மாநாட்டு துவக்க அமர்வில் ஏஐசிசிடியு சார்பில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆர்எஸ்பி கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மனோஜ் பட்டாச்சார்யா தொடக்க உரையாற்றினார். தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, ஹச்எம்எஸ், ஏஐயூடியூசி ஆகிய மைய சங்கத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றினார்கள். யுடியுசி பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், தோழர். பிரேமச்சந்திரன் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டு மலரை ஆர் எஸ் பி யின் முன்னாள் தலைவர் தோழர்.பாபு திவாகரன் வெளியிட்டார். முன்னதாக ஏ ஐ சி சி டி யு சார்பில் மாநாட்டு மலருக்கான வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. மாநாட்டில் ஏ ஐ சி சி டி யு தோழர்கள் பால்ராஜ், முருகன், கோவிந்தராஜ், வேல்முருகன், நடராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தோழர் சங்கர பாண்டியன், சேலம் சிறை தியாகிகளை நினைவு கூர்ந்து துவங்கிய தனது வாழ்த்துரையில்,
தேசிய ஜனநாயக கூட்டணியின் மோடி 3.0 ஆட்சி பலம் இழந்திருந்தாலும் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமலாக்குவதில் அதே மும்முரம் காட்டி வருகிறது. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், கடும் விலைவாசி உயர்வு பற்றி மோடியின் சுதந்திர தின உரையில் எதுவும் இல்லை. மாறாக, மதவாத “பொது சிவில் சட்டம்”, கூட்டாட்சிக்கு எதிரான “ஒரு தேசம்; ஒரு தேர்தல்” ஆகியவையே இடம்பெற்றிருந்தன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த பட்ஜெட்டிலும் மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் எதுவும் இடம்பெறவில்லை. அதுபோல், விவசாயிகளின் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி, தேசத்தின் சொத்துக்களை கையளிப்பது ஆகியவையே இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள மின்சார திருத்த சட்டம் மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதையும் இலவச மின்சாரத்தை, மின்சார மானியத்தை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது. மின்வாரிய ஊழியர்கள், விவசாயிகள், சிறு, நடுத்தர தொழில் முனைவோர், பொதுமக்கள் இணைந்து அதை முறியடிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் UPS ஒரு ஏமாற்றுத் திட்டமே. பழைய ஓய்வூதியத் திட்டம் OPS ஐ மீண்டும் கொண்டுவரும் வரை மத்திய, மாநில அரசு ஊழியர்களின் போராட்டம் ஓயாது.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிரான, தொழிற்சங்க உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் விதத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது. இந்திய தொழிற்சங்க இயக்கம் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்த கடமைப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கௌரவமான ஊதியம், கண்ணியமான பணி நிலைமைகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றோடு ஏகாதிபத்திய போர் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மதசார்பின்மைக்காகவும், அமைதிக்காகவும் ஏஐசிசிடியு, யுடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களோடு இணைந்தும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.
யுடியுசியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். சேக்கிழார் நன்றி கூறினார்.