அடுத்து வரும் தேர்தல்வரை இந்தியா கூட்டணி தாக்குப்பிடிக்கும் என்றுநினைக்கிறீர்களா…?
(சிபிஐ எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புப் பேட்டி பிடிஐ யின் 4 ‘நாடாளுமன்றத் தெரு’ சேனலில் வெளிவந்தது)
(ஆங்கிலத்தில் பேட்டி: https://youtu.be/lLnosZxjpXw)
தமிழாக்கம்: சி. மதிவாணன்
பகுதி -3 சென்ற இதழ் தொடர்ச்சி…
பேட்டியாளர்:
இடதுசாரி கட்சிகள் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதைஇன்று காண்கிறோம். மாணவர் சங்கங்களும் கூட ஒன்று சேர்ந்து நிற்கின்றன. அப்படியிருக்கும்போதுஇடது கட்சிகள் தனித்தனி அடையாளங்களை வைத்துக்கொள்வது எதற்காக? வரும் காலத்தில்இடது கட்சிகள் ஒரே கட்சியாக இணைந்து விடும் என்று எதிர்பார்க்கலாமா?
திபங்கர்:
அதற்கான வாய்ப்பில்லை என்று சொல்ல மாட்டேன். உடனடி வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. 1964 வரை இந்தியாவில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்தது. அது வரலாறு. வேறுபாடுகள் எழுந்தன. அந்த வேறுபாடுகளின் காரணமாக வெவ்வேறு கட்சிகள் ஏற்பட்டன. எதிர்காலத்தில் ஒன்றிணைவது நடக்கலாம். வலுவான இடது அமைப்பு வருங்கால இந்தியாவிற்குத் தேவையானதாக இருக்கிறது. வெவ்வேறு இடது அரசியல் கட்சிகள் இருப்பதால் வெகுமக்கள் அமைப்புகளின் எண்ணிக்கையும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிட்டன. கட்சிகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாக வர்க்க- வெகுமக்கள் அமைப்புகளின் எண்ணிக்கை அதிகமானது. அடிப்படையில் அரசியல், கருத்தியல் வேறுபாடுகளால்தான் இவ்வாறு ஆனது. அவை மிகப்பெரிய வேறுபாடுகளாக இல்லாமல் இருக்கலாம், இருந்தாலும் வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பேசித் தீர்க்கும் வரை முழுமையான ஒன்றுபடுதல் அல்லது இணைவதை எதிர்பார்க்க முடியாது.
சிபிஐ மாவோயிஸ்ட் போன்ற கட்சிகளைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்களைப்பிரதான அரசியல் நீரோட்டத்திற்குஅழைத்து வந்து தேர்தலில் பங்கெடுக்கச் செய்யவும், வன்முறையைகைவிட செய்யவும் ஏதேனும் முயற்சிகள் இருக்கின்றனவா?
அவர்கள், அவர்களுக்கே உரிய வழிமுறைகளின்படி தாங்கள் பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த கட்சி என்று கருதுகிறார்கள். எது பிரதான நீரோட்டம், எது பிரதான நீரோட்டம் இல்லை என்று நாம் வரையறை செய்ய முடியாது. யதார்த்தத்தில் மக்களும் கட்சிகளும் தங்கள் சொந்த அனுபவங்களின் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, அவர்கள் தங்களின் சொந்த அனுபவங்கள் மூலம் கற்றுக் கொள்வார்கள். அவர்கள் தங்களின் சொந்த வேலைத்திட்டத்தை, போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பிற வழிகளை முயற்சித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று நான் உணர்கிறேன். நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும் (வேறுவழியில்லை).
உதாரணமாக நேபாளத்தைச் சொல்லலாம். அங்கே ஒரு மாவோயிஸ்ட் கட்சி இருந்தது. பற்பல ஆண்டுகளாக அவர்கள், நாடாளுமன்ற அரசியலில் பங்கெடுக்காமல் இருந்தார்கள். ஆனால், நேபாளத்தில் நிலைமைகள் மாறியதற்கு ஏற்ப அவர்களின் அனுபவத்திற்கேற்ப அவர்கள் வேறு ஒன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள். எனவே, இங்கேயும் கூட நாம் அவர்களுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் அனுபவங்களை அவர்கள் மதிப்பீடு செய்வதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்ல மாட்டீர்கள்?
இல்லை. அது நமது வேலை இல்லை. ஆலோசனை வழங்கப்படுவதை எந்த ஒருவரும் வெறுப்பார். எனவே, யாரும் கேட்காதிருக்கும்போது அறிவுரை கூறுவது நமது வேலையில்லை.
இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறாததற்கான காரணம் என்ன? அடுத்த தேர்தல்வரை இந்த கூட்டணி நீடிக்குமா? அடுத்த ஆண்டுவரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை, தாக்குப் பிடிக்குமா?
உங்களுக்கு ஏன் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று நீங்கள் கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆட்களுக்கு 100 இடம் கிடைப்பதே போதுமானது என்று சிலர் நினைத்திருந்திருப்பார்கள் (சிரிக்கிறார்). கவனியுங்கள் 30 அல்லது 40 இடங்களில் வாக்கு வித்தியாசம் மிக அற்பம் என்ற அளவுக்கு குறைவாக இருந்தது. 32 அல்லது 35 இடங்களில் வாக்கு வித்தியாசம் 40,000க்கும் குறைவாக இருந்தது. அல்லது இதில் தப்பாட்டம் ஏதும் இல்லை என்று நான் ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. இதில் அநியாயம் எதுவும் நடக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
நான் இப்படி சொல்லிவிட்டபோதும் கூட, சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும். அவற்றுள் ஒன்று பீகார். நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டது போல பீகாரில் செயல்பட்டிருந்தால் விஷயம் மாறிப்போயிருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தையும்கூட குறிப்பிடலாம். அங்கேயும் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வாக்குகள் வாங்கியிருக்கலாம். நாங்கள் தோல்வியடைந்த முக்கியமானவற்றுள் மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணியாகப் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. விளைவாக நாம் விரும்பிய திசையில் தேர்தல் முடிவுகள் வரவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் நல்ல வேகத்துடன் நாங்கள் புறப்பட்டோம். ஆனால், வேகத்தைத் தக்க வைக்க முடியவில்லை. வேகத்தை இழந்தது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை சரிசெய்து கொள்ளவும் முடியவில்லை. இடங்களைப் பங்கிட்டுக்கொள்வதில் நாங்கள் நிறைய நேரத்தைச் செலவு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். அதனால், போராட்டங்களைக் கட்டமைக்கும் பாதையில் முன்னேறிச் சென்று மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.
மக்கள் உண்மையில் என்ன எதிர்பார்த்திருந்தார்கள்? உதாரணமாக, வெற்றி பெற்ற இடங்களை ஆராய்ந்து பார்த்தால், நான் அதனை இந்தியா கூட்டணியின் அரசியல் பலத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்க்க மாட்டேன். அது அப்படி இருக்கவில்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் இந்தியா (கூட்டணி) மட்டும் களத்தில் நிற்கவில்லை. அதனுடன் பலரும் சேர்ந்து களத்தில் நின்றனர். தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களைப் பாருங்கள். விவசாயிகளின் இயக்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் போராட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிவில் உரிமை போராட்டங்கள் நடைபெற்றன. இந்த அனைத்துப் போராட்டங்களின் பலமும் இந்தியா கூட்டணியின் பலத்துக்கு வலு சேர்த்தன. டிஜிட்டல் ஊடகங்களையும் சொல்ல வேண்டும். நான் அவர்களை சுதந்திரத்திற்கான டிஜிட்டல் போராளிகள் என்று குறிப்பிட்டு வருகிறேன். இவை அனைத்தும் சேர்ந்துதான் இந்த வெற்றி சாத்தியமானது. தேர்தல் ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. ஆனால், இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கு இடையில் இன்னமும் கொஞ்சம் அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. ஒருவேளை இன்னமும் கூடுதலான இயற்கையான ஒத்திசைந்த கூட்டு நடவடிக்கைகள் இருந்திருக்கும் என்றால், புரிதல் இருந்திருக்கும் என்றால், அனேகமாக தேர்தல் முடிவுகள் இன்னமும் சிறப்பானதாக இருந்திருக்கும். இருந்தாலும் இதுவரை வென்றிருப்பது கூட நல்லதுதான்.
அதாவது, பாஜக கடுமையான அடி வாங்கியிருக்கிறது. அது நல்லது. அது மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அது ஏதோ ஓரஞ்சாரமானது அல்ல. அந்தக் கட்சியின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களின் மீது அடி விழுந்து, பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு அம்சம் இந்துத்துவா ஆகும்; மற்றொரு அம்சம் மோடி வழிபாடு என்ற வணிக முத்திரையாகும். இந்த இரண்டு அம்சங்களும் நடந்து முடிந்த தேர்தலில் மிகக் கடுமையாக அடி வாங்கியுள்ளன. நாம் இதனை அடிப்படையாகக் கொண்டு துவங்க வேண்டும். இந்தியா கூட்டணி என்பது காலத்தின் தேவையினால் உருவானது. எனவே, இந்தியா கூட்டணியிடமிருந்து இன்னமும் கூடுதலாக தற்போதைய சூழல் எதிர்நோக்குகிறது. இன்னமும் கூடுதலான அய்க்கியத்தை எதிர்பார்க்கிறது. இந்தியா கூட்டணி மேலும் உறுதிப்படுவதை எதிர் பார்க்கிறது. இந்தியா கூட்டணி மேலும் சிதைவதை எதிர் நோக்கவில்லை. எனவே, நாம் சூழலுக்கு ஏற்ப பணியாற்றுகிறோம் என்றால், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு நிற்காதிருப்பதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை.
ஆனால், மாநில அரசியல் மாறுபட்டது. உதாரணமாக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கத்தைச் சொல்லலாம். அங்கெல்லாம் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏற்படவில்லை. டெல்லியில் கூட்டணி அமைப்பது மிக மிக சிரமங்கள் நிறைந்த ஒன்றாக இருந்து வருகிறது. எப்படி இந்த வேறுபாடுகளைக் கடந்து வரப்போகிறோம்? அல்லது, இந்த வேறுபாடுகளுக்கு இடையில் எப்படி பயணப்படப் போகிறோம்? எப்படி எங்களின் ஒற்றுமையைத் தக்கவைத்துக்கொள்ளப் போகிறோம்[1] ? என்பது எங்களுக்கு முன்புள்ள மிகப் பெரிய சவாலாகும்.
இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறாததற்கான காரணம் என்ன?...என்ற கேள்வி-பதில் வரை இந்த இதழில் வெளியிடலாம். 747 சொற்கள்.
அடுத்த இதழில் நிநிஷ் குமாரை வெளியே செல்லவிட்டது தவறு என்று நினைக்கிறீர்களா என்ற கேள்வியிலிருந்து.... சுருக்கமாக வெளியிடலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)