இந்திய மக்களாகிய நாம்:

‘75 ஆண்டுகால சுதந்திரம்

மக்கள் பரப்புரை இயக்கம்

இந்திய விடுதலைப் போராட்டம், உலக வரலாற்றில் நடந்த  மிகப்பெரிய, முக்கியமான போராட்டங்களுள் ஒன்றாகும். அது பல முக்கிய மாற்றங்களையும் கொண்டுவந்ததுகாலனிய ஒடுக்குமுறை அமைப்பிற்கு எதிராக சமூகத்தின் பல்வேறு மக்கள் பிரிவினராலும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் 200 ஆண்டுகளாக நீடித்தது. அது ஒரு புதிய, நவீன இந்தியாவைக் கட்டமைக்கும் கனவை மையமாகக் கொண்டி ருந்தது. 1857, முதல் சுதந்திரப் போருக்கும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இயக்கங்களில் கோடிக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். லட்சக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக் கானவர்கள் தியாகிகளானார்கள். ஆனாலும் மக்கள் தொடர்ந்து போராடினார்கள்; நமது வரலாற்றில் இது ஒரு பொற்காலம்.

சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பல்வேறு போக்குகள் செயலூக்கத்துடன் இருந்தன. மகாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ், மைய நீரோட்ட தேசியவாதத்தின் பிரதிநிதியாக எழுந்திருந்தது; வேறுபல வலுவான குரல்களும் இருந்தன. விவசாயிகள், தொழிலாளர் இயக்கங்கள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள், அனைத்து முனைகளிலும் பெண்கள், சிறுபான்மையினரின் இணையான பங்களிப்பு, தலித் சமூகத்தின் விழிப்புணர்வு, பழங்குடி மக்களின் இடைவிடாத போராட்டம் உள்ளிட்ட இந்த அனைத்துப் போக்குகளும் காலனிய ஒடுக்குமுறையிலிருந்தும் அத்துடன் சமூக அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை வேண்டி நின்றன. இந்திய சமூகத்தில் ஆழமானதொரு உள்வயப்பட்ட பதற்றம் இருந்தது. மேலும், சுதந்திரத்தின் குறிக்கோள் பற்றிய வேறுபாடுகளும் கருத்து மாறுபாடுகளும் இருந்தன. இருந்த போதும், 1947ல் நாடு சுதந்திரம் அடைந்தபோது ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஜனநாயக விழுமியங்களே அதன் அடித்தளம் என அறிவித்துக் கொண்டது. பிரிவினை வலியுடன்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் நமது பன்மைக் கலாச்சாரத்தின் வேர்கள், சுதந்திரப் போராட்டத்தில் மிக ஆழமாக வேரூன்றி நின்ற காரணத்தால் சுதந்திர இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற தேசம் என அறிவித்துக் கொண்டது.

நாட்டினுடைய சமூக- பொருளாதாரப் பரப்பில் ஒரு தீவிர மாற்றம் அன்றைய காலத்தின் தேவையாக இருந்தது. பகத்சிங், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இருந்தனர்; விடுதலைப் போராட்ட காலத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்களும்  முன்வந்திருந்தன; ஆனபோதும் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பல விளிம்புநிலை பிரிவினர் மீதான, சமூக- பொருளாதார ஒடுக்குமுறைகளும் தொடர்ந்தன. விவசாயிகளுக்கு நில உரிமை தருவது, தொழிலாளர்களுக்கு ஒரு கவுரவமான வாழ்வைக் கொடுப்பது  அப்போதைய கடமைகளாக இருந்தன; அவை இப்போதும் கூட செய்தாக வேண்டிய பணிகளாகவே உள்ளன.

இந்திய தேசியவாதத்தின் எழுச்சியுடன் கூடவே எழுந்த வகுப்புவாத சக்திகளின் எழுச்சி, தேசிய இயக்கத்தின் மிகவும் பலவீனமான கண்ணியாகும். இந்த நாட்டை ஆள்வதற்கு, இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரித்தாளும் அரசியலை பின்பற்ற வேண்டுமென, 1857&ன் சுதந்திரப் போரிலிருந்து பிரிட்டிஷார் கற்றுக் கொண்டனர். வரலாறு காணாத, 1857&ன் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, கிட்டத்தட்ட பிரிட்டிஷாரை இந்த நாட்டிலிருந்தே தூக்கி எறியும் நிலைக்கு கொண்டு சென்றது. 1888&ல் வைஸ்ராய் டஃப்ரின், முஸ்லிம்களை பிளவுபடுத்தும் நோக்குடன், 5 கோடி முஸ்லிம்களை பின்தங்கிய சமூகமென அவர் கருதுவதாகச் சொன்னார். 1870க்கு பிறகு, இந்து மீட்புவாதிகளான சாவர்க்கர், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் போன்றவை இரண்டு தேசம் எனும் கருத்தைச் சுற்றி தங்களது அரசியல் விளையாட்டை ஆடின. இவர்கள் சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகியிருந்தனர்; அவர்களுடைய தலைவர்கள் பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கடிதங்களையும் எழுதினர். அதற்கான சான்று இப்போதும் இருக்கிறது. ஆனாலும் சுதந்திரப் போராட்ட இயக்கம் மிக உறுதியாக இருந்தது. இந்தப் பிரிவினைவாத சக்திகள், தங்களுக்கென ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தை, ஒருபோதும் பெற முடியவில்லை.

ஆனால், நாடு இன்று, சுதந்திரத்தின் 75வது ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது, வகுப்புவாதக் கருத்தியல் அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பது, ஒரு (வரலாற்று) நகைமுரணாகும். மேலும், அவர்கள் தமக்கி ருக்கும் அதிகாரத்தைக் கொண்டு விடுதலை இயக்கத்தின் முகத்தை, மாற்ற விரும்புகிறார்கள். வரலாற்றை எழுதுவதற்கான ஒப்புக்கொள்ளப் பட்ட அனைத்து தர அளவுகோலும் வெளிப்ப டையாகவே மீறப்படுகின்றன; விவரங்கள் திரிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் சுதந்திர போராட்ட இயக்கத்தின், கனவுகள், விழுமி யங்கள் மீண்டும் நிறுவப் படுவதே சுதந்திரத்தின் 75வது ஆண்டுக்கான உண்மைக் கொண்டாட்ட மாக இருக்க முடியும். இந்த திசையிலான ஒரு முன்முயற்சியை இகக(மாலெ) மேற்கொள்ள இருக்கிறது. வரும் இரண்டு ஆண்டுகளுக்கு, 'சுதந்திரத்தின் 75 ஆண்டுகள்' எனும் மக்கள் பரப்புரை இயக்கம் துவக்கப்படுகிறது. இந்த இயக்கத்தில், வெகு மக்கள், வரலாற்று அறிஞர் கள், அறிவாளிகள், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் பங்கு பெறுவார்கள். இந்த இயக்கத்தின் மூலம், ஆளும் ஏகாதிபத்திய ஆதரவு- கார்ப்பரேட்- வகுப்புவாத பாசிச சக்திகள், நாட்டின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஊடுருவுகிற, அதனைச் சிதைக்கிற, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் பெயரால் வகுப்புவாத விஷம் கொண்டு மக்கள் மனதில் நஞ்சூட்டுகிற சதிகளுக்கு நாம் சவால் விடவும் முடியும்.

தியாகி பகத்சிங், அம்பேத்கர், பெரியார், ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, பாத்திமா சேக் இன்னும் பலரின் சமூக நீதிக் கருத்துக்கள் நமக்கு மிகமிக முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். இந்த தேசிய இயக்கத்தில், தொழிலாளர் வர்க்கம், விவசாய சமூகம், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோரும் மிக முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

விடுதலை இயக்கம் தொடர்பான செய்தி களை மக்களிடமிருந்தும் ஆவணக் காப்பகம், வாய்வழி வரலாறு வேறுபல ஆதாரங்களி லிருந்தும் திரட்டி, அவையெல்லாம் ஆவணமாக் கப்படும். சிறு வெளியீடுகள், துண்டறிக்கைகள், படக்கண்காட்சிகள், கவிதை வாசித்தல், திரைப்படக் கண்காட்சிகள், சுதந்திரப் போராட்ட இயக்கப் பாடல்களின் ஒலிப் பேழைகள் தயாரிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நினைவிடங்கள், பூங்காக்களை ஏற்படுத்துவது இதைப் போன்று இன்னும் சில வடிவங்களிலும் இந்தப் பிரச்சார இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.

பாட்னாவிலுள்ள பாரதிய நிருத்திய கலா மந்திரில் ஒரு கருத்தரங்குடனும்  பதுகேஷ்வர் தத் அவர்களது பிறந்த நாளில், பாட்னாவிலுள்ள ஜக்கன்பூரில், நவம்பர் 18 அன்று, ஒரு நினைவுக் கூட்டத்துடனும் இந்தப் பரப்புரை இயக்கம் துவக்கப்படும்.