குடிசைவாழ் மக்கள் மறு குடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை - வரமா சாபமா?
தமிழ்நாடு குடிசைவாழ் மக்கள் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு கொள்கை ஒன்றை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆசிய வங்கி நிதியுதவி பெற்று இத் திட்டம் அமலாக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
'நீர்நிலைகள் உட்பட ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடிசையில் வாழும் மக்களை நியாயமான முறையிலும் மனித தன்மையுடனும் மறுகுடியமர்வு செய்வதற்கான கொள்கை இது' என முன்னுரையில் கூறுகிறது.
சிங்காரச் சென்னை துவங்கி, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரங்கள் வரையிலான திட்டங்களில், குடிசைவாழ் மக்கள் கொத்துக் கொத்தாக தூக்கி எறியப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வரலாற்றுப் பதிவுகள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன.
திமுக அரசின் கொள்கை அறிக்கை நம்பிக்கை அளிக்கிறதா?
மென்மையான, நியாயமான, மனித தன்மை யுடன் கூடிய மறு குடியமர்வை ஏற்படுத்தித் தருவது என நகல் ஆவணம் பிரகடனம் செய்தாலும் தமிழ்நாட்டுக்கான வரைவு கொள்கை ஆவணம், எழுத்தறிவு குறைந்த ஏழை குடிசைவாழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கொள்கை ஆவணம், ஆனாலும், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட் டுள்ளது. வரைவு கொள்கையை முதலில் தமிழில் அல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்
ஆங்கிலத்தில் வெளியிட்டு 15 நாட்களில் வரைவு கொள்கை மீதான கருத்துக்களை கோரியுள்ளது நியாயமானது அல்ல! தமிழில் வெளியிட்டு, பொதுவாக சட்டவரைவு நெறிமுறைகள்படி கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.
எந்தவொரு கொள்கையும் அதற்கு சம்பந்தப்பட்ட stakeholders உடன், அதாவது ஆட்சபணைக்குரிய பகுதிகள் எனப்படும் குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களிடம் முதலில் கருத்துக்களை கேட்க வேண்டும். குறிப்பாக, குடிசைவாழ் மக்களிடம் பொது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
நகல் ஆவண வரையறைப்படி, பட்டா இல்லாத வர்கள் 'ஆக்கிரமிப்பாளர்கள்' எனக் கருதப்படுவர் என்ற விளக்கம், குடிசை வாழ் மக்கள் மனிதத் தன்மையுடன் அணுகப்படுவார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
பட்டா இல்லை எனினும், ஓரிடத்தில் மின் இணைப்பு பெற்றுக் கொண்டு, வரி கட்டி தலைமுறை தலைமுறையாக இலட்சக் கணக்கான குடிசைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். தங்களுடைய இடங்களுக்கு பட்டா கோரி தொடர் முறையீடுகள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களை 'ஆக்கிரமிப் பாளர்கள்' என வரையறை செய்வது எப்படி சரியானதாகும்? இத்தகைய வரையறை அவர்களது மறுகுடி யமர்வு மற்றும் புனர்வாழ்வுக்கான தார்மீக உரிமையை பறித்து விடாதா?
மறுகுடியமர்வு முன் நடவடிக்கைகள், மறுகுடியமர்வு, புனர்வாழ்வு என மூன்று கட்டமாக திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. 'குறிப்பிட்டதொரு பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதியில், மறுகுடியமர்வு திட்டம் அறிவித்த 15 நாட்கள் கழித்தே, பொதுமக்களிடம் கலந்தாலோசனை நடத்தப்படும்' 'மூன்று ஆண்டுகளுக்குள் மறு குடியமர்வு இயக்கப் போக்கு நிறைவு செய்யப்படும்' - ஆகிய வழிமுறைகள் எல்லாம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
அகற்றப்படும் குடிசைவாழ் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன மற்றும் உடனடியாக எங்கே, எப்படி வாழ வைக்கப்படப் போகிறார்கள், அதற்கான ஏற்பாடுகள் என்னவென்பதைப் பற்றி கொள்கை அறிக்கையில் தெளிவான திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாடு முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான குடிசைவாழ் மக்கள், புதிய அரசாங்கம் தங்களுடைய குடியிருப்புகளை / மனைகளை வரன்முறைப்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை ஆவண நகல் பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. திமுக அரியணை ஏற வாக்களித்த மக்களுக்கு இது வரமா-? சாபமா? என்பது விரைவில் தெரியும். -
சந்திரமோகன்