தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்களில் இகக(மாலெ

மூன்று நட்சத்திர கொடிச் சின்னத்தில் முதல்முறையாகப் போட்டி!!

அக்டோபர் 6, 9 நாட்களில் நடைபெற்ற 9 மாவட்ட தேர்தல்களில் செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் 1 மாவட்டக் கவுன்சில் பதவிக்கும் 3 ஒன்றிய கவுன்சில் பதவிக்கும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று நட்சத்திர கொடி சின்னத்தில் இகக(மாலெ) கட்சி போட்டியிட்டது. மேலும் கள்ளக்குரிச்சி மாவட்டத்தில் இரண்டு ஊராட்சி மன்ற வார்டுகளிலும் நெல்லையில் ஒரு ஊராட்சி மன்ற வார்டிலும் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங் குளத்துர் ஒன்றியகவுன்சில் வார்டில் (எண் 2, வண்டலூர் வார்டு 1 முதல் 8 வரை) தேர்தலில் தோழர் .பிரபாகரன் போட்டியிட்டார். மொத்தம் ஏழு பேர் போட்டியிட்டனர். தோழர் பிரபாகரன் 141 வாக்குகள் பெற்று 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஒன்றிய கவுன்சிலில் 11வது வார்டில் (குமிழி கல்வாய் பெருமாட்டு நல்லூர்) தோழர் சி. ராஜேஷ் (கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்) போட்டியிட்டு 127 வாக்குகள் பெற்றுள்ளார். மாவட்டக் கவுன்சில் வேட்பாளராக தோழர் எம். பாலாஜி போட்டியிட்டார். வார்டு எண் 4ல் போட்டியிட்ட தோழர் பாலாஜி 664 வாக்குகள் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஒன்றிய கவுன்சிலுக்கு போட்டியிட்ட தோழர் வைகுண்டராஜன் 184 வாக்குகள் பெற்று 7வது இடத்தைப் (போட்டி எண்ணிக்கை 12) பிடித்துள்ளார்.

சுத்தமல்லி ஊராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட (கட்சி வேட்பாளர்) தோழர் எஸ். அப்துல்ரகுமான் 101 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்துள்ளார்.

கள்ளக்குரிச்சி மாவட்டம் பாலி ஊராட்சி வார்டில் போட்டியிட்ட தோழர் தட்சிணாமூர்த்தி 25 வாக்குகளும் கிழக்குமருதூர் ஊராட்சி வார்டில் போட்டியிட்ட தோழர் பரிமளம் 26 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நாம் போட்டியிட்ட தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுத்து வாக்குகள் கேட்டனர். பணத்தை தண்ணீராய் செலவழித்தனர். நமது வேட்பாளர்களோ வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர். கட்சி மூலம் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து வெகு குறைவான பணத்துடனே தேர்தலை சந்தித்தனர். கட்சிக்கான தேர்தல் சின்னமான மூன்று நட்சத்திரக் கொடியை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

ஊராட்சிகளுக்கு சாலை, குடிதண்ணீர், பள்ளி, மருத்துவம், குடியிருப்பு, பொதுசுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகப் போராடுவோம்; தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் 100 நாள் முழுமையாக வேலை, முழுமையான சட்டக்கூலி வழங்கிடவும்; உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27 வகை அதிகாரத்தை செயல்படுத்தக்கோரியும் கிராமசபை மூலம் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்யவும் ஊராட்சி செயல்பாட்டை மக்கள் கண்காணிக்கவும் குரல் கொடுப்போம் செயல்படுவோம் போன்ற கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர்.

தலித், பெண் ஊராட்சி பொறுப்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு உறுதி செய்யக்கோரி குரல் கொடுப்போம் போராடுவோம் போன்ற கோரிக்கைகளையும் கட்சி எழுப்பியது.

தேர்தல் பரப்புரை மூலம் நம்முடைய வேலைப்பகுதிகள் மட்டுமின்றி பல புதிய கிராமங்களுக்கு கட்சி அறிமுகமாகியுள்ளது. திருநெல்வேலி, நாங்குனேரி ஒன்றியத்தில் ஏழு புதிய கிராமங்களுக்கு கட்சி அறிமுகமாகியுள்ளது. வாக்குகளும் பெறமுடிந்திருக்கிறது. செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலும் மேலும் பல ஊராட்சிகளில் வேலை விரிவடைவதற்கான வாய்ப்புகளை தேர்தல் பங்கெடுப்பு ஏற்படுத்தி யுள்ளது. கட்சி தலைமையகத்தின் முயற்சிகாரணமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக நமது கட்சி, மாநில தேர்தல் ஆணையத் தால் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு கட்சியின் தேர்தல் சின்னமான மூன்று நட்சத்திர கொடியும் மக்கள் மத்தியில் கூடுதலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

                                                                                                                                       -இரணியப்பன்