தியாகிகளான விவசாயிகளின் சாம்பல் கலய அஞ்சலிப் பயணம்
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பிப் பெறக் கோரி, டில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் பாஜகவினரை கண்டித்தும் இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் கேரிப் பகுதியில் சாலையோரத்தில் அமைதியாகப் போராடிக் கொண்டு இருந்த விவசாயிகள் மீது, ஒன்றிய பாஜக அமைச்சர் மகன் கார் ஏற்றி 4 விவசாயிகளையும் ஒரு பத்திரிக்கையாளரையும் கொன்றான். இதைத் தொடர்ந்து, ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கத்தை நடத்த (எஸ்.கே.எம் & சம்யுக்த கிசான் மோர்ச்சா) ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்தது. மேலும், தியாகிகளான விவசாயிகளின் சாம்பலை நாடு முழுவதும் விவசாயிகளின் பொதுமக்களின் அஞ்சலிக்காக எடுத்துச் செல்வது எனவும் முடிவு செய்தது; தியாகம் மிக்க விவசாயிகள் போராட்ட அரசியலை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காகவும், மோடி அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போராடி இன்னுயிரை நீத்த விவசாயி தியாகிகளின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகளை உறுதிமொழி ஏற்க வைக்கும் அரசியல் பணியாக இந்தப் பயணத்தை நடத்த எஸ்கேஎம் தீர்மானித்தது.
விவசாயி தியாகிகளின் சாம்பல் கலயப் பயணம் அக் 23 காலையில் சென்னை காந்தி மண்டபத்தில் துவங்கியது, தமிழகத்தின் 23 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது; விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று தியாகிகளுக்கு மலர் தூவி வீர அஞ்சலி செலுத்தினர். 'தியாகிகளின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம். விவசாயிகள் விரோத கார்பரேட் ஆதரவு பாசிச மோடி அரசை வீழ்த்துவோம்' எனவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அக்.26 அன்று வேதாரண்யத்தில் நிறைவு அஞ்சலி கூட்டத்தை நடத்தி முடித்து, தியாகிகள் சாம்பலானது வங்காள விரிகுடாவில் இரவு கரைக்கப்பட்டது.
எஸ்கேஎம்-ல் அங்கம் வகிக்கும், அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM மற்றும் அனைத்திந்திய விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம்- (AIARLA) சார்பில் தலைவர்கள் பயணத்தில் பங்கேற்றனர். சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், உளுந்தூர்பேட்டை, விருதாச்சலம், ஆத்தூர், சேலம், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டங்களிலும் கலந்து கொண்டு தோழர்கள். இரணியப்பன், சந்திரமோகன், சிம்சன், வளத்தான், கண்ணையன், ராஜசங்கர், கலியமூர்த்தி, அய்யந்துரை, இராமச்சந்திரன், பகத்சிங், நாராயணன், விஜயன், தவச்செல்வன், வீரச் செல்வன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். பல்வேறு இடங்களிலும் நமது செயல்வீரர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகள் சங்க தலைவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து 20.10.2021 அன்று மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ), அயர்லா தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சந்திரமோகன் கண்டன உரையாற்றினார்