மற்றுமொரு சாதி ஆதிக்கப் படுகொலை!
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேட்டைமங்களம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரபாகரன். ஆட்டோ ஓட்டுனரான 24 வயதுள்ள அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பியிருக்கின்றார். பத்தர் வேலைசெய்கின்ற குடும்பத்தைச் சார்ந்த அந்தப் பெண்ணும் பிரபாகரனை விரும்பியிருக்கிறார். இதை பெண்ணின் தந்தை விரும்பவில்லை. அந்த ஊரில் இரண்டு மூன்று குடும்பங்கள் மட்டுமே அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் பிரபாகரனை கண்டித்து விட்டு விட்டனர்.
ஆனால் பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த வன்னியரான திமுக ஒன்றியகவுன்சிலர் சீதாபதி என்பவர் சாதி ஆதிக்க எண்ணம் கொண்டவர். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துகின்ற இவர்தான் அந்த பெண்ணுடைய தந்தையை சாதித் தூய்மை என்ற பெயரில் சாதிவெறியூட்டி “நான் இருக்கின்றேன் பார்த்துக் கொள்கிறேன்” என்று உசுப்பேத்தி படுகொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். 9.10.2021 இரவு 8 மணிக்கு அந்த இளைஞன் எப்போதும் போல் வேலையை முடித்துவிட்டு கடைத் தெருவில் நின்றிருந்த போது, தொடர்ந்து ஒருவார காலமாக இவரோடு எதார்த்தமாக பேசுவது, பழகுவதுபோல் காட்டிக் கொண்ட மணிகண்டனும்,கார்த்திக்கும் சேர்ந்து, தலித் இளைஞர் பிரபாகரனை துடி துடிக்க தாக்கியுள்ளனர். ஊர்மக்கள் சத்தம் கேட்டு குற்றவாளிகள் ஓடிப்போய்விட்டனர். ஆபத்தான நிலையில் ஊர்மக்கள், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பிரபாகரன் இறந்துவிட்டார். தகவலறிந்த இகக மாலெ உள்ளிட்ட இடது இயக்கத்தினர், தலித் அமைப்பினர்,அனைத்து இயக்க தோழர்களும் இணைந்து கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாதி ஆதிக்கப் படுகொலை செய்தவர்களையும் அதற்கு காரணமான சீதாபதி மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கொலையான பிரபாகரன் குடும்பத்துக்கு அந்த சட்டத்தின்படி இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
ஆனால், காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் கொலைசெய்த இரண்டு நபர்கள்மீது மட்டும் வழக்குபோட்டு விட்டு முதன்மைகுற்றவாளி சீதாபதியை பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து திமுகவுக்கு தாவி ஒன்றிய கவுன்சிலராகியுள்ள சீதாபதி மணல் கடத்தல், காவல் நிலைய கட்டப்பஞ்சாயத்து நடத்தி காவல் நிலையத்தோடு நெருக்கம் உள்ளவர் என்று மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். முதன்மைக் குற்றவாளியை கைதுசெய்யாதவரை உடலை வாங்கமுடியாது என்று போராட்டம் 10ம் தேதியும் தொடர்ந்தது. இந்தப் போராட்டங்களில் இகக(மாலெ) தஞ்சை மாவட்டச் செயலாளர் டி. கண்ணய்யன், மாவட்டக் குழு உறுப்பினர் மாசிலாமணி, அவிகிதொச மாநிலச் செயலாளர் தவச் செல்வம் உள்ளிட்டோர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பதினோராம் தேதி நடந்த கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் பிரபாகரன் குடும்பத்தினர், பல அமைப்புகளின் பிரதிநிதிகள், இகக(மாலெ) சார்பாக தோழர் கண்ணய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கும்பகோணம் மருத்துவமனை, கோட்டாட்சியர் அலுவலகம், பந்தநல்லூர் என போராட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்கிறது. காவல்நிலைய முற்றுகைப் போராட்டம் பற்றியும் திட்டமிடப்படுகிறது.
பிணத்தை வாங்க மறுத்து இகக (மாலெ)வுடன் விசிக, திக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நீலப் புலிகள் இயக்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி ஆகிய அமைப்புகள் இந்த தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
- தவச்செல்வம்