ஆஷா (ASHA) ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்
சமீப மாதங்களில் உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, தொடர்ச்சியான போராட்டங்களைக் கண்டது நவம்பர் 22&ல் விவசாயிகள் பஞ்சாயத்து, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப்பெற வேண்டுமென தொழிலாளர்களின் போராட்டம், மதிய உணவுத் தொழிலாளர்களின் போராட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டுமென போராட்டம்,-- மேலும் தங்களுடைய கோரிக்கைகளுக்காக டிசம்பர் 13ல் ஏஐசிசிடியு உடன் இணைந்துள்ள ஆஷா தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைக ளுக்காக போராட்டம் நடத்தி உத்தர பிரதேச முதமைச்சரிடம் மனு கொடுத்தனர். ஆஷா ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து; மாத ஊதியம் ரூ. 21,000; ரூ.10 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு; ரூ.50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு; மகப்பேறுகால மற்றும் மருத்துவ விடுப்பு.
போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திட்டப் பணியாளர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தோழர் சசி யாதவ், நாடு முழுவதும் ஆஷா தொழிலாளர்கள் வெவ்வேறு பெயர்களில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாறுபட்ட ஊதியங்கள் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். ஆஷா ஊழியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கொரானாவிற்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் அவர்களின் நியாய மான கோரிக்கைகளை அரசாங்கம் கொஞ்சமும் செவி கொடுத்து கேட்கவில்லை. பொய்யான மோதல் கொலைகளுக்கு இழிபெயர் பெற்ற யோகி அரசாங்கமானது ஷாஜகான்பூரில் ஆஷா தலைவர் பூனம் பாண்டேவை கொலை செய்ய முயற்சித்தது. வரவிருக்கும் தேர்தலில் யோகி அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்குமாறு ஆஷா ஊழியர்களை தோழர் சசி யாதவ் கேட்டுக் கொண்டார்.
இந்தப் போராட்டக் கூட்டத்தில் ஏஐசிசிடியு தேசியப் பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் திம்ரி, ஆஷா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் சரோஜினி பிஷ்த், ஆஷா தலைவர் அமர்ஜித் கௌர் உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினார்கள். அனிதா மிஸ்ரா மற்றும் அப்ரோஷ் ஆலம் ஆகியோர் இதனை வழி நடத்தினார்கள்.
பல்லாண்டுகளாக ஆஷா ஊழியர்கள் அனைத்துவித ஆபத்துக்களை எதிர் கொண்டும், அவர்களுடைய கடின உழைப்பாலும் திறமை யாலும் பொது சுகாதாரத்தின் அடிக்கட்டு மானத்தை வலுப்படுத்தியுள்ளார்கள். மேலும், மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் இறப்பின் விகிதத்தை கட்டுப்படுத்தி, இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை தேடித் தந்துள்ளார்கள். பல்வேறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தத் தங்களுடைய இன்னுயிரைப் பணயம் வைத்துள்ளார்கள். மேலும், மிகச் சாதாரணமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்ட போதும் கூட, கோவிட்- 19 போன்ற பயங்கரமான பெருந்தொற்றை வீழ்த்துவதற்கு, முன்னணியில் நின்று போராடி உதவி புரிந்துள்ளார்கள். தடுப்பூசி போடுவதில் பெற்ற வெற்றிக்காக, அரசாங்கம் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறது. ஆஷா ஊழியர்களின் மிகப்பெரிய பங்களிப்பின் காரணமாகவே இதனை அடைய முடிந்தது. ஆனால் எவரும் அவர்களுடைய உரிமைகள், தேவைகள் பற்றி கவலை கொள்ளவில்லை. வெட்கக்கேடான மிகச்சிறிய கௌரவ ஊதியத்திற்காகவும், கேவலமான வேலை நிலைமைகளிலும் அவர்கள் இரவும் பகலும் வேலை செய்யப் வைக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த அரசாங்கமோ, அவர்களின் பிரச்சனை களைப் பற்றி மௌனமாக இருக்கிறது. ஆஷா ஊழியர்கள் இப்போது தங்களுடைய குரல் இந்த அரசாங்கத்தைச் சென்றடையவும் அவர்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும், போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டனர்.
கோரிக்கைகள்:
1.அனைத்து ஆஷா ஊழியர்களுக்கும், அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும்.
2.ஆஷா ஊழியர்களுக்கு, ரூ.21,000 மாத சம்பளம்.
3. ஆஷா ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு.
4. கொரானா உதவித்தொகை, தடுப்பூசி, கோவிட் கணக்கெடுப்பு, மற்ற வேலைகள் உள்ளிட்டவை களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
5.பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, மாவட்ட அளவிலான பாலின கூருணர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
6. மருந்தகங்களிலிருந்து மருத்துவமனை வரை அனைத்து மட்டங்களிலும் ஆஷா ஊழியர்கள் தவறாக நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
7.ஆஷா ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்கு அனைத்து மருந்தகங்களிலும் பொது அறைகள் அமைக்க வேண்டும்.
8. ஆஷா ஊழியர்களுக்கு குறிப்பிட்ட வேலை நேரங்களைத் தீர்மானிக்க வேண்டும்; அவர்களின் வேலைகளோடு தொடர்பில்லாத கூடுதல் வேலைகளை செய்யக் கட்டாயப்படுத்தக்கூடாது.
9. ஆஷா ஊழியரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும்; ஆஷா ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
10.கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணி படை வீரர்களான ஆஷா ஊழியர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தப் போராட்டக் கூட்டத்தில் உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆஷா ஊழியர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். அவர்களோடு பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஒருமைப்பாடு தெரிவித்து கலந்து கொண்டனர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)