விதவைப் பெண்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்கள்!

மதிவாணன்

விதவைகளுக்கான மறுவாழ்வுத் திட்டமாக ஆடுகள் அளிப்பதை கழக அரசுகள் செய்து வருகின்றன. கால்நடை மருத்துவரிடம் விண்ணப் பம் வாங்கி, அதனை கிராம நிர்வாக அலுவலரி டம் கொடுத்து பயனாளி பற்றி விவரங்களைப் பூர்த்தி செய்து கையொப்பம் பெற்று கால்நடை மருத்துவரிடமே கொடுக்க வேண்டும். பெறப் பட்ட விண்ணப்பங்களை கிராம சபையில் வைத்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமசபையின் ஒப்புதல் பெறப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு ஆடுகள் வழங்கப் படும். பயனாளிகளின் எண்ணிக்கை, பஞ்சாயத்து ஒன்றுக்கு பத்து என்பது கூட பெரிய விஷயம். உண்மையில் இது ஒரு கண்துடைப்புத் திட்டம்.

ஆனால், அதுவும் கூட முழுமையாக நடப்பதில்லை. கிராமசபைக்கும் மக்களுக்கும் தெரியாமல், பஞ்சாயத்து நிர்வாகத்தில் உள்ள பெரும்புள்ளிகள், ஆளும் கட்சிக்காரர்கள் ஆதரவுடன் நடக்க வேண்டியது நடந்துவிடும்.

இந்த முறை திட்டத்தை முறையாக அமலாக்கம் செய்ய நிர்ப்பந்திப்பது என்று வாடிப்பட்டி கமிட்டியினர் தீர்மானித்தனர். படிவங்களைப் பிரதியெடுத்து, வேதனையில் வாழும் விதவைகளுக்கு அளிக்கத் துவங்கினர். விரைவில் தீ போல செய்தி பரவியது. கச்சைகட்டி, இராமையன்பட்டி, பூச்சம்பட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விதவைகள் ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு மேல் மனு அளித்திருப்பார்கள்.

இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. வாடிப்பட்டி தாலுகாவின் ஆதார் மதிப்பீட்டின்படி மொத்த மக்கள் தொகை 91,138 மட்டுமே. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வாடிப்பட்டி தாலுகாவின் பெண்கள் எண்ணிக்கை 36,521. இந்த நிலையில் ஒரே ஒரு வருவாய் கிராமத்தின் 5 பஞ்சாயத்துகளில் ஏறக் குறைய 1000 விதவைகளா?

மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. 20 வயதில் கணவனை இழந்த பெண்கள் பலர் இருந்தனர். இராமையன்பட்டி, கச்சைகட்டியில் மட்டும் ஏறக்குறைய 20 பெண்களுக்கு மேல் இருப்பது தெரியவந்தது. மற்ற 3 பஞ்சாயத்து களிலும் மேலும் ஒரு 50 பேருக்கு மேல் இளம் விதவைகள் இருக்கிறார்கள். இவர்களில் 99 சதம் டாஸ்மாக்கால் விதவையானவர்கள். 50 வயதுள்ள பெண்களிடம் பேசியபோது 20 தாண்டுவதற்குள் திருமணமாகி, குழந்தைகள் பெற்று, குடிகாரக் கணவன் இறந்துபோனதால் குடும்பத்தைக் காப்பாற்றப்பட்ட துயரக் கதைகளை கண்ணில் நீர் வழிய சொன்னார்கள். பூச்சம்பட்டி முதிய பெண் ஒருவர் தன் மகளுக்கும் அவளின் தந்தையைப் போன்ற குடிகார கணவன் வாய்த்திருப்பதையும், தான் பட்ட சிரமம் தன் பெண்ணுக்கு வரவிருப் பதையும் சொன்னார்.

இதுபோன்ற அனுபவங்களின் அடிப் படையில் கச்சைகட்டியிலும், இராமையன் பட்டியிலும் பஞ்சாயத்து அளவிலான போராட் டங்களின் மையப்பொருளாக விதவைகளின் பிரச்சனை எழுப்பப்பட்டது. பின்வரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

u  விதவைகள் அனைவருக்கும் ஆடு வழங்கு!

u பயனாளிகள் பட்டியலைக் கிராம சபையில் வைத்து விவாதித்து ஆடு வழங்கு!

u டாஸ்மாக்கால் கணவரைப் பறிகொடுத்த விதவைகளுக்கு இழப்பீடு வழங்கு! மாதாந்திர சிறப்பு உதவித் தொகை வழங்கு!

u  கச்கைகட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை மூடு!

u ஊராட்சியில் உள்ள விதவைகளைக் கணக்கெடுத்து அனைவருக்கும் அரசே முன்வந்து உதவித் தொகை வழங்கு!

u  விதவைகள் உதவித்தொகை மனு அளித்துக் காத்திருக்கும் விதவைகளுக்கு  உடனடியாக மாதாந்திர உதவித் தொகை வழங்குகால தாமத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கும் வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடு!

u  100 நாள் வேலையைத் தேர்தல் வாக்குறுதிப் படி உடனடியாக 150 நாள் ஆக்கு!

u வேலையுறுதித் திட்டத்தில் 300 நாள் வேலை மாதம் 600 ஊதியம் வழங்கு!

பூச்சம்பட்டி, குட்லாடம்பட்டி பஞ்சாயத்து களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இராமை யன்பட்டி, கச்சைகட்டி பஞ்சாயத்துகளுக்கு வந்த ஆளும் கட்சி எம்எல்ஏ வெங்கடேசன் நடத்திய கூட்டத்தில் நமது கட்சியின் தோழர்கள் விதவைகள் தொடர்பான கோரிக்கையை எழுப்பினர். இது தொடர்பான மனுவை எம்எல்ஏவிடம் அளித்தனர்.

விதவைகள் பற்றிய மேலும் நெருக்கமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கிராமசபைகளில் வலுவாக தலையிட்டு விதவைகள் நல்வாழ்வுத் திட்டங்களையும் டாஸ்மாக்கிற்கு எதிரான கோரிக்கைளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது

(தகவல்: தோழர்கள் ஈஸ்வரி, முத்துராக்கு, மல்லிகாராணி)

 

விதவைப் பெண்களின் கோரிக்கைகள்

இந்தியாவில் 2001ல் மக்கள் தொகை எண்ணிக்கை 102 கோடி. இதில் விதவைகளின் எண்ணிக்கை 18.51 லட்சம் (0.719 %). 2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 121 கோடி. விதவைகளின் எண்ணிக்கை 5.55 கோடியாக உயர்ந்துவிட்டது  (0.719 லிருந்து 4.58 % உயர்ந்து விட்டது)! மற்றொரு விவரத்தின்படி உத்திரபிரதேசத்தில் 24.62 லட்சம் குடும்பங்களுக்கு விதவைகள் தலைமை தாங்கி வழிநடத்துகின்றனர். நாட்டிலேயே இதுதான் அதிகம். முன்னேறிய சமூகக் குறியீடுகளைக் கொண்ட தமிழ்நாட்டில் 22. 32 லட்சம் குடும்பங்கள் விதவைகளை நம்பி இருக்கின்றன. விதவைகளால் வழிநடத்தப்படும் குடும்பங்களின் இந்திய சராசரி 100க்கு 9. பியில் 100 க்கு 7. தமிழ்நாட்டிலோ 100 க்கு 12! தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகாவில் விதவைகள் 5.7%. கேரளாவில் 6.67%

உபி க்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இடம்பிடித்திருப்பதன் காரணமென்ன? உலக மக்கள் தொகை வல்லுநர் ஆரோக்கியசாமி கூறுவது: பொதுவாக பெண்கள் விதவையாவதற்கு காரணம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள வயது வேறுபாடு 5&-10 வரை உள்ளதாக கூறுகிறார். (15 முதல் 20 வயது வரையிலான வேறுபாடுகளும் உள்ளன). அவர் கூறும் மற்றொரு காரணம்தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களின் ஆயுள் அதிகரித்துள்ளதும்என்கிறார். அதாவது பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். ஆண்கள் குறைந்த காலமே வாழ்கிறார்கள் என்கிறார். 20களின் துவக்கத்தில் இருக்கும் விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் இருப்பதை வாடிப்பட்டியிலுள்ள கிராமங்கள் சொல்லுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 11 மாவட்டங்களைச்சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்ட விதவைகள் சேர்ந்துவிதவைகள் வாழ்வுரிமைக்கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் அமைப்பாளர் கஸ்தூரி, தமிழ்நாட்டில் 40 லட்சம் விதவைகள் இருப்பதாக கூறுகிறார் (5.7%). இவர்கள் கடந்த தேர்தலில் தங்களின் கோரிக்கை சாசனப்பட்டியலை அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதில், விதவைகள் நலவாரியம் அமைக்கவேண்டும், அரசு, தனியார் நிறுவன வேலைகளில் விதவைகளுக்கு 5% இட ஒதுக்கீடு வேண்டும், விதவைகள் ஓய்வூதியத்தை 3000 உயர்த்த வேண்டும், மணியம்மை நினைவு திருமண உதவித்திட்டம், தர்மாம்பாள் விதவைகள் மறுமண உதவித் திட்ட தொகையை ரூ 25,000 லிருந்து 50,000கவும் 50,000லிருந்து 75,000 கவும் உயர்த்த வேண்டும், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு அந்த நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும், உழைத்து வாழ 2ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும், விதவைகள் மீதான பாகுபாடு, வன்முறைகளை தடுத்து நிறுத்த எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் போன்ற ஒன்று கொண்டுவர வேண்டும், டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும்; மதுவால் கணவனை இழந்த குடும்பத்துக்கு ஒருமுறை இழப்பீடாக ரூ 500000 மும் மாதம் ரூ 5000 உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். மதுவால் உயிரிழக்கும் ஆண்கள் கிராமப்புரங்களில் மிக மிக அதிகம். 20 வயதுகளைக்கொண்ட இளம்பருவப் பெண்கள் சீக்கிரமே விதவைகளாவதற்கு அரசின் டாஸ்மாக் கடைகளே காரணம். பக்கத்திலுள்ள புதுச்சேரியில் மிக அதிக எண்ணிக்கையில் விதவைகள் இருப்பதற்கும் மதுவே காரணம். சாராய சாவுகளுக்கு அரசுகள்தான் பொறுப்பு. அதனால்தான் தமிழ்நாட்டின் விதவைப் பெண்கள் சாராய சாவுகளுக்கு ஒருமுறை இழப்பீடு ரூ 5 லட்சமும் மாதம் 5000 உதவித்தொகையும் கேட்பதோடு டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் என்று கேட்கின்றனர்.

விதவைகள் தனிநபர்களல்ல அவர்கள் சமூகம். 40 லட்சம் குடும்பங்களை பொறுப்பேற்று நடத்தும் பெரியதொரு சமூகம். இந்தப் பெரிய சமூகத்தின் குரல் ஆட்சியிலிருப்பவர்களின் காதுகளில் விழவேண்டும். தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பெண்களுக்கான கொள்கை அறிக்கைவாழ்ந்துகாட்டு பெண்ணேஎன்று கூறுகிறது. இந்தப் பெண்கள் கவுரவமாக வாழவேண்டுமென்றால் இவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.