புத்தாண்டு செய்தி!

2022க்கான தீர்மானம் --

மோடி தலைமையிலான பாசிச ஆட்சியை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை தீவிரமாக்குவோம்!

 

வீ.சங்கர்ஏஐசிசிடியு தேசியத் தலைவர்

தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களின் ஆண்டாகவும், அதேநேரத்தில் அந்த தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான எதிர்ப்பின் ஆண்டாகவும் 2021 இருந்தது. தொழிலாளர்கள் &விவசாயிகள் ஒற்றுமை மிகச் சிறப்பாக வெளிப்பட்ட ஆண்டாகவும் 2021 இருந்தது!

இந்திய சமூகத்தில் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றில் ஈடு இணையற்ற விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தை நாடு கண்டது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின், ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் நடந்த, உறுதியான விடாப்பிடியான விவசாயிகளின் இடைவிடாத போராட்டம், மோடி தலைமை யிலான பிஜேபி அரசாங்கத்தை அவமானகரமான முறையில், பின்வாங்கச் செய்தது. ஏற்கனவே, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று கார்ப்பரேட் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு மோடி அரசாங்கத்தை தள்ளியது. 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்த விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி யானது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, போராடும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்பவர்க ளுக்கும் உரியதாகும். லக்கிம்பூர் கேரியில், ஆணவமிக்க பிஜேபியின் மத்திய அமைச்சர் தெனியால் தூண்டப்பட்ட அவருடைய மகன், அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது, தனது வாகனத்தைக்கொண்டு திடீரென இடித்துத் தள்ளினார். அதில் 4 விவசாயிகளும், ஒரு பத்திரிக்கையாளரும் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதோடு மட்டுமல்ல, அவர் விவசாயிகளின் மீது கண் மூடித்தனமாக சுட்டார். விவசாயிகளின் இந்தத் தியாகம் வீண்போகவில்லை. விவசாயிகளின் போராட்டத்தால் விவசாயிகள் மீது, பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பல்லாண்டு கால வரலாற்றில் ஈடு இணையற்ற தொழிலாளர்கள் விவசாயிகளின் முன்னுதாரணமிக்க ஒற்றுமையை நாடு கண்டது. பிஜேபி மீதான விசுவாசத்தினால் பிஎம்எஸ் (பாரதிய மஸ்தூர் சங்) தவிர, ஏஐசிசிடியூ (அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில்) உள்ளிட்ட, அனைத்து மையத் தொழிற்சங்கங் களும், நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும், போராடும் விவசாயிகளுக்கு சந்தேகத்திற்கு இடமற்ற ஒருமைப்பாட்டை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பல வடிவங்களில் வீதிகளில் நடந்த போராட்டங் களில் இணைந்தனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும், விவசாய அமைப்புகளின், மையத் தொழிற்சங்கங்களின் போராட்ட அழைப்பிற்கு செவிகொடுத்து போராட் டத்தில் இணைந்தனர். 2021 முழுவதும், சிவப்பு மற்றும் பச்சை வண்ணப் பதாகைகள் நாடெங்கும் படபடத்துக் கொண்டிருந்தன. விவசாயிகள் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், அது விவசாயத்தில் கார்ப்பரேட் நுழைவிற்கு எதிராகத் துவங்கி, விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராக, கார்ப்ப ரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் திரும்பி, அதன் வளர்ச்சிப் போக்கில் மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் இயக்கமாக மாறியது தான்.

நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும், எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. பல்வேறு துறைகளின் தொழிலாளர்கள் , குறிப்பாக அரசு மற்றும் பொதுத்துறையினர், மோடி அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை மேற்கொண்டனர். பலப் பிரிவுத் தொழிலாளர்களும் போராட்டப் பாதையில் முன்சென்றனர். பாதுகாப்பு துறையினர், நிலக்கரித் தொழிலாளர்கள், எஃகு உற்பத்தித் தொழிலாளர்கள், வங்கி மற்றும் காப்பீடு ஊழியர்கள், ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு போன்ற  திட்டப் பணியாளர்கள், இன்னும் பல்வேறு கார்ப்பரேட் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். வங்கிகளின் தனியார் மயமாக்கத்திற்கு எதிராக 16-&17 டிசம்பர், 2021 இல், பத்து லட்சம் வங்கி ஊழியர்களின் வெற்றிகர மான மாபெரும் வேலைநிறுத்தத்துடன் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஒன்பது சங்கங்கள் உள்ளடங்கிய, வங்கிச் சங்கங்களின் கூட்டமைப்பு (யூஎஃப்பியூ) தலைமையில் நடந்த இந்த வேலை நிறுத்தம், வங்கித் தனியார் மயமாக்க மசோதாவை (வங்கிகள் சட்டத் திருத்த மசோதா 2021)  நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், மோடி அரசாங்கம் தாக்கல் செய்வதைத் தடுத்து நிறுத்தியது. ஏஐசிசிடியூ உடன் இணைக்கப் பட்டுள்ள இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு (ஐஆர்இஎஃப்) தலைமையில் ரயில்வே ஊழியர்கள் பணிமனை களை கார்ப் பரேட் மயமாக்குவதற்கும், தனியார்மயமாக்கு வதற்கும், ரயில்வேக்களை கலைப்பதற்கும் எதிராக விரிந்த பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர்.

ஃபோர்டு, ஹூண்டாய் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களும் பல வடிவங் களில் போராட்டங்கள் நடத்தினர். கர்நாடகாவில் வின்ஸ்ட்ரானிலிருந்து சென்னையில் ஃபோக்ஸ் கான் வரையிலும் சங்கமற்ற தொழிலாளர்களின், தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்தெ ழுந்ததை நாம் கண்டோம். சங்கமாக்கப்படாத ஆயிரக்கணக்கான இளம் பெண் தொழிலாளர்கள் பன்னாட்டு நிறுவனமான ஃபோக்ஸ்கானை  தீர்மானகரமான வீரதீரத்துடன், காவல்துறையின் அதிகாரத்துவத்துடன் இணைந்த நிர்வாகத்தின் மிரட்டல்களையும் வற்புறுத்தல்களையும் மீறி எதிர்கொண்டனர். அப்போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கச் சென்ற தொழிற்சங்க தலைவர்களையும் போராட்டச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களையும் கைது செய்யும் கேவலமான நிலைக்கு காவல்துறை சென்றது. பீகார், மஹாராஷ்டிரா இன்னும் வேறுசில மாநிலங்களின் சுகாதாரப் பணியாளர்களும், சம்பள உயர்வு மற்றும் சிறந்த வேலை நிலைமைகள் கோரி, வேலை நிறுத்தத்தில் இறங்கினர். கோவிட் பெருந்தொற்று காரணமாகவும் அக்காலக்கட்டத்திற்கிடையிலும் அலையலையாக எழுந்து வரும் வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை, பிப்ரவரி 23-&24 இல் நடத்த, மையத் தொழிற்சங்கங்களின் அகில இந்திய மேடை திட்டமிட்டுள்ளது. 2021 வேலை நிறுத்தங்களின் ஆண்டு என்றும் அழைக்கலாம்.

கடந்த 2021 ஆம் ஆண்டானது, தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக, மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களைக் கண்டது. மேலே சொன்னது போல, தொழிலாளர் வர்க்கமும் திருப்பித் தாக்கியது. மேலும், எதிர்ப்பு இயக்கங்களைக் கட்டமைத்ததன் வாயிலாகத் தொடர்ந்து திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் உள்ளிட்ட பெருவாரியான மக்களின் வாழ்வை கோவிட் நாசமாக்கியது. கோவிட் இரண்டாவது அலையோ மிகவும் மோசமாகத் தாக்கியது. வருவாய் இழப்பு, வேலை இழப்பு, வாழ் வாதாரங்கள் இழப்பிற்கு காரணமாகி, அதனால் வறுமையும் ஏற்றத்தாழ்வும் அதிகரித்தது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அற்ப வருவாயை ஏற்கனவே விழுங்கிக் கொண்டி ருக்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட தொழிலாளிக் கும் உண்மையான வருவாய் என்பது பாதியாகக் குறைந்து விட்டது. தொழிலாளர்கள் வறுமையில் உழலுகிறார்கள். அதே நேரத்தில், முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு வாய்ப்பாக இதனை மோடி மாற்றிவிட்டார்; தாக்குதலுக்கு மேல் தாக்குதல் தொடுக்கிறார்.

சில ஆண்டுகளாகவே நடப்பில் உள்ள புதிய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் தான் மிகப்பெரிய தாக்குதலாகும். அடுத்த கட்டமாக கடந்த ஆண்டில் அதனை அமல்படுத்த மத்திய மற்றும் மாநில விதிகள் உருவாக்கப்பட்டன. அனைத்து பிஜேபி ஆளும் மாநிலங்களும், ஏறக்குறைய விதிகளை உருவாக்கி விட்டன. மேலும் அதனை அமல்படுத்தவும் தயாராகி விட்டன. அதேநேரத்தில், பிஜேபி அல்லாத மாநிலங்கள் கூட, அதற்கான வேலைகளை ஏற்கனவே துவக்கி விட்டன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஏற்கனவே முழுமையான விற்பனைக்கு வைக்கப்பட்டு விட்டன. அரசுக்குச் சொந்தமான அனைத்து உள்கட்டுமான வசதிகளும் தனியார் கார்ப்பரேட்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கும் ஒப்படைக்கப் படுகின்றன. இது "தேசிய பணமாக்குதல் வழித்தடம்" என மழுப்பலான பெயரில் அழைக்கப்படுகிறது. தனியார்மயமாக் கத்தை அமல்படுத்தவும், அதனால் வரும் அதற்கெதிரான போராட்டங்களை நசுக்கவும், பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை நிறுத்தங் களைத் தடை செய்யும் சட்டத்தை (ஈடிஎஸ்ஏ - அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டத்தை 2021) இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மேலும் அதனை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொண்டுவரலாம் என்ப தையும் மறுக்க முடியாது

அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் உட்பட்ட 50 கோடி தொழிலாளர்கள் இந்த புதிய சட்ட தொகுப்புக் குள் வருவார்கள் என ஒரு கோயபல்சின் பொய்யை அரசாங்கம் முன்வைக்கிறது. உண்மையிலேயே இந்த அரசாங்கம் காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஒரு முகவராக செயல்படு கிறது. மேலும் சமூகப் பாதுகாப்பு எனும் கருத்தாக்கத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. அமைப்புசாரா மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்கள் கையிலிருந்து பணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும் காப்பீட்டு திட்டங்கள் மட்டுமே வழங்கப்படு கின்றன. மருத்துவக் காப்பீடு மற்றும் முதுமை யில் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்காத இது ஒரு அரசாங்கத்தின் நலத்திட்டம் அல்ல. நாட்டி லுள்ள உழைக்கும் மக்கள் மீதான பொறுப்பு ணர்வை அரசாங்கம் தட்டிக் கழிக்கிறது. மேலும், தங்கள் சொந்த ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும், முதுமையில் பாதுகாப்பும் வழங்கும் சுமையி லிருந்து கார்ப்பரேட்களையும், நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்கிறது. "புதிய இந்தியாவிற்கான புதிய வரையறைகள்" நாங்கள்தான் என இந்த அரசாங்கம் பீற்றிக் கொள்கிறது. ஆனால் உண்மையிலேயே "கார்ப்ப ரேட்களுக்கான புதிய (மனுநீதி) வரையறை" யாகவே அவர்கள் உள்ளனர்.

நாம் 2022 புத்தாண்டிற்குள் நுழைகிறோம். 23-24 பிப்ரவரி 2022இல் தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நிறுத்தத்துடன் துவங்குகிறது. 2022 தொழிலாளர் வர்க்கத்தின் அலையலையான போராட்டங்களின் ஆண்டாக மாற்ற வேண்டுமென ஏஐசிசிடியூ தொழிலாளர்களை வாழ்த்துகிறது. தொழிலாளர் வர்க்கம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; அடிமை விலங்குகளைத் தவிர. அடைவதற்கோ தொழிலா ளர்களின் ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டி ருக்கிறது. இந்திய மண்ணிலிருந்து மோடி தலைமையிலான பாசிச அரசாங்கத்தை தூக்கியெறிய, நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புத்தாண்டு உறுதியேற்க வேண்டும். 2022 இல் நடக்க இருக்கும், உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபியைப் தோற்கடிக்கவேண்டும் என்பதே உடனடிக் கடமையாகும்.

Image Thanks Workers Resistance