சுதந்திரத்தின் 75ம் ஆண்டில் இந்தியா:

இந்து மேலாதிக்க வாதிகள் எதிர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்: ஒரு சுருக்கமான வரலாறு

[இன்று இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இந்து மேலாதிக்கவாத பாசிஸ்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய சுதந்திரப்போராட்ட இயக்கத்தின் முக்கிய  நாயகர்களின் பங்களிப்பை சிதைத்து, இந்திய சுதந்திர இயக்க வரலாற்றை தாங்களாகவே எழுதிக்கொள்ள முயற்சிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். இந்த பத்தியில் இந்தியாவின் இரண்டு முதன்மையான இந்து மேலாதிக்க அமைப்புகளை அதாவது இந்து மகாசபா, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) இவற்றின் பிறப்பிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது வரையும் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகான உடனடி காலத்தில் அவற்றின் செயல்பாடு பற்றியும்  ஆய்வு செய்கிறோம்.

பஞ்சாப் இந்து மகாசபா 1909ல் உருவாக்கப்பட்டது. இந்து மகாசபா 1945ல் உருவாக்கப்பட்டது. இந்தியா, சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தபோதும், சுதந்திர போராட்ட வீரர்கள் நீண்ட பல ஆண்டுகள் சிறை வாசத்தில் கழித்துக் கொண்டும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்ட போதும் மேற்சொன்ன ஒவ்வொரு அமைப்பும் அதன் தலைவர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தங்களுடைய நோக்கம் குறித்து மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, நாம் அவர்கள் சொந்தமாக எழுதியவற்றை சார்ந்தும் அதுபோல் இந்த அமைப்புகளின் சுதந்திரப்போராட்ட பங்கெடுப்பு பற்றி, போராட்டத்தில் பங்கெடுத்த பலரின் மதிப்பீடுகளை சார்ந்தும் இதனை எழுதுகிறோம்.  -ஆசிரியர்]

 

இந்து மகா சபாவும் ஆர்எஸ்எஸ்ம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தை எப்போதாவது ஆதரித்திருக்கிறதா?

ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா தலைவர்கள் திரும்பத் திரும்ப பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு தங்களின் இகழ்ச்சியை மட்டுமே காட்டிவந்துள்ளனர்.

கோல்வால்கர் சுதந்திரப் போராட்டத்தை "பேரழிவு" என்று கண்டனம் செய்தார்.

"பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது தேசப்பற்று அல்லது தேசியவாதம் என்பதோடு ஒப்பிடப் பட்டு வருகிறது. இந்த பிற்போக்கான பார்வை சுதந்திர போராட்ட இயக்கம் முழுவதும், அதன் தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் மீதும் பேரழிவுமிக்க விளைவுகளை கொண்டு வந்திருக்கிறது"

-எம்.எஸ்.கோல்வால்கரின் சிந்தனை கொத்து 1996, பக்கம் 138.

"போராட்டங்கள் மோசமான விளைவுகளை கொண்டு வந்திருக்கின்றன. 1920&-21 இயக்கத்துக்கு பிறகு பையன்கள் போர்க்குணம் மிக்கவர்களாக மாறிவிட்டார்கள். 1942 க்கு பிறகு மக்கள் சட்டத்தை பற்றி நினைக்க வேண்டிய அவசிய மில்லை என்று அடிக்கடி நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்..."

-ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கம் பற்றி கோல்வால்கர்.

1920-21 இயக்கமும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கமும்.

ஸ்ரீ குருஜி சமக்ரா தர்ஷன் (SGSD) தொகுப்பு 4 பக்கம் 41

1942ல் கூட பலரது இதயங்களிலும் வலுவான உணர்வெழுச்சி இருந்தது. அந்த நேரத்தில் கூட சங்கிகளின் வழக்கமானபணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நேரடியாக எதுவும் செய்து விடக்கூடாது என்று முடிவு செய்திருந்தது.

-1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி கோல்வால்கர் (SGSDதொகுப்பு 4 பக்கம் 40).

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நசுக்க சியாம பிரசாத் முகர்ஜி உதவினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் வங்க அமைச்சரவையிலிருந்து விலக சியாமபிரசாத் முகர்ஜி மறுத்துவிட்டார். அது மட்டுமல்ல, 1942ல் வங்க அரசாங்கத்தின் அமைச்சர் என்ற முறையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கினார். 1942 கால கட்டத்தில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

வங்கத்தில் இந்த இயக்கத்தை எப்படி முறியடிப்பது? என்பதுதான் கேள்வியாகும். எவ்வளவு சிறப்பான முயற்சிகள் எடுத்தாலும் கூட இந்த இயக்கம் இப்பிராந்தியத்தில் வேரூன்றி விடாதவாறு நிர்வாகம் நடத்தப்பட்டாக வேண்டும்.

இங்கிலாந்து தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையை பொருத்தவரை இருவருக்கும் இடையில் போராட்டம் ஏதாவது இருந்தால் இந்தத் தருணத்தில் அது நடைபெறக் கூடாது. உள்நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்த அல்லது பாதுகாப்பின்மையை உருவாக்க யாராவது வெகுமக்கள் உணர்வுகளை கிளப்பிவிட்டால் அதை எந்த அரசாங்கமாக இருந்தாலும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்...

-(சியாம பிரசாத் முகர்ஜி நாட்குறிப்பின் பக்கங்களி லிருந்து 1993 பக்கம் 175-190)

கோல்வால்கர் தியாகிகளை "தோல்விகள்" என்றும் அவர்களுடைய தியாகம் ஒரு முழுமை யான தேசிய நலனுக்கு சேவை  செய்வதாக இருந்திருக்கவில்லை என்றும் நினைத்தார்.

தியாகங்களால் முழுமையான தேசநலன் அடையப்பட்டதா? என்ற கேள்வியை  கோல் வாக்கர் நம்மிடம் கேட்கிறார்?

(சிந்தனைக் கொத்து பக்கம் 61-62)

சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி அவர் எழுதியதிலிருந்து:

"தியாகங்களை தழுவிக்கொண்ட அப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையிலேயே மாபெரும் நாயகர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை..

..அதே அளவுக்கு அது போன்ற மனிதர்களை நமது சமூகத்தின் உச்சமான இலட்சிய மனிதர்களாக உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் தியாகத்தை மனிதர்கள் அடைய வேண்டிய உச்சபட்ச மாண்புகளாகவும் மக்கள் அதை அடைய வேட்கை கொள்ள வேண்டும் என்றும் நாம் எண்ணவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் இலட்சியங்களை அடையத் தவறிவிட்டார்கள். தோல்வி என்பது அவர்களுக்குள் ஏதோ ஒரு அபாயகரமான இடைவெளி இருப்பதை பொருள்படுத்துகிறது..

-(சிந்தனை கொத்து; பக்கம் 283)

சாவர்க்கர் எப்படி? அவர் மன்னிப்பு கடிதம் எழுதினாரா?

சாவர்க்கர், இந்து மகா சபாவில் இணையும் முன்பாக, சிறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரிட்டிஷாரை எதிர்த்து வந்திருந்தார். அவர் மறுபடியும் கைது, விசாரணை என்று வந்த போது, 1911ல் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் பிரிட்டிஷாருக்கு தனது விசுவாசத்தை உறுதியளித்து பல தொடர் மன்னிப்புக் கடிதங்கள் மூலம் விடுதலை கேட்டு இறைஞ்சினார். தனது விடுதலைக்கு பிரதி பலனாக பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்பதாக உத்தரவாதம் அளித்து வெட்கக் கேடான விதத்தில் 7க்கும் குறையாத மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.

நவம்பர் 24, 1913 தேதியிட்ட கடிதத்தில்  தனக்கு விடுதலை கேட்டு மீண்டும் அளித்த மனுவில், தான் ஒழுங்காக நடந்து கொள்வதாகக் கூறி அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதற் கான வலுவான பிரதிநிதியாக மாறிவிட்டதாக வும், ஊதாரி மகன் அரசாங்க பெற்றோர்களின் வாசலைத் தேடிப்போவதைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும் என்றும் சொல்லி எழுதியிருந்தார். ஜனவரி 1924இல் தான் விடுதலை பெறுவதற்காக சாவர்க்கர் "அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் அந்தரங்கமாகவோ அல்லது பொது வெளியிலோ ஈடுபட மாட்டேன்" என்ற நிபந்தனையை எவ்வித உறுத்தலும் இன்றி ஏற்றுக்கொண்டார்.

ஆனால் காந்தியின் ஆலோசனைப்படிதான் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்று ராஜ்நாத் சிங் சொல்கிறாரே?

ராஜ்நாத் சிங் சமீபத்திய பேச்சில் காந்தி ஆலோசனை கூறியதால் தான் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதத்தை எழுதினார் என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா?

உண்மை விவரங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன:

சாவர்க்கர் மொத்தம் 11 மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார். அதில் முதல் கடிதம் 1911ல் வழங்கப்பட்டது. அப்போது காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தார். 1915ல்தான் காந்தி இந்தியா திரும்புகிறார். எனவே சாவர்க்கர்  கடிதம் எழுதியபோது காந்தியடிகள் (சாவர்க்கர்) தொடர்பிலேயே இருந்திருக்கவில்லை.

1920ல் சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் ராவ் காந்திஜியை அணுகி அவரின் ஆலோசனையைக் கேட்டார். காந்திஜி எழுதிய கடிதத்தில் "உங்களுக்கு ஆலோசனை சொல்வது சிரமமான காரியம். வழக்கின் உண்மை விவரங்களை சொல்லி சுருக்கமான மனுவை தயார் செய்வது பற்றி ஆலோசிக்கலாம். உங்கள் சகோதரர், அவர் செய்தது ஒரு அரசியல் நடவடிக்கை மட்டுமே என்று உண்மை விவரத்தைச் சொல்லி தெளிவான நிவாரணம் கோரலாம்" என்று சொல்லியிருந்தார். காந்திஜி சாவர்க்கருக்கு, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு அது ஒரு அரசியல் நடவடிக் கையே என்றும் குற்றவியல் நடவடிக்கை இல்லை என்று சொல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கி யிருந்தார். அவர் சாவர்க்கரை மன்னிப்புக் கேட்டு மன்றாடுமாறு  சொல்லவில்லை.

காந்திஜியின் பேரனும் வரலாற்று ஆய்வாள ருமான ராஜ்மோகன் காந்தி "சாவர்க்கர் சகோதரர்களின் கோரிக்கைக்கு பதிலளித்து 1920ல் காந்தி எழுதிய ஆலோசனைக் கடிதத்தை, அதற்கு 9 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் அளித்த மன்னிப்புக் கடிதத்திற்கான ஆலோசனையாக நம்மை நம்பும்படி சொல்கிறார்கள். இது விவரிப்பதற்கு அப்பாற்பட்ட முட்டாள்தன மானது, நகைப்புக்குரியது" என்று சொல்கிறார்.

மே, 1920ல் இளைய இந்தியா பத்திரிகையில் சாவர்க்கர் சகோதரர்களும், அதுபோல் மவுலானா சவுக்கத் அலி, மவுலானா முகமது அலி என்ற அலி சகோதரர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காந்தி எழுதியது உண்மை தான். ஆனால், அவர் அவர்களுக்காக மன்னிப்பு கோரி மன்றாடவில்லை. அவர் தனக்கு உடன்பாடில்லாத கருத்துகள், வழிமுறை கொண்ட நபர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையையும் கோரியிருந்தார்.

செயல்தந்திர ரீதியாக சாவர்க்கர் ஒருவேளை மன்னிப்புக் கேட்டிருக்கலாம். அவர் விடுதலை பெற்ற பிறகு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட வில்லையா?

இந்த இடத்தில் காந்திஜி, சுபாஷ் சந்திர போஸ் என்ற இரண்டு சுதந்திரப் போராட்டக் காரர்கள் சாவர்க்கர் பற்றியும் இந்து மகாசபா பற்றியும் கொண்டிருந்த கருத்துக்களை கவனத்தில் கொள்வோம்.

மே 1920, இளைய இந்தியா இதழில் காந்திஜி, சாவர்க்கர் சகோதரர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று கருதுவதாக நினைத்த காந்தி அவர்கள் சுதந்திரப்போராட்ட வீரர்களாக இருந்திருக்க வில்லை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். “சாவர்க்கர் சகோதரர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பவில்லை என்பதை அய்யத்திற்கிடமின்றி தெரிவித்திருந்தனர். அதற்கு மாறாக, பிரிட்டிஷாருடன் சேர்ந்து பணியாற்றும் போதுதான் இந்தியாவின் தலையெழுத்து சிறப்பாக இருக்கும்என்றார்கள்.

ஜூன் 1940ல் சுபாஷ் சந்திர போஸ் சாவர்க்கரை சந்திக்கிறார். சந்திப்பு சம்பந்தமாக அவர் எழுதுவது என்னவென்றால் "திரு சாவர்க்கர் சர்வதேச சூழல் பற்றி மறதி கொண்ட வராக இருந்தார். பிரிட்டனின் ராணுவத்திற்குள் எப்படியாவது இந்துக்கள் நுழைந்து, ராணுவப் பயிற்சி பெற்றுவிட வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே அவர் சிந்தித்தார்’’. ஜின்னாவும் சாவர்க்கரும் விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அறிந்தி ருந்தார். அவர் முஸ்லிம் லீக்கிடமிருந்தோ அல்லது இந்து மகாசபாவிடமிருந்தோ எதையும் எதிர்பார்க்க முடியாது என்று (போஸ்) எழுதுகிறார்.

(நேதாஜி தேர்வு நூல்கள் தொகுதி 2 - இந்தியப் போராட்டம்)

சியாம பிரசாத் முகர்ஜி தனது டைரி குறிப்பில், இந்து மகாசபா வங்கத்தில் ஒரு அரசியல் கட்சியாக கட்டப்படுமானால் அவர் (போஸ்) அது பிறப்பதற்கு முன்பே அதை உடைத்து விடுவதாகவும், தேவைப்பட்டால் பலாத்காரத்தை பிரயோகித்து அதைச் செய்துவிடுவதாக சுபாஷ் சந்திர போஸ் சொன்னதாகவும் எழுதியிருக்கிறார்.

(சியாம பிரசாத் முகர்ஜி டைரியின் பக்கங்களி லிருந்து 1993)

ஆனால் விக்ரம் சம்பத், சாவர்க்கருக்கு போஸ் புகழாரம் சூட்டியதாக சொல்கிறாரே?

சாவர்க்கரை, போஸ் புகழ்ந்து தள்ளி யிருக்கும் குறிப்பு பற்றி சமீபத்தில் சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கும் விக்ரம் சம்பத் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதன் உண்மைத் தன்மையை அறிய பத்திரிக்கையாளர் ஆயூஷ் திவாரி முயன்றிருக்கிறார். தனஞ்செய் கீர் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் இந்தக் குறிப்பு இருப்பதாக கண்டறிந்த திவாரி அந்தக் குறிப்புக்கான மூல ஆதாரம் எதுவும் கொடுக்கப் படவில்லை என்கிறார். இந்தக் குறிப்பை சுட்டிக் காட்டுவதற்காக எந்த முதன்மை மூலமும் இல்லை என்கிறார் திவாரி. எனவே சம்பத், தனது புத்தகத்தில் எவ்வித மூலமும் இல்லாத கீர் எழுதிய சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திலிருந்து எடுத்து அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் கையாண்டிருக்கிறார். நாம் ஏற்கனவே மேலே பார்த்தவாறு நேதாஜியின் சொந்த எழுத்துக்களோ சாவர்க்கர் பற்றியும், இந்து மகாசபா பற்றியும் எதிர்மறை கருத்துக்க ளையே கொண்டிருந்தன.

நேதாஜியின் போராட்டங்களுக்கான பெருமையை சாவர்க்கருக்கு கொடுப்பது என்பது பழைய வகைப்போக்காக இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தப்போக்கு சாவர்க்கர் அவர்களாலேயே "தேஜவி டாரே" என்ற சுதந்திரத் துக்குப்பின் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் அவரே எழுதியதிலிருந்து துவங்குகிறது.

சம்பத் சொல்கிறபடி, 1926ல் வெளிவந்த சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ராஜாஜி தானா?

1926ல் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு "சித்திரகுப்தா" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சம்பத்தால் இது ராஜகோபா லாச்சாரி (ராஜாஜி)யால் எழுதப்பட்டது என்று உணர்ச்சி வேகமாக சொல்லப்பட்டதன் விவரங் களை பத்திரிக்கையாளர் அசுதோஷ் பரத்வாஜ் சரிபார்க்க முற்பட்டார்.

ஆனால் ராஜாஜியின் தேர்ந்தெடுத்த நூல் தொகுப்பில் இந்தக் குறிப்பு எங்கும் இடம்பெற வில்லை. சாவர்க்கரின் சகோதரர் பாபாராவ் சாவர்க்கர் எழுதிய இந்து மகாபாஷ பர்வா என்ற புத்தகத்தில்  ஆதாரம் இருப்பதாக பரத்வாஜ் கண்டுபிடிக்கிறார். இந்த குறிப்பிற்கும் முதன்மை மூலாதாரம் இல்லை.

வீர் சாவர்க்கர் பிரகாசனால் 1926ல் வெளிவந்த வாழ்க்கை வரலாறு 1986ல் மறு பதிப்பாக வெளிவந்தது. அதன் முன்னுரையில் "சித்திரகுப்தா என்பவர் வீர் சாவார்க்கர் தானே அன்றி வேறல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காந்தி, போஸ், ராஜாஜி என அனைவரும் சாவர்க்கரை ஏற்றுக்கொண்டதாக சொல்வதற்கு ஏன் இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?   

பல மன்னிப்பு கடிதங்கள் மதவாத, பிரிட்டிஷ் சார்பு அரசியல் காரணமாக கறை படிந்திருக்கும் சாவர்க்கருக்கு ஏதோ ஒரு வகையில் இப்போது மதிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் சம்பத்தும் ராஜ்நாத் சிங்கும் முயற்சிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் காந்தி மன்னிப்பு கேட்கச் சொல்லி ஆலோசனை வழங்கினார் என்றும், போஸ் அவரைப் புகழ்ந்தார் என்றும் ராஜாஜி அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் என்றும் இவர்கள் மீது சுமத்துகிறார்கள். ஆனால், இந்தத் தலைவர்கள் சொன்னதாகச் சொல்லும் குறிப்புகளும் உணர்ச்சி கருத்துக்களும் சாவர்க்கராலும் அவரது சகோதரர்களாலும் தயாரிக்கப்பட்ட பொய்ச் செய்தியாகவேத் தெரிகிறது.

அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு சாவர்க்கர் என்ன செய்தார்?

அவர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சாகிற வரை அவர் தனது மன்னிப்பு கடிதத்தில் பிரிட்டிஷாருக்கு என்ன உத்தரவாதம் அளித்தாரோ அதையே கடைப்பிடித்தார் என்பது தெளிவு. அவர் சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு தகுதியிலும் பங்கேற்கவில்லை. அவர்  இந்து மேலாதிக்க, வெறுப்பு இந்துத்துவா அறிக்கையை 1923 இல் எழுதினார். அதிலிருந்து வாழ்க்கை முழுவதும் இந்து மேலாதிக்க அரசியலுக்காக மாத்திரமே செலவழித்தார்.

போஸ் குறிப்பிட்டதுபோல சாவர்க்கர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலோ அல்லது பிரிட்டிஷாருக்கு எதிரான ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிலோ ஆர்வம் காட்டவில்லை. அவரை ஆட்டிப்படைத்த---------தெல்லாம் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்துக்கள் எப்படி நுழைவது? அந்த பயிற்சி எப்படி முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட உதவுமென்பதிலும்தான் கவனமாக இருந்தார்.

ஆனால், காந்திஜியின் படுகொலைக்குப் பின்னால் சாவர்க்கரின் மூளை இருந்ததை நாம் மறக்க முடியுமா?

ஆனால், காந்திபடுகொலைக்கு சாவர்க்கர் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லையே?

காந்திஜி படுகொலை-- செய்யப்பட்டதற்காக கோட்சே தூக்கிலிடப்பட்ட போதும், சதியில் தன் பங்கிற்காக அவரது சகோதரர் சிறைவாசம் சென்ற போதும், அதற்கு மூளையாக செயல்பட்ட சாவர்க்கர் தண்டனையிலிருந்து தப்பி விட்டார். இந்து மகாசபாவின் உறுப்பினரான பட்ஜீ காட்டிக் கொடுப்பவராக மாறி அளித்த வாக்குமூலத்தில் அப்டேவும் கோட்சேவும் சாவர்க்கரை சந்தித்துவிட்டு ஆயுதங்களோடு வந்ததையும் சாவர்க்கர்  இருவரும் வெற்றிகரமாக திரும்பி வாருங்கள் என்று  வாழ்த்தியதை சொல்லியும் கூட தப்பிவிட்டார். "காந்தியின் நூறாவது ஆண்டு நெருங்கி வருகிறது" அதனால் கொலை முயற்சி வெற்றி பெறும் என்றும் சாவர்க்கர் உறுதிபட அப்டேயிடம்  கூறியதாகவும் அவர் சொன்னார். சுதந்திரமான உறுதிப்படுத்துதல் இல்லாமல் போனதால் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்ததால் சாவர்க்கர் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

ஆனபோதிலும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் சாவர்க்கரின் குற்றத்தை உறுதிபட அறிந்திருந்தார். பிப்ரவரி 27, 1948 அன்று பிரதம மந்திரி நேருவுக்கு எழுதிய கடிதத்தில் "இந்து மகா சபாவின் சாவர்க்கர் தலைமையிலான மதவெறிப் பிரிவு சதியை திட்டமிட்டு அதை நிறைவேற்றியும் உள்ளது" என்று எழுதினார்.

சாவர்க்கர் மறைவுக்குப் பிறகு நீதிபதி கபுர் கமிஷன் விசாரணை, ஏற்கனவே பட்ஜ் சொன்னவற்றுக்கு கூடுதலாக உறுதிபட கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு இந்த கொலை சதியின் காரணகர்த்தாவாக செயல்பட்டது சாவர்க்கர்தான் என்பதை உறுதி செய்தது.1969ம் ஆண்டு கபுர் கமிஷன் தனது அறிக்கையில் மகாத்மா காந்தி கொலையில் பின்னாளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு நேரத்தில் சாவர்க்கர் சதனில் கூடியிருக்கிறார்கள். சில நேரங்களில் நீண்ட நேரம் அவருடன் உரையாடியிருக் கிறார்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது சாவர்க்கரும் அவருடைய குழுவினரும் தான் கொலை செய்ய சதி செய்தார்கள் என்ற தத்துவத்திற்கு மாறான கருத்து வேறெதுவும் இருக்கமுடியாது.

ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கான அபாயமாக இருக்கும் என்று படேல் எண்ணினார்.

ஜூலை 18, 1948ல் இந்து மகா சபா தலைவர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு படேல் எழுதிய கடிதத்தில்.,

 "காந்தியை கொலை செய்ய சதி செய்ததில் இந்து மகா சபாவின் தீவிரவாதப் பிரிவு ஈடுபட்டிருக்கிறது என்பதில் என் மனதுக்கு எட்டியவரை எவ்வித சந்தேகமும் இல்லை. ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகள் தெளிவாக அரசாங்கம் மற்றும் அரசின் இருத்தலுக்கு அச்சுறுத்தலாக  இருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட பின்னரும்கூட அதன் நடவடிக்கை கள் ஓய்ந்து விடவில்லை என்பதை நமது அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காலங்கள் கடந்து போக போக ஆர்எஸ்எஸ் வட்டங்கள் இன்னும் அதிகரித்த அளவில் கட்டுப்பாடுகளை மீறுவதும் அதுபோல் சீர்குலைவு நடவடிக்கைகளை அதிகப்படுத்து வதையும் நடத்தி வருகிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

செப்டம்பர் 1948ல் கோல்வால்கருக்கு படேல்  எழுதிய கடிதத்தில் ஆர்எஸ்எஸை தடை செய்வதற்கான காரணங்களை மறுஉறுதி செய்திருந்தார்:

அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்திலும் மதவாத நஞ்சு நிரம்பியிருக்கிறது. அதன் விளைவாக, விலைமதிப்பற்ற காந்திஜியின் உயிர் தியாகம் செய்யப்பட்டு நாடு துன்பத்திற்குள் ளாகியிருக்கிறது. இனி அரசாங்கத்தின் அல்லது மக்களின் ஒரு துளி இரக்கம் கூட ஆர் எஸ் எஸ்க்கு இருக்காது... காந்திஜியின் மரணத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் காரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்பு வழங்கியபோது மக்களின் எதிர்ப்பு இன்னும் மிகக் கடுமையான தாக மாறியது’.

முடிவுரை:

ஆர்எஸ்எஸ்ம் பாஜகவும் சாவர்க்கருக்கு பெரும் புகழ் பாடும் போது, அதன் உயர்மட்ட தலைவர்கள் கோட்சேவிடமிருந்துதள்ளி நிற்கிறார்கள்’. எப்படி இருந்த போதும் பாஜக மேலும் மேலும் மூர்க்கத்தனமாகும்போது, நம்பிக்கை பெறும்போது அந்த இடைவெளி குறுகி வருகிறது.

'இந்துவாக இருப்பவன் பயங்கரவாதியாக இருக்க முடியாது' என்று சொல்லி பிரக்யா  தாகூரை போபால் மக்களவை உறுப்பினராக  களமிறக்கிய மோடியின் முடிவு ஓர் உதாரணம். சாவர்க்கர் வழித்தோன்றல்களால் நடத்தப்படும் அபிநவ் பாரத் பயங்கரவாத திட்டத்தின் பகுதியாக இருந்தவர் பிரக்யா தாகூர். காந்தியை கொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை பிரக்யா தாகூர் வெளிப்படையாக திரும்பத் திரும்ப தேசப்பற்றாளர் என்கிறார். கோட்சேவின் கொலை முயற்சிக்கு தான் ஆசி வழங்கவில்லை என்று சாவர்க்கர் சொல்லியிருக்கலாம். ஆனால், இன்று இந்து மகாசபா பயங்கரவாதி கோட்சே வுக்கு கோவில்கள் கட்டப்படும் என அறிவித்தி ருக்கிறது. இந்து மகா சபாவும் ஆர் எஸ் எஸ் சும் பிரிட்டிஷாருடன் கூடிக் குலாவி இருந்தார் களே ஒழிய இந்திய விடுதலைப் போராட்டத் துக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவானது. மாறாக அவர்கள் மதவாத, பயங்கரவாத சதி வேலை களில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் மிக மோசமான செயல் காந்தியை கொலை செய்தது. இன்று அதே சக்திகள் ஏகாதிபத்தியத்தோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு மதவாத வன்முறை சதிகளில் ஈடுபடுவதோடு, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களை கொலை செய்தும் வருகிறார்கள்.-

லிபரேஷன், நவம்பர் 2021                                           தமிழாக்கம் -தேசிகன்