சிவகங்கை மாவட்டம், மறவமங்களத்தில்

சாதி ஆதிக்கக் கும்பலினால் இளைஞன் கொடூரக் கொலை

 

03.02.2022  இரவு சுமார் 8.00மணி அளவில் மறவமங்களம் அருகே அதியதிருப்பம் ஊரைச் சேர்ந்த சின்னையா மகன் சண்முகம் (31) சாதி ஆதிக்கக் கும்பலினால் படுகொலை செய்யப்பட் டுள்ளார். படுகொலை செய்ய தனிப்பட்ட எந்த முன் விரோதமும் கிடையாது. மேற்படி கொலை செய்யப்பட்ட இளைஞன் சண்முகம் சமூக அக்கறை கொண்டவனாக இருந்துள்ளார்அவரோடு பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். தந்தை இறந்துவிட்டார் வயதான ஒரு தாயார் உள்ளார். பாண்டி செல்வி என்ற சகோதரி விதவையாக உள்ளார். இக்குடும்பத்தை சண்முகம்தான் நிர்வாகம் செய்து வந்துள்ளார். இவர் அநீதிக்கு எதிராகப் போரா டியும் வந்துள்ளார். தீவிரச் சமூக செயற் பாட்டாளாராக இருந்துள்ளார். அவர்களது கிராமத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கை யிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அந்த கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் கூட விவசாயத்திற்குத்தான் ஊருக்கு வருகின்றனர். ஏனையக் காலங்களில் அவர்கள் மறவமங்களத்தில்  வசித்து வரு கின்றனர். சண்முகத்தின் குடுமபம் மட்டுமே அந்த ஊரில் தனிமையாக உள்ளது.

சமூக ஆர்வலராகச் செயல்பட்ட சண்முகம் மறவர் வகுப்பைச் சார்ந்த இளம் பெண்ணுக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த (தேவேந்திர குல வேளாளர்) இளைஞனுக்கும் ஏற்பட்ட காதலை ஆதரித்துள்ளார். அதுமட்டுமல்ல காதலர்கள் இருவர் வீட்டிலும் உடன்பாடு இல்லை என்பதை அறிந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்டது. இந்தச் செயலைக் கண்ட பெண் வீட்டின், பெண்ணின் அக்காள் கணவர் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் இப்பிரச்சி னையை பெரிதாக்கி பெண்ணைப் பிரித்து அவரது பெற்றோர் வீட்டில் இருக்க வைத்துள்ளார். இதன் பின் பெண் சில நாட்களில் தன் அம்மா வீட்டில் இருந்து  திடீரென வீட்டை விட்டுக் கிளம்பி தன்னுடைய காதலன் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் பெண்ணின் அக்காள் வீட்டுக்காரர் இதற்கெல்லாம் காரணம் சண்முகம்தான் எனக் கருதி அவனைக் கொலை செய்து விட வேண்டுமென கங்கணம் கட்டி வந்துள்ளார். இதற்கிடையே பெட்ரோல் பங்க மற்றும் மறவமங்கள கடைத் தெருவில் சண்முகத்தோடு வம்பு இழுத்துள்ளார் பெண்ணின் அக்காள் வீட்டுக்காரர். காவல் நிலையத்தில் சண்முகத்தின் மீது பொய்யான வழக்கையும் போட்டுள்ளார். நாளடைவில் இவ்விருவருக்குமிடையே தீராப் பகை உருவாகி உள்ளது.இது பற்றி சண்முகம் கவனம் கொள்ளவில்லை.

சம்பவத்தன்று சண்முகம் வீட்டில் இருக்கும் போது சமார் 7.30 மணி அளவில் அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் மறவமங்களம் வரச் சொல்லி போன் செய்துள்ளார். சண்முகம் தனது இரு சக்கர வாகனத்தில் மறவமங்களம் சென்றுள்ளார்.  03.02.2022 அன்று இரவு 11.00 மணி வரை சண்முகம் வீட்டிற்கு வரவில்லை. அவரது சகோதரர் மற்றும் உற்றார் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சண்முகத்தைக் கண்டறிய முடியவில்லை. மறுநாள் சண்முகம் திறந்த வெளிச் சிறைச்சாலை எதிரில் உள்ள காட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை அறிந்து அந்த இடத்திற்கு வீட்டார் விரைந்தனர். அவரது இரு சக்கர வண்டியும் செல் போனும் சண்முகம் உடலருகே கிடந்தது. காவல்துறையினர் அதனை விசாரணைக்காகக் கைப்பற்றி உள்ளனர்.

இக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் களைக் கைது செய்யக் கோரி சிபிஐ(எம்எல்) சிபிஐ(எம்), சிபிஐ, அதிமுக எம்.எல்., தேவேந்திர குல வேளாளர்  அமைப்புகள்தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐந்திணை மக்கள் கட்சி இன்னும் சில அமைப்புகள் சாலை மறியல் செய்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில் கீழ்க்கண்ட கோரிக் கைகளை போராட்டக்காரர்கள் முன் வைத்தனர்.

சமூக அக்கறையோடு காதல் திருமணம் மற்றும் சாதி ஆதிக்க மேலாண்மை போன்ற   சமூகப்  பிரச்சினைகளில்  நீதிக்காகப்   போராடிய   சமூக ஆர்வலர் சி.சண்முகத்தைப் படுகொலை  செய்த உண்மைக் குற்றவாளிகளை உடன் கைது செய்யவேண்டும், கொலைக் குற்றவாளிகள் மீது  வன்கொடுமைச்  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட  குடும்பத்தா ருக்கு ரூ 50 இலட்சம்  இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை அரசுக்குத் தெரிவித்து  நிறைவேற்றுகிறோம் எனச் சொன்னதின் பெயரில் சண்முகத்தின் உடல் 04.02.2022 அன்று 1.30 மணிக்கு எரியூட்டப் பட்டது. களத்தில் சிபிஐ(எம்எல்) தோழர்கள் நாராயணன், தோழர் ரஞ்சித்சிங், தோழர் கார்த்திக் மற்றும் தோழர் தினேஷ்  இருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட சண்முகத்தின் குடும்பத்தாரை 10.02.2022 அன்று சிபிஐ(எம்எல்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சங்கர், மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராசன், மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி மற்றும் மாவட்டச் செயலாளர் தோழர் .சிம்சன் உட்பட சிவகங்கை மாவட்டத் தோழர்கள் சந்தித்துப் பேசினர்.  

எஸ்ஸி.எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு முதல் தவணை பணம் கொடுத்துள்ளது. வழக்கினை முன்னின்று நடத்திடும் சிபிஐ(எம்) தோழர்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞரோடு நாமும் ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப் பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் சகோதரி பாண்டிச்செல்விக்கு அரசுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதியாதிக்கப் படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) தமிழக அரசை வலியுறுத்துகிறதுசிம்சன்