தலையங்கம்
தமிழ்நாட்டில் பாசிச பாஜகவின் இந்து மதவெறி அரசியல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவையில் பேசிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமியப் பெண்கள் பர்தா (ஹிஜாப்) அணிவது தடை செய்யப்படும் என்று பேசினார். பக்கத்து மாநிலத்தில் இது நாள் வரை இல்லாத, சீருடை ஒழுங்கு என்ற பெயரில் பர்தா பிரச்சனையைத் திட்டமிட்டு உருவாக்கி கர்நாடகாவை கலவர பூமியாக்கி வைத்திருக்கின்றன சங் கும்பல்களும் அம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும். ஹிஜாப்பிற்கு எதிராக என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சங் கும்பல்கள் கட்டாயப்படுத்தி காவித் துண்டையும் காவித் தலைப்பாகையையும் கொடுத்து அணியச் சொல்கின்றன. அப்படி அணிய மறுக்கும் மாணவர்கள் இந்து மாணவர்களாக இருந்தால்கூட அவர்களை அடித்துத் துன்புறுத்துகின்றன. பள்ளிக்கூடத்தில் தேசியக் கொடிக்காக உள்ள கொடிக் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றுகின்றன ஆர்எஸ்எஸ்& சங் பரிவார் கும்பல்கள். ‘இந்தியா இந்து நாடு’ என்று கத்திக் கொண்டு இருக்கும் காவிக் கும்பல்கள், ஹிஜாப் பிரச்சனையைக் கையில் எடுத்தவுடன் ‘இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு’ இங்கு எதற்காக மத அடையாளமுள்ள ஹிஜாப்பை அணிய வேண்டும் என்கின்றன. இந்த பாசிச பாஜக கும்பல்களுக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இந்த நாட்டில் இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு இஸ்லாமியர், கிறிஸ்தவர் கள் மீது தாக்குதல் நடத்தி கலவரத்தை உருவாக்கி மக்களை அவர்களின் உண்மைப் பிரச்சினையில் இருந்து திசை திருப்பிட வேண்டும். தமிழ்நாட்டிலும் எப்படியாவது கலவரங்களை உருவாக்கிக் கால் பதிக்க வேண்டும் என கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன இந்த பாசிச சங்கிக் கும்பல்கள். சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணத்தை, கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொன்னதால்தான் நிகழ்ந்தது என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்து, அந்த மாணவியின் பெற்றோரைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)யின் விசாரணை வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டு, ஆர்எஸ்எஸ் ஆதரவு நீதிபதி மூலம் அதற்கு உத்தரவும் பெற்று இப்போது உச்ச நீதிமன்றமும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. மத்திய புலனாய்வுத்துறை மோடி அரசின் கைப்பொம்மை என்பது உலகறிந்த விசயம். எல்.முருகன் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தபோது கருப்பர் கூட்டத்தால் சஷ்டிக் கவசத்திற்கு சங்கடம் வந்துவிட்டது என்று சொல்லி வேலைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வந்து கலவரம் ஏற்படுத்த முயற்சித்தார். அது முடியாமல் போனது. முருகனின் அப்பன் பெயருடைய அண்ணாமலை லாவண்யாவின் மரணத்தை மதமாற்றப் பிரச்சனையாக்கி பிரச்சாரம் செய்துவிட்டு இப்போது தமிழ்நாட்டிலும் ஹிஜாப் பிரச்சனையைக் கொண்டு கலகமூட்ட தீ கொளுத்திப் போட்டுள்ளார். அதிலும் காக்கி உடையில் ஒளிந்திருக்கும் காவிகள் அதிகமுள்ள கோவையில். இதற்கு முன்பு எத்தனையோ மாணவிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டபோது, இறந்தபோதெல்லாம் இந்தக் காவிக் கும்பல்கள் கள்ள மவுனம் காத்தனர். சங்கிகள் பேசும் இந்து ஒற்றுமை சிதம்பரத்தில் மீண்டும் சந்தி சிரிக்கிறது. வேற்று சாதி பெண்ணொருவர் சிதம்பர நாடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏற முயன்றதால் தீட்சிதர்களால் அடித்துத் துரத்தப்படுகிறார். அண்ணாமலைகளுக்கு இப்போது கண்கள் தெரியாது. சாதிய அடையாளத்தை, சாதி ஆதிக்கத்தை ஒருபோதும் கைவிடாத பார்ப்பனிய பாசிசம்தான் இந்த சங்கிகள் பேசும் இந்து ஒற்றுமை. இவர்களுக்கு ‘இந்து ஒற்றுமை’ என்பது மதவெறி நஞ்சூட்டி கலவரத்தை உருவாக்கவே. இந்த அண்ணாமலைகளின் எண்ணங்கள் ஈடேற விடாமல் கம்யூனிஸ்ட்டுகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் தடுத்து நிறுத்துவார்கள். பாஜகவின் குரலில் பேசும் அதிமுகவிற்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)