இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)&ன்

23வது கட்சிக் காங்கிரசுக்கு

இகக(மாலெ)விடுதலை&ன் வாழ்த்துச் செய்தி.

 

அன்புமிக்க தோழர்களே!

கேரளாவின் கண்ணூரில் இன்று இகக(மா) வினுடைய 23வது கட்சிக் காங்கிரஸ் துவங்குவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இகக (மாலெ) மத்திய கமிட்டி சார்பாக உங்கள் விவாதங்கள் வெற்றியடையவும் மற்றும் உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த கம்யூனிச வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் துவக்க அமர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த தோழர் சீதாராம் யெச்சூரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராத விதமாக உங்கள் காங்கிரஸ் நடைபெறும் அதே நாளில்  ராஞ்சியில் எங்கள் மத்திய கமிட்டி கூட்டம் இருந்ததால் என்னால் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. உங்கள் காங்கிரசை வாழ்த்தி இந்த எழுத்துபூர்வ செய்தியினை அனுப்புகிறேன்.

நீண்ட நெடிய பெருந்தொற்றின் நிழலில் நீங்கள் 23வது காங்கிரசுக்காக கூடியிருக்கும் போது, ஐரோப்பாவில் இன்னுமொரு யுத்தத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். சுதந்திர உக்ரைன் என்பது லெனின் செய்த தவறு என்று சொல்லி புதின் அந்தத் தவறை சரி செய்வதாக அச்சுறுத்தி அதன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி இரண்டாவது பெரிய முன்னாள் சோவியத் குடியரசு என்ற ஒன்றை இல்லாமல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீதான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது பல்லாயிரக் கணக்கான சாதாரண குடிமக்களைப் பலி கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானோர்  பாதுகாப்புக் கருதி குடிபெயர்ந்திருக்கிறார்கள்.

உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் எண்ணிக்கையினராக இந்திய மாணவர்கள் உள்ளனர். அப்படி இருந்தும்கூட, மோடி அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த எவ்வித ராஜதந்திர முயற்சிகளும் எடுக்கவோ, உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை உத்தரவாதம் செய்யவோ இல்லை. தீவிரப் படுத்தப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என்ற பின்புலத்தில் எப்படி பாலஸ்தீனிய நலனுக்கு மோடியின் இந்தியா துரோகம் இழைத்ததோ அதேபோல் புதின், உக்ரைனுக்குள் நுழைந்த தையும் செயலூக்கமாக ஆதரித்து வருகிறது.

1917ன் வெற்றிகரமான புரட்சி, ஏகாதிபத்திய சங்கிலியை அதன் பலவீனமான கண்ணியில் துண்டித்து ஜாரின் எதேச்சதிகார பிடியிலிருந்து ரஷ்யாவை மட்டும் விடுவிக்கவில்லை, அது நச்சுத்தன்மை மிக்க மகாரஷ்ய மேலாதிக்க ஆளுமையை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பல்வேறு தேசிய இனங்களின் சிறைச் சாலையாக இருந்த ரஷ்யாவை பல்வேறு தேசிய இனங்களின் சோசலிச கூட்டமைப்பாக மாற்றியது. பூகோள அரசியல் காரணிகள் ஒருபுறமிருக்க, இப்போதைய யுத்தம் என்பது அடிப்படையில் அந்த லெனினிய மரபை அழித்தொழிக்கும் முயற்சியாகும். லெனினின் புரட்சிகர மரபைப் பின்பற்றும் கம்யூனிஸ்டு களாகிய நாம் புதினின் யுத்தத்தையும் ஐரோப்பா வில் ஐக்கிய அமெரிக்கா- நேட்டோ  விரிவாக்கத் திட்டத்தையும் நிராகரித்துவிட்டு அமைதியும் நீதியும் வேண்டி நமது குரலை உயர்த்த வேண்டும்.

இடதுசாரி இயக்கத்தில் உள்ள நாம் எல்லோரும் நமது அனைத்து சக்திகளையும் திரட்டிக்கொண்டு போராட சூழல் நம்மை முற்றிலுமாக நிர்ப்பந்திக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் அகில இந்திய அளவிலும் கூட மேலான ஒருங்கிணைப்பை நாம் வெற்றி கண்டிருக்கிறோம். நாம் ஒன்றாக இருந்து பீகாரில் சிறப்பான தேர்தல் வெற்றிகளை பெற்றூள்ளோம். உங்கள் வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிட்டி ருப்பது போல மேற்கு வங்கத்தில் நமது செயல் தந்திர வழியிலான வேறுபாடு முன்னுக்கு வந்தது உண்மைதான்.அதுபோன்ற வித்தியாசங்களை தோழமை உணர்வுடன், பரந்த இடதுசாரி ஒற்றுமை என்ற நலனை முன்வைத்து பொறுப்புடன் நாம் நடந்து கொள்வதன் மூலமும் பாசிச தாக்குதலுக்கு எதிராக நமது சக்தியையும் கவனத்தையும் ஒன்று குவிப்பதன் மூலமும் கையாள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வரும் காலங்கள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். நாம் இணைந்து பயணித்து ஜனநாய கத்துக்கான போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

நாம் போராடுவதற்காக ஒன்றுபடுவோம்!

வெற்றி பெறுவதற்காகப் போராடுவோம்!

இகக(மா)வின் 23வது காங்கிரஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

இடதுசாரிகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க!

அனைத்து முற்போக்கு, போராடும் சக்திகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க!

 

திபங்கர் பட்டாச்சார்யா

பொதுச் செயலாளர்

இகக(மாலெ) (விடுதலை