இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஆளும் வர்க்கத்தினரின் அலட்சியமும் 
                                                                                                                
அரபு வசந்த எழுச்சியைப் போன்று மேலெழுந்து வரும் மக்கள் போராட்டங்கள்
கடந்த சில நாட்களாக இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்ற 2019ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிய கோத்தபய ராஜபக்சே மீது தற்போது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. அவரைப் பதவி விலகக் கோரி, அவருடைய இல்லத்தின் முன்பு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதிபர் மாளிகையின் முன்பு பத்துக்கும் அதிகமான போராட்டப் பந்தல்கள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக போராட்டப் பந்தல்கள் முளைத்த வண்ணம் உள்ளன. இந்த அரசாங்கம் போதுமான "எதிர்வினையாற்றத் தவறிவிட்டது" என்ற குற்றச்சாட்டு பரவலாகி வருகிறது. புதிய புதிய போராட்டங்கள் பல இடங்களுக்கும் நாளுக்கு நாள் பரவுகிறது. கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கடற்கரை பகுதியில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியப் போராட்டக்காரர்கள் "திருடன் கோத்தாவே வீட்டுக்குப் போ" என முழக்கமிட்டனர். கருப்பு உடையணிந்து கோரிக்கை அட்டைகளைத் ஏந்திக் கொண்டு, "அவர்கள் நம் நாட்டை சீரழித்து விட்டனர். நமக்கு இந்த அரசாங்கம் வேண்டாம்" எனக் கூறிய இளைஞர்களின் பெருங்கூட்டம் காலனி காலத்து அதிபரின் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றது. சிங்களப் பேரின வாதத்தை ஆயுதமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆட்சியாளர் களின் பிரித்தாளும் சூழ்ச்சி அம்பலப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. பல உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிக்கைகளும் இந்த எழுச்சிமிகு மக்கள் போராட்டத்தை "அரபு வசந்தத்துடன்" இணைத்து எழுதுகின்றனர். ஆக, தொடர்ந்த, நீடித்த போராட்டங்களை  வரவிருக்கும் நாட் களில் இலங்கையில் காணலாம். 
இந்தப் போராட்டங்கள் ஏன்?
இலங்கையில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு உருளைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றைப் பெற நீண்ட வரிசைகளிள் மக்கள் காத்துக் கொண்டிருக்கி றார்கள். அவற்றின் விலையோ பல மடங்கு உயர்ந்துவிட்டது. திருமதி.சுகிரா, சுட்டெரிக்கும் வெயிலில் நான்கு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தார். "நல்லவேளை எனக்கு கிடைத்துவிட்டது" என நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்னார். பலருக்கும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் சிலர் தங்கள் உயிரையும் இழந்துவிட்டனர். ஒரு தேநீரின் விலை நூறு இந்திய ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலையோ ரூ.300ஐ நெருங்கி விட்டது. பலர் தேநீர் குடிப்பதை மறந்துவிடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டனர். ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின்வெட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து விட்டதாலும், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டதாலும் உணவகங்கள், பேக்கரிகள் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டன. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுகின்றன. காகிதங்கள், அச்சடிக்கும் பொருட்களின் தட்டுப்பாட்டால் தினசரி பத்திரிக்கைகள் வெளிவருவது தடைப்பட்டுள்ளது. பள்ளிகள் தேர்வுகளை நிறுத்தி வைத்துள்ளன. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300 ஆக உயர்ந்து, அதன் மதிப்பு வீழ்ந்துவிட்டது.
இந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணிகளாக "சீனாவின் கடன் பொறியில் சிக்கிக்கொண்ட இலங்கை", "ரஷ்யா உக்ரைன் போர்" போன்றவற்றை மேற்கத்திய ஊடகங்கள்  பரப்புரை செய்கின்றன. சுதந்தரத்திற்குப் பிறகான இலங்கையின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கு பவர்களுக்கு இந்த நெருக்கடியின் ஊற்றுக் கண்ணை காணுவதில் சிக்கலேதும் இருக்காது. என்றாலும் சில உடனடிப் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
காற்றில் கரைந்து போன அந்நியச் செலாவணிக் கையிருப்பு
ஏற்றுமதியும் சுற்றுலாவும் மட்டுமே இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் மிக முக்கியமான தொழில்களாகும். மொத்த உள் நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி 23 சதவீதமாகவும், சுற்றுலா 12 சதவீதமாகவும் உள்ளன. மிகப் பெருமளவு தேயிலை, ரப்பர், தேங்காய், மசாலா பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில் முக்கிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரையையும் மருந்து களையும் பெட்ரோலியப் பொருட்களை முழுமையாகவும் இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளுக்கு, உலக சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, இந்த ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு சமீப ஆண்டுகளில் பாரதூரமாக அதிகரித்துவிட்டது. ஆக, இறக்குமதி செய்யப்படும் அவசியமான பொருட்களோடு, ஆடம்பர சொகுசுகார்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யவும் அதிகப்படியான அந்நியச் செலாவணி செலவழிக் கப்பட்டது.
2019ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு களால் (இதற்கு கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது) ஏற்கனவே சுற்றுலா பயணிகளின் வருகை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதேவேளையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப் பட்ட முழுஅடைப்பின் விளைவாக, சுற்றுலா விலிருந்து கிடைத்த வருமானம் முழுவதும் நின்றுவிட்டது. மேலும், வெளிநாடு களில் நிகழ்ந்த வேலை இழப்பின் காரணமாகவும் அந்நியச் செலாவணி வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. 
திடீர் இயற்கை விவசாயத்தால் நிகழ்ந்த விபரீதம்
அந்நியச் செலாவணி கையிருப்பை தக்கவைக்கவும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு காரணமெனவும் நம்பப்பட்ட செயற்கை உரங்களின் இறக்குமதிக்கு மே 2021ல் திடீரென தடைவிதிக்கப்பட்டது. ஒரே இரவில் இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த விவசாயமும் இயற்கை முறைகளுக்கு மாற்றப்பட்டது. அப்போதே அதற்கு எதிராக விவசாய அறிவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிபருக்குக் கடிதம் எழுதினர். உணவுப்பாதுகாப்பு, விவசாய வருமானம், ரப்பர் ஏற்றுமதியால் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் ஆகியன பாதிப்புக்குள்ளாகும்; கிராமப்புற வறுமை அதிகரிக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித் தனர். ஆனாலும் அறிவியலுக்கு புறம்பான இந்த நடவடிக்கை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது. இதனால் அடுத்தடுத்த விளைச்சலில் நெல், சோளம், தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது. நெல் உற்பத்தியில்  மட்டும் 40 முதல் 45% வரை இழப்பு ஏற்பட்டது. கால்நடைத் தீவன உற்பத்தியும் குறைந்தது. இறைச்சித் தட்டுப்பாடு நிலவி சில்லறை வர்த்தகத்தில் இறைச்சி விலை யேற்றம் அதிகரித்தது. இந்த பின்விளைவுகளால், நவம்பர் 2021ல் இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு இது பெருத்த நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. 
சர்வதேச நாணய நிதியத்தின் (சநாநி) கடன் என்னும் விஷச்சுழல் 
1977ல் துவங்கி இதுவரையிலும் பல முறைகள் இலங்கை சநாநியிடம் கடன் வாங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் சநாநி, இலங்கைக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. நாணய மாற்றில் தாராள (மற்ற நாட்டு நாணயங்களுக்கு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு இலங்கை நாணயத்தை மாற்றும் போது அதன் மதிப்பை குறைத்துக்கொள்வது) அணுகுமுறை, இலங்கை ரூபாயின் மதிப்பை குறைப்பது, விலைக் கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுவது, உணவு மானியங்களை வெட்டுவது, கூலி உயராமல் தடுப்பது, வட்டி விகிதங்களை குறைப்பது, தனியார் நிறுவனங் களை ஊக்கப்படுத்துவது, அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, அரசாங்க செலவினத்தைச் சுருக்குவது, போன்ற பொருளாதாரச் சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் கடன் வழங்கப் படுகிறது. இப்படியானக் கடன்களிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது என்பது இயலாத ஒன்று.
தாராளமயமும் சிங்களப் பேரினவாதமும்
இப்படியான நவதாராளவாத பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் காரணமாக 1970களில் இலங்கையில் மக்களின் வருமானம் வீழ்ச்சி யடைந்தது. வருமானத்தில் சமத்துவமின்மை உருவாகியது. இந்தப் பின்னணியில் நிகழ்ந்த பொருளாதார இடர்பாடுகளால் வெளிப்பட இருந்த மக்களின் கோபத்தை திசைதிருப்ப வேண்டிய அவசியம் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டது. அதனை சமன் செய்ய, சிறுபான்மை தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாகுபாடு காட்டப்பட்டது. அரசு ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலை அரங்கே றியது. தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரின வாத அரசின் இனவெறித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் போக்கில், தமிழீழ விடுதலை இயக்கங்கள் உருவாகி உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. 1983 முதல் 2009 வரை நிகழ்ந்த போரில் 80,000 முதல் 1 லட்சம் வரையிலான தமிழீழ விடுதலைப் போராளிகள், அப்பாவித் தமிழர்கள், சிங்கள இராணுவத்தினர் உள்ளிட்ட வர்கள் கொல்லப்பட்டனர். போருக்காக சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்  செலவிடப் பட்டிருக் கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்நாட்டுப் போர் இலங்கைப் பொருளா தாரத் திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொடுத்தது.
நெருக்கடிக்குக் காரணமான, அதன் தீவிரத்தை கண்டுகொள்ளாத ராஜபக்சேக்கள் 
இலங்கையின் இந்த நெருக்கடிக்கு மற்றொரு முக்கியக் காரணகர்த்தாக்களாக இருப்பது ராஜபக்சே குடும்பத்தினரே. இப்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்சே, 2005&-2015ல் அதிபராக இருந்தபோது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீனாவிடமிருந்து  700 கோடி டாலர் கடன் வாங்கப்பட்டது. அதில் பெரும்பகுதியை இவர் ஊழலில் 'ஸ்வாஹா' செய்துவிட்டார். இப்போதைய அதிபர் 'த டெர்மினேட்டர்' கோத்தபய ராஜபக்சே 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் ஈழத்தமிழர்கள் மீது கடும் வன்முறையை நிகழ்த்தியவர். போருக்காக செலவிடப்பட்ட நிதியில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், இவர் 2019ல் ஆட்சிக்கு வந்தபிறகு பெருமளவிற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. உதாரணமாக, 28% இருந்த கார்ப்பரேட் வருமானவரி 24% என குறைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய நிதியமைச்சர் 'மிஸ்டர் டென் பெர்சன்ட்' என அழைக்கப்படும் பசில் ராஜபக்சே அரசாங்க ஒப்பந்தங்களில் 10% கமிசன் பெற்றிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், இந்தப் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தையோ, மக்கள்படும் வேதனைகளையோ அவர்கள் அங்கீகரிக்கவில்லை. பிறகு எப்படி அதனை எதிர்கொண்டு சமாளிக்கும் திட்டங்களை வகுப்பார்கள்?
இதனால் நகர்ப்புற அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டு மல்ல, நடுத்தர வர்க்கத்தினரும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் உயர்நடுத்தர வர்க்கத்தினரும் கூட, நெருக்கடியின் வெம்மையை அனுபவிக் கின்றனர். புகழ்மிக்க விளையாட்டு வீரர்கள் கூட அறிக்கைகள் விடுமளவுக்கு நெருக்கடித் தாண்டவமாடுகிறது. ராஜபக்சே குடும்பத்தினரின் நிதி முறைகேடுகளும், தான்தோன்றித்தனமான செயல்பாடுகளும் இன்றைய நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதை இவர்களுக்கு பெரும் அரசியல் ஆதரவு வழங்கிய சிங்களப் பெரும் பான்மை மக்களே தற்போது உணர்ந்துவிட்டனர். எதிர்க்கட்சிகளும் போராட்டப் பாதையில் குதித்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினர் பலர் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
நெருக்கடியிலிருந்து மீள்வது எப்படி?
இந்த நெருக்கடியிலிருந்து மீள, உடனடி நடவடிக்கைகளாக மீண்டும் கடன் வாங்கும் சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா 100 கோடி டாலர் கடனுதவி அளித்திருக்கிறது. மேலும் 150 கோடி டாலர் கடனுதவி அளிப்ப தற்கான திட்டமும் உள்ளது. மேலும் அத்தியா வசியப் பொருட்கள் உள்ளிட்ட வேறுபல உதவிகளும் அளித்து வருகிறது. இலங்கை நிதியமைச்சர், சீனா உள்ளிட்ட வேறுசில நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளார். ஆனாலும், இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள சவாலை எதிர்கொள்ளத் தேவையான நீண்டகாலத் திட்டங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏகாதிபத்திய சார்பு நவதாராள பொருளாதாரக் கொள்கைகள், திருப்பிச் செலுத்த முடியாத அளவு கடன்கள், இனப்பாகுபாடு ஆகியவற்றுக்கு மாற்றாக அனைத்துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கிய, மக்கள் சார்பு பொருளாதாரத் திட்டங்கள் மட்டுமே இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீட்கும் வழியாக இருக்கமுடியும்.
இந்தியாவுக்கு இதுவொரு பாடம்.
இலங்கையில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து எழுச்சி பெற்றுள்ள இலங்கை மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த (மக்கள்) இயக்கத்தை அவசரநிலைப் பிரகடன அறிவிப்பின் மூலம் ஒடுக்க முனையும் முயற்சிகளையும் கண்டிக்கிறோம்.  மத்தியக் கமிட்டி, இகக(மாலெ) லிபரேஷன்