சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

செய்திகளும் பாடங்களும்

விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னணியில், பிப்ரவரி&மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் பஞ்சாபும் அதிகபட்ச கவனத்தைப் பெற்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய இதயப் பகுதி தான் மோடி அரசாங்கம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அளவுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்தது. விவசாயிகள் போராட்டத்திற்கு தார்மீக ரீதியில் மட்டும் ஆதரவளித்த ஆம் ஆத்மி கட்சியை விவசாயிகள் இயக்கம் உந்தித் தள்ளியதன் மூலம் அக்கட்சி பஞ்சாபில் ஏகோபித்த வெற்றியடைந்துள்ளது அதே போல் உத்தர பிரதேசத்தில் பாஜக, விவசாயிகள் இயக்கத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தி தன்னுடைய இழப்பை கட்டுக்குள் நிறுத்தி வைத்ததையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.பாஜக ஆட்சியில் இருந்த உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே உரிய சொந்த கதைகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் 2024 பெரிய போராட்டக் களத்திற்கு முன்னோட்டமாக, முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதை வைத்து இந்த சுற்றில் அது வசதியாக வெற்றி பெற்றுவிட்டதாக சொல்கிறது. ஆனால், கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் அது பாஜகவால் வழிநடத்தப்படும் மாநில அரசாங்கங்களுக்கும் மோடி ஆட்சிக்கும் எதிராக வெகுமக்கள் அதிருப்தி குவிந்து கிடப்பதையும், செயல் துடிப்புள்ள எதிர்க்கட்சி மற்றும் அரசியல் மாற்றத்திற்கான தாகம் இருப்பதையும் காட்டுகிறது.உத்தரகாண்டில் வெகுமக்கள் மனோநிலையை அறிந்திருந்த காரணத்தால்தான் பாஜக இரண்டு முறை மாநில முதலமைச்சரை மாற்றியது. இப்போது முதலமைச்சர் பதவியில் இருப்பவர் தோல்வியை தழுவிய போதிலும், பாஜக 2/3 பாகம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசின் பலவீனங்கள் அதற்கு சாதகமாக அமைந்தது. கோவாவும் கூட பாஜக அல்லாத அரசாங்கத்தை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருந்ததன் விளைவு பாஜகவுக்கு இன்னொரு முறை ஆட்சி அமைக்க வழி கோலி விட்டது. இந்த சுற்றில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருந்த போதிலும் எதிர்க்கட்சிகளுக்கும் குறிப்பாக களத்தில் இருக்கும் மக்கள் இயக்க சக்திகளுக்கும் தெளிவான ஆதாயங்களும் ஏராளமான படிப்பினைகளும் கிடைத்திருக்கின்றன.

 உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் பற்றி நெருக்கமாகச் சென்று பார்ப்பதற்கு முன்பாக, மாநில தேர்தலை குறிக்கின்ற பரந்து விரிந்த முறைகேடுகள் பற்றி நாம் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் இது மிகவும் சமமற்ற வகையில் நடைபெற்ற ஒன்றாகும். வெறுப்பு பேச்சுக்கள், அரசாங்க இயந்திரத்தை பெருமளவில் தவறாக பயன்படுத்தியது, தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது ஆகியவற்றின் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை ஒட்டுமொத்தமாக கேலிக்கூத்தாக்கியது. அடுத்து பாதுகாப்பு அறை அத்துமீறல்கள் பற்றி கவலை அளிக்கும் செய்திகள் வந்தன. அது வாக்கு இயந்திரம் சேதபடுத்தப்பட்டிருக்குமோ அல்லது மாற்றி வைக்கப்பட்டிருக்குமோ? என்ற காத்திரமான ஐயப்பாடுகளை உருவாக்கியது.இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு தேர்தல் நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் வேலையை செய்திருக்க வேண்டும். ஆனால், பாஜக பற்றியும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் பலவீனமான நிலை பற்றியும் தெரிந்திருப்பதால் இவைகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றாகவே உள்ளது. இதற்கான பதில் இந்த முறைகேடுகளை கடந்து வரும் அளவுக்கு சக்தி மிக்க மக்கள் இயக்கத்தை கட்டமைப்பதில் இருக்கிறது. அல்லது அப்படி முடியாது என்றால் குறைந்தபட்சம் அதை செயலிழக்கச் செய்யவாவது வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் பல தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. பாஜக வும் அதன் கூட்டாளிகளும் 31 தொகுதிகளில் 5000 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவற்றில் 7 இடங்கள் 500க்கும் குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள இடங்களாகும். அதேசமயம் பாஜக 21 இடங்களில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வி கண்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் குறைவான வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது, ஏஐஎம்ஐஎம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்குகள் பல இடங்களில் தேர்தல் முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாக அமைந்ததிருக்கின்றன. 2017 தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் இம்முறை 95 வேட்பாளர்களை நிறுத்தியது. ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் குறைந்தபட்சம் 7 இடங்களில் சமாஜ்வாதி&-ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சிக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை சீர்குலைத்து விட்டது. பிஎஸ்பி யின் வாக்கு கிட்டத்தட்ட 10 சதம் சரிந்திருக்கிறது. எல்லா சமிக்கைகளையும் வைத்துப் பார்க்கும்போது பகுஜன் சமாஜ் கட்சி இழந்த பெரும் பங்கு வாக்குகள் பாஜக-வுக்கு நேரடியாக ஆதாயமா கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் பிரச்சாரமும் முதன்மையாக சமாஜ்வாதி கட்சிக்கு எதிரானதாக இருந்தது. இதுவரை இல்லாத மோசமான தேர்தல் செயல்பாட்டுக்கு பின்னரும்கூட, யோகியின் ஐந்தாண்டுக் கொடூர ஆட்சி, தலித்துகளுக்கு எதிரான அதிகரிக்கப்பட்ட வன்கொடுமைகள் என்ற பின்புலத்தில் பாஜக வை எதிர்கொள்ள தவறியதை சுயபரிசோதனை செய்து கொள்வதற்குப் பதிலாக மாயாவதி, முஸ்லிம்கள் கட்சியை விட்டு சென்று விட்டார்கள் என்று சொல்லி அவர்கள் மீது பழி சொல்கிறார்.யோகி ஆதித்யநாத் அரசாங்கத்துக்கு எதிரான வெகுமக்கள் அதிர்ப்தியிலிருந்து, குறிப்பாக லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவத்தின் போது ஏற்பட்ட விவசாயிகளின் கோபாவேசம், வேலையின்மைக்கு எதிரான இளைஞர்களின் அதிர்ப்தியிலிருந்து எஸ்பி&ஆர்எல்டி கூட்டு பயனடைந்தது. முசாபர்நகர் & ஷாம்லி பிராந்தி யத்தில் மதவாத துருவ  சேர்க்கையின் கூர்முனையை விவசாயிகள் இயக்கம் மழுங்கடித்திருந்தது. 2013-இல் மோசமான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டமைத்த சிலர் தோற்றுப் போயுள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பெரும் பகுதிகளில் அதிலும் குறிப்பாக மக்கள் பெரும் தொற்று, முழு அடைப்பு என்று இரட்டை தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, களத்தில் எதிர்க்கட்சிகளின் இருத்தல் இல்லவே இல்லை. பாஜகவின் "பயனாளிகள் அரசியல்", அதேபோல் நலத்திட்டப் பயனாளிகளை பாஜகவுக்கான வாக்கு வங்கிகளாக்கிக்கொள்வது என்பது இன்னுமொரு சவாலாக முன்வந்திருக்கிறது. இந்த மாதிரியான "கொத்தடிமை வாக்காளர்"( bonded  voter ) முறை கிராமப்புற மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களை சமூக மாற்ற அரசியலுக்கான தூண்களாக வளர்த்தெடுக்க சிறப்பு அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து எதிர்ப்பை உருவாக்குவதையும், கிராமப்புற வறியவர் மத்தியில் கடுமையான எதிர் அணிதிரட்டலையும் கோருகிறது.நாட்டின் இடதுசாரி இயக்கத்திற்கு இது இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான பாடமாகும்.

      மிகவும் அதிர்ச்சியான தேர்தல் முடிவுகள் பஞ்சாபிலிருந்து வந்திருக்கிறது. 2012 ல் ஆம் ஆத்மி கட்சி எழுந்து வந்ததிலிருந்தே அந்த புதிய கட்சிக்கான உகந்த தலமாக பஞ்சாப் எப்போதுமே விளங்கி வந்திருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாபிலிருந்து அந்தக் கட்சி 4 இடங்களை வென்றது. 5 வருடங்கள் கழித்து அந்த எண்ணிக்கை 1 ஆக குறைந்துவிட்டது. 2017 ல் காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்திற்கு அடுத்த மூன்றாவது குறிப்பிடத்தக்க கட்சியாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எழுந்து வந்திருந்தது.2017ல் வெற்றிபெற்ற 20 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேர் கட்சியை விட்டுச் சென்றுவிட்டனர்.கட்சியும் எவ்வித எதிர்க் கட்சி பாத்திரத்தையும் மாநிலத்தில் ஆற்றவில்லை. ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மின் கட்டணத்தையும் குடிநீர் கட்டணத்தையும் குறைத்தது, அரசாங்க பள்ளிக் கூடங்களின் தரத்தை உயர்த்தியது ஆகியவற்றை செய்து காட்டியதன் மூலமும்  பகவத் மானை முதலமைச்சராக முன்னிறுத்தியதன் மூலமும் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.பஞ்சாப் காங்கிரஸ்&அகாலி ஆளுமைக்கு விடை கொடுத்து மிகப்பெரிய வாக்குப் பலத்துடன் ஆம் ஆத்மி கட்சியை வரவேற்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஒரு பிரிவு விவசாயத் தலைவர்கள் தேர்தல் போட்டியில் குதித்ததானது வெகுமக்கள்  ஆதரவை பெற தவறிவிட்டது.

பஞ்சாப் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்திய அரசியலின் எதிர்காலத் துக்கும் ஆகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆம் ஆத்மி கட்சி அடிப்படையில் மைய- வலது மென்மையான இந்துத்துவா சட்டகத்துக்குள் நின்று கொண்டு  நகர்புர அரசாளுமை(municipal  governance )  என்பதை அடிப்படையில் வளர்த்தெடுக்கக் கூடிய கட்சியாகும். சமீப ஆண்டுகளில் நடைபெற்ற சக்திவாய்ந்த மாணவர், குடிமக்கள் இயக்கத்தி லிருந்து, டெல்லியை உலுக்கிய விவசாயிகள் இயக்கத்திலிருந்தும் ஆம் ஆத்மி கட்சி விலகியே இருந்தது.

மூர்க்கத்தனமான மதவாத வன்முறை பிரச்சாரம், அரச ஒடுக்கு முறையின் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்புகளும் நடந்து டஜன் கணக்கில் செயல் வீரர்களும் அப்பாவி குடிமக்களும் புனையப்பட்ட வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்ட போதும் நீதிக்காகவும் அமைதிக்காகவும் குரல் கொடுக்கக் கூட மறுத்துவிட்டது.பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சிக்கு முற்றிலும் மாறுபட்ட மாநிலமாக இருக்கும். அது ஒரு முழுமையாக மாநிலமாக மட்டும் இல்லை. அது வேறு வேறு அரசியல் மனப்போக்குகளை கொண்டதாக,கார்ப்பரேட் எதிர்ப்பு விவசாய இயக்கத்தின் மூலமோ, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப் பட்டதற்கு எதிரான அல்லது கூட்டமைப்பு வாதம் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான வெகு மக்கள் இயக்கம் மூலமோ பாசிச எதிர்ப்பு இயக்கத்தை வளர்ப்பதில் முன்னணியில் நின்றிருக்கிற மாநிலமாகும்.

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனது ஆட்சி காலத்தை பகத்சிங், அம்பேத்கரின் மரபுகள் பற்றி உரத்துச் சொல்லி பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் மந்திரிசபை பதவியேற்போடு துவங்கியிருக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தின் அனுபவம் என்பது அதன் அரசியல் எதிர்காலத்திற்கு மாபெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு அக்கம்பக்கமாகவே பஞ்சாப் பாஜகவின் கவலையளிக்கும் வளர்ச்சியையும் கண்டு வருகிறது. செல்வாக்கு மிக்க அகாலி தளத்திற்கு இளைய கூட்டாளியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கும் பாஜக, புதிய சூழலை ஆனமட்டும் கைப்பற்றிக்கொண்டு தனது இருத்தலை வலுபடுத்திக் கொள்ளவும் பஞ்சாபில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவும் முயற்சிக்கும். பகத்சிங், அம்பேத்கர் முற்போக்கு மரபின் உண்மையான வாரிசுகளான பஞ்சாபின் இடதுசாரிகள் காலத்தின் தேவைக்கேற்ப எழுந்து நின்று  பஞ்சாபின்அரசியலிலும் அரசாளுகை யிலும் முற்போக்கு மாற்றத்திற்கான மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக முன்னணி பணியாற்ற வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தல் பாடங்களின் வெளிச்சத்தில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சி சக்திகள் 2024 ஆம் ஆண்டுக்கான தயாரிப்புகளை முடுக்கிவிட வேண்டும்.

லிபரேஷன் ஏப்ரல் 2022 தலையங்கம்

தமிழாக்கம் & தேசிகன்