திமுக அரசின் நிதிநிலை அறிக்கையும்

திராவிட மாதிரி ஆட்சியும்

   --   பாலசுந்தரம்

திமுக அரசாங்கத்தின் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை பற்றி முற்றிலும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து கருத்து வந்துள்ளது. புகழ்பெற்ற குருதிப்புனல் நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசுபெற்ற இந்திரா பார்த்தசாரதி, நிதிநிலை அறிக்கையை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். 91 வயதுடைய அவரது வாழ்வில், அவர் கண்ட 'மிகச் சிறந்த மாநில நிதிநிலை அறிக்கை, இது என்று பாராட்டி உள்ளார். “பொதுவாக நிதிநிலை அறிக்கையை நிதித்துறை செயலாளர்தான் தயாரிப்பார், ஆனால் இந்த நிதிநிலை அறிக்கை, நிதி நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்தி ருக்கும் ஒரு அரசியல் தலைவரால் தயாரிக்கப் பட்டிருப்பதாகபாராட்டுகிறார். முதல்வர் ஸ்டாலினும் இலக்கிய ஆளுமை இந்திரா பார்த்தசாரதியின் பாராட்டை ஏற்று உடனடியாக அவருக்கு சுட்டுரை வழியே நன்றி தெரிவித் துள்ளார்.

99 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையை 111 நிமிடங்களில் வாசித்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் இருப்பது போல் ஆடம்பர வெற்று வாய்வீச்சுகள் இல்லாமல் எளிமையான மொழியில் இருக்கிறது. சுற்றிவளைத்துப் பேசாமல் விஷயத்திற்கு நேரடியாக வந்து விடுகிறது. இதற்காக நிதியமைச்சரை பாராட்டலாம்.

இது திராவிட மாதிரி அரசின் நிதிநிலை அறிக்கை என்று அடித்துக் கூறுகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரது உரையி லிருந்தே எடுத்துக் காட்ட வேண்டுமாயின், (இந்த நிதிநிலை அறிக்கைக்கு) “...அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் இலக்கணமாகத் திகழ்பவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, அவரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றனஎன்று நிதியமைச்சர் கூறுகிறார். இதை வெளிப்படுத்து வதுபோல, பெரியார் சிந்தனைகளை 21 மொழிகளில் அச்சிட்டு வெளியிட நிதிநிலை அறிக்கை ரூ 5 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முக்கியமான முன்னெடுப்பு. பெரியாருக்கு, பகுத்தறிவுக்கு எதிராக பிற்போக்கு பாசிச சக்திகள் பேயாட்டம் ஆடும் சூழலில், திராவிட இனத்துக்காரன் என்று கூறும் முதல்வரின் ஆட்சியில் மிகவும் முக்கியமான நடவடிக்கை. ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் பெரியாரை படித்து பின்பற்ற வேண்டியது அதைவிட முக்கியமானது.

இந்த நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமாக சொல்லப்படுவது, நிதிப் பற்றாக்குறை ரூ 7000 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பதாகும். 2014 முதல் சீர்குலைக்கப்பட்டுள்ள நிதிநிலை, கொரோனா நெருக்கடி உள்ளிட்டவற்றால் உருக்குலைந்து போயுள்ள விவசாய, தொழில் பொருளாதாரம், கடுமையான வேலைஇல்லா திண்டாட்டம், திமுகவின் வானளாவிய தேர்தல் வாக்குறுதிகள், மக்களது பெரும்எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு மத்தியில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உரிமைத் தொகை. இப்படிப்பட்ட வாக்குறுதிகள் செயலுக்கு வந்திருந்தால் செலவுகள் கூடியிருக்க வேண்டும். மாறாக நிதிப் பற்றாக்குறை ரூ.7000 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் தலைசிறந்த வங்கியாளர், பொருளாதார வல்லுநர் எனவே அவரால் இதை செய்ய முடிந்திருக்கிறது என்று பாராட்டுபவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் உண்மையான காரணம், செய்யவேண்டிய செலவுகள் குறைக்கப்பட்டி ருப்பதுதான். எடுத்துக்காட்டாக 'தாலிக்கு தங்கம்' எனும் திட்டம் நீக்கப்பட்டு பெண் உயர்கல்விக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை என்பது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் வரவேற்புக்குரியதே. பெண்கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவை குறித்து நிதிநிலை அறிக்கை பாராட்டத் தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்திரா பார்த்தசாரதி கூறுகிறார். உண்மைதான்.

முதலமைச்சர் ஸ்டாலின், 'தாலிக்கு தங்கம்' திட்டம் மாற்றப்படுவது குறித்து சட்டப்பேரவை யில் பேசும்போது, தாலிக்கு தங்கம் திட்டத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். வெறும் 24.5% பேரே தகுதி யுடையவர்கள் என்று கூறினார். அதிமுக ஆட்சிகாலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல் படுத்தப்படவில்லை என்று அம்பலப்படுத்திய அமைச்சர் ஒருவர், இதுவரை 3.5 லட்சம் பேர்களுடைய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதென்றும் கூறினார். அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக ஆட்சி முடக்குகிறது என்று ஓபிஎஸ் கூறிய குற்றச் சாட்டை முதல்வர் மறுத்தார். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று நம்புகிறவர்கள் நாங்கள் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார். செந்தில்பாலாஜி, சேகர்பாபுவை மனதில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அப்படி கூறியிருப்பார் போலும்!

ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பயன்பெறும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் செலவு அதிகம். முதலமைச்சரின் கூற்றுப்படி, ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் பயன்பெறும் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் செலவு குறைவு (ஆண்டுக்கு 60 கோடி, நேரடி பணமாற்றம்). தரவுகள் தூய்மைத் திட்டம் என்ற ஒரு நிர்வாக சீர்திருத்தத்தை நிதியமைச்சர் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்துல்லியமான தரவுகள் மூலமாக உண்மையான பயனாளி களுக்கு திட்டத்தின் பலன்களை கொண்டு சேர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கான உரிமைத்தொகை மாதம் ரூ. 1000 பற்றி வெளியில்  ஆவேசமாக பேசிய அதிமுக, பாஜக கட்சிகள் சட்டப் பேரவையில் ஆவேசமாக எழுப்பவில்லை. மக்கள் நீதி மய்யத்தால் முன்வைக்கப்பட்டு திமுகவால் கைப்பற்றப்பட்ட இந்த வாக்குறுதி குறித்து, “பயனாளிகளின் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது. நிதி நிலமை முன்னேறியதும் வழங்கப்படும்என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது. எல்லாருக்கும் இல்லை, உரியவர் களுக்குதான் என்பது இதிலுள்ள செய்தி. இதிலும் செலவைக் குறைப்பதுதான் நிதிநிலை அறிக்கை யின் திட்டமாக உள்ளது. சமூகநலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கங்கள் அனைத்துமே சமீப காலங்களாக பயன்படுத்தும் சொல்லாடல் 'உரியவர்களுக்கு உரியது சென்று சேரவேண்டும்' என்பது. அரசாங்கம் ஒருரூபாய் செலவு செய் தாலும் அது முழுமையாக மக்களுக்குச்  சென்று சேர வேண்டுமென்று முதலமைச்சர் சொன்னதன் பொருளை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும். திட்டத்தை உரிய பயனாளிக்கு கொண்டு சேர்ப்பது, அல்லது கசிவு எதுவும் இல்லாத விநியோகம் என்பது இதற்கு பெயர். நிதிநிலை அறிக்கையில் கோடுபோட்டுக்காட்டப்பட்டுள்ள இந்த அணுகுமுறையின்படி வரும் நாட்களில் பல திட்டங்கள் புதிய பெயர்களுடன் காணாமல் போகலாம். ஆக நிர்வாக சீர்திருத்தம் என்பது சீர்திருத்தப் பொருளாதாரம் தொடர்புடையது. சமூகநலத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு பதிலாக வெட்டிச் சுருக்குவதாகும்.

வேலைவாய்ப்பு:

சட்டப்பேரவை முடிந்தவுடன் முதலமைச்சர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றில் கலந்து கொண்டார். தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கினார். அதில் பேசிய முதல்வர், மாவட்டம்தோறும் இது போன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துமாறு அமைச்சர் கணேசனுக்கு வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமில் 72,460 பேர் கலந்து கொண்டு 8,752 பேர் தேர்வு பெற்றுள்ளனர் (12%). திமுக ஆட்சிக்கு வந்த மே 2021 முதல், இதுவரை 36 மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் 297 வேலைவாய்ப்பு சந்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். 41,200 பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர் (16%). இந்த வேலைகளின் தரம் என்ன? சம்பளம் என்ன என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத ரகசியம். 7,832 குரூப் நான்கு பணியிடங்களுக்கு 25 லட்சம் பேர் தேர்வுஎழுதக் கூடும் என்று தேர்வாணையத் தலைவர் கூறியுள்ளார். இதிலிருந்து வேலை இல்லா திண்டாட்டத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் முதல்வர், மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு  முகாம் நடத்தச் சொல்கிறார்.

நிதிநிலை அறிக்கை, முதல்வரின் கனவுத் திட்டமானநான்முதல்வன்திட்டம் பற்றி பேசுகிறது. ஆண்டுதோறும் 5லட்சம் பேர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பயிற்சி தனியார் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. தொழிற் சாலைகளுக்கு தேவைப்படும் திறன்பெற்ற உழைப்பை தயார் செய்து தருவதே அரசின் கடமையாக இருக்கிறது. அரசு செலவில் தனியார் நிறுவனங்கள், திறன்பெற்ற உழைப்பாளர்களை பெறும். ஆனால், அரசுத்துறையிலுள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவது, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பல லட்சக்கணக்கான சத்துணவு, அங்கன்வாடி, ஆசிரியர், தூய்மைப் பணியாளர், செவிலியர், மருத்துவர், உள்ளாட்சி அமைப்பு பணியாளர் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்துவது பற்றிய அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லை.

துபாய் வரை சென்று முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதார மாக மாற்ற உறுதிபூண்டுள்ள முதல்வரின் ஆட்சியில் தொழிலாளர் வேலை நிலமை, சம்பளநிலமை, எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில், மோடி ஆட்சி, 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத்தொகுப்பு களாக சுருக்கி தொழிலாளரை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். திமுக அரசு அதற்கு விதிகளை உருவாக்கும் பணியிலீடுபட்டிருக்கிறது. எனவேதான், ஏஅய்சிசிடியு தொழிற்சங்கம், மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அந்த சட்டத் தொகுப்பு களை ஏற்று விதிகள் உருவாக்கக்கூடாது என்று தொழிலாளர் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், கடைகளில் பணியாற்றுவோர் பணியில் லாதபோது உட்கார்வது அவர்களது உரிமை என்று பாராட்டக் கூடிய விதியை உருவாக்கிய தொழிலாளர் நல அமைச்சர், தொழிலாளருக்கு பாதிப்பு இல்லாமல் விதிகள் உருவாக்கப்படும் என்று கூறி அந்த வேண்டுகோளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விட்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பற்றி பேசுகிற நிதிநிலை அறிக்கை, தொழி லாளரை வெளித்தள்ளும் வளர்ச்சிபற்றி சிந்திக் கிறதோ என்ற அய்யம் தோன்றுகிறது.

மார்ச் 28, 29 அகில இந்திய வேலை நிறுத் தத்தை தமிழக உழைக்கும் வர்க்கம் மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. அதற்கு அரசு போக்குவரத்துத் தொழிலாளரது பங்கு மிக முக்கியமானது. இது தொழிலாளர் விரோத மோடி ஆட்சிக்கு தமிழக தொழிலாளார் வர்க்கத்தின் தீவிரமான எதிர்ப்பாகும். ஆனால், தொழிலாளர் முன்னேற்ற பேரவை (எல்பிஎப்) தொழிலாளர் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் பற்றி நிதிநிலை அறிக்கை கண்டு கொள்ளவில்லை. அது ஏனென்று தெரிய வில்லை. தொழிலாளர் மானியக் கோரிக்கையின் போது தொழிலாளர் வரக்கத்தின் நியாயமான அவசர கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்று தொழிலாளர் காத்திருக்கின்றனர். அவர்களது காத்திருப்பை அரசு கண்டுகொள்ளாவிட்டால் போராட்டக் களத்தில் குதிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்போது அரசு உருவாக்க இருக்கும் விதிகள் எதிராக வருமா? அதுபோலவே, எதிர்பார்த்து காத்திருக்கும் கிராமப்புர தொழிலாளர், இளைஞர், மாணவர் என பல பிரிவினரும் 'விதிகள்' எதுவானாலும் வீதிக்கு வருவது இயல்பானது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் பரப்புரையில், “திராவிட மாதிரிபற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் முடிந்த சமயத்தில் தங்களின் புத்தகத்தை வெளி யிட்ட கலையரசனும் விஜயபாஸ்கரும் சுண்டி விட்ட திராவிட மாதிரியை திமுக தலைவர் ஸ்டாலின் பிடித்துக் கொண்டார். பொருளாதார சீர்திருத்தங்களால் வெளியே தள்ளப்பட்ட பிரிவினரை, வறிய, விளிம்புநிலை சமூகத்தினரை சமூகநலத்திட்டங்களால் உள்ளிழுத்துக் கொண்டது தான் 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி', "திராவிட மாதிரி வளர்ச்சி" என்று இவர்கள் கூறுகிறார்கள். “உங்களில் ஒருவன்சுயசரிதை புத்தக வெளியீட்டின் போது பேசிய முதல்வர் இந்தியா முழுவதும் சமூகநீதி விதையை விதைப் பதுதான் தனது லட்சியம் என்று கூறினார். அவரது லட்சியத்தை குறைசொல்ல முடியாது. நல்ல லட்சியம்தான். ஆனால் அதற்கு முன்நிபந்தனை, தமிழ்நாட்டில் சமூக நீதி ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். எத்தகைய நவதாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களாலும் அடித்துச் செல்லப்படாத சமூகநீதியாக வேர்விடச் செய்ய வேண்டும். “தேர்தல் வாக்குறுதிகள் வேறு, பட்ஜட் சாத்தியங்கள் வேறுஎன்று கூறும் இந்திரா பார்த்தசாரதியின் வார்த்தைகள் இந்த 'திராவிட மாதிரி ஆட்சி'க்கு இலக்கணமாக அமைந்து விடக்கூடாது.