மதவாத வெறுப்புணர்வை பரப்புவதற்காக மானுட துயரத்தை இழிவுமிக்க வகையில் பயன்படுத்தும் படமேகாஷ்மீர் கோப்புகள்” ( காஷ்மீர் பைல்ஸ் )  -   திபங்கர்

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள், மார்ச் 11 அன்று, வெளியான விவேக் அக்னிகோத்ரியின் 'காஷ்மீர் கோப்புகள்' திரைப்படம் நாடு முழுவதும், குறிப்பாக, வட இந்தியாவில் சூறாவளியை உருவாக்கியிருக்கிறது.

அந்தத் திரைப்படத்தைப் பற்றி நாம் விவாதிப்பதற்குமுன், இரண்டு முக்கிய விசயங்கள் நம்முடைய கவனத்தைக் கோருகின்றன. முதலாவது, மோடி அரசாங்கத்தாலும் ஆர்எஸ்எஸ் &--பாஜகவினாலும் இப்படம் தீவிரமாக விளம்பரப் படுத்தப்படுகிறது. மோடியே இந்தப்படத்தை அங்கீகரித்துள்ளார். மேலும் இப்படத்தின் விமர்சகர்களைக் குறிவைத்து தாக்கியுமுள்ளார். பாஜக தலைமையிலான பல்வேறு மாநில அரசாங்கங்கள், இப்படத்திற்கான நுழைவுச்சீட்டு வாங்கியுள்ளதை காண்பிக்கும் அவர்களது ஊழியர்களுக்கு, சிறப்பு விடுப்பு அளித்துள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் பாஜகவின் தலைவர்கள் பார்வையாளர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இந்து மேலாதிக்கப் பரப்புரையாளர்கள் வெறுப்பு நிறைந்த வெறித்தனத்தை உருவாக்க இப்படத்தின் திரையிடலை பயன்படுத்துவது மன உளைச்சலை ஏற்படுத்தும் இரண்டாவது விசயமாகும். சில நேரங்களில், திரையரங்க வளாகங்களுக்குள்ளேயே, இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களை வலுக்கட்டா யமாக மணந்து கொண்டு இந்து குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று பலவந்தப் படுத்துவது உள்ளிட்ட, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறார்கள். வேறு சொற்களில் கூறுவதென்றால், இப்படத்தை திரையிடும் திரையரங்குகள் வெறுப்புணர்வை உற்பத்திசெய்யும் ஆலைகள் போல் தோற்றமளிக்கின்றன.

காஷ்மீர் பற்றிய உண்மையைக் காட்டும் நோக்கமுடையதாக கூறிக்கொள்ளும் இத்திரைப் படம்இன்றைய இந்தியாவின், சங் படைகளின் இஸ்லாம் விரோத வெறுப்பு பரப்புரைக்கு எரிபொருளாக்கிக் கொள்வதற்கு, முப்பது ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் பண்டிட்டு களுக்கு ஏற்பட்ட ஆழமான வலியை ஆயுதமாக் கிக்கொள்கிறது. இப்படம் காஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுவதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து அவர்கள் விரட்டப்படு வதாகவும் கிராஃபிக் காட்சிகளைக் கொண்டிருக் கின்றன. இனப்படுகொலை, பெரும் எண்ணிக்கை யில் வாழ்விடத்திலிருந்து வெளியேறுதல் என்ற சொற்றொடர்களை இந்தப் படம் பயன்படுத்தி யுள்ளது. மேலும், இந்தப் படம் கூறும் எண்ணிக் கைகள், காஷ்மீரி பண்டிட்டுகளின் அமைப்புகள், ஆர்எஸ்எஸ் வெளியீடுகள், நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அளித்த பதில் உள்ளிட்ட எந்த ஒரு ஆதாரங்களில் உள்ளவற்றை விடவும் மிக அதிகமாக உள்ளன.

விவரங்கள், எண்ணிக்கையிலுள்ள வேறு பாடுகளை விடவும் அதிகமாக, காஷ்மீர் சிக்கலின் ஒட்டுமொத்த பின்புலத்தையும் இப்படம் தவறாக சித்தரிக்கிறது. ஒருபோதும், மதவாத வன்முறை நிகழ்ந்த இடமாக காஷ்மீர் இருந்ததில்லை. காஷ்மீரின் பொதுப் பண்பாட்டை இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் அனைவருமே பகிர்ந்து கொண்டனர். மேலும், (மத இணக்கத்தை அடையாளப்படுத்தும் தனித்துவ மரபான) காஷ்மீரியாத் எனப்படும் பொது அடையாளத்திற்காக பெருமை கொண்டி ருந்தனர். பிரிவினைவாதத் தலைவர் மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டது, பெருமளவிலான தேர்தல் கேலிக்கூத்தையும் தொடர்ந்து, 1980களின் பிற்பகுதியில் காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கிய போது, அது இந்திய அரசையும், அரசாங்க நிறுவனங்களையுமே குறிவைத்துத் தாக்கியது. காஷ்மீரத்துப் பண்டிட்டுகள் எந்தளவு அபாயங் களை எதிர் கொண்டார்களோ அதே அளவு அபாயத்தை காஷ்மீரி இஸ்லாமியர்களும் எதிர்கொண்டனர்காஷ்மீரிலிருந்து வரும் எந்த வொரு அறிக்கையும் காஷ்மீர் துயரத்தின் இந்த அடிப்படை உண்மையை உறுதிப்படுத்துவ தாகவே உள்ளன.

காஷ்மீரில் உள்ள ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறைக்கு உடந்தையாக இருந்தனர் என்று இப்படம் சித்தரிக்கிறது. ஆனால் அந்தநேரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகளும், அங்கிருந்து தப்பித்தோடிய, அங்கேயே தங்கியிருந்த காஷ்மீரி பண்டிட்டுகளின் பழைய நினைவுகளும் சாட்சியங்களும் எவ்வாறு பல்வேறு காஷ்மீரி இஸ்லாமியர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்தும் தங்கள் இன்னுயிரை தந்தும் தங்களுடைய இந்துமத அண்டை வீட்டுக்காரர்களைக் காப்பாற்றினர் என்பதை தெரிவிக்கின்றன. அதிதீவிர வன்முறைக் காட்சிகள், அதிர்ச்சி யூட்டும் வகையில், தணிக்கைக் குழுவின் அனுமதிபெற்றுள்ள இக் காட்சிகள், பார்வையாளர்களிடத்தில் இஸ்லாமிய விரோத பயத்தையும், வெறுப்பையும் விதைத்து அவர்களது மனதைப் பாழாக்கும் சூழ்ச்சியுடன் காட்டப்படுகின்றன.

காஷ்மீரி பண்டிட்டுகளின் ஆழ்ந்த வலிகளை உண்மையிலேயே எடுத்துக்காட்டவும், அந்த சமுதாயத்திற்கு நீதி தேடவும் இப்படம் விரும்பி இருந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கின் மனித உரிமை செயல்பாட்டார்களும், காஷ்மீர் பற்றிய ஜனநாயக கருத்துரையாளர்களும் காஷ்மீரி பண்டிட்டுகளுமே காஷ்மீர் குறித்து தொடர்ந்து எழுப்பி வரும் அடிப்படையான கேள்வியை அது எழுப்பியிருக்க வேண்டும்: காஷ்மீரி பண்டிட்டுகளின் பெயரால் வாக்கு கேட்கும் பாஜக, இப்படத்தின் வழியாக அவர்களது துயரத்தை இழிவான முறையில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், 1990க்குப் பிறகான காலகட்டத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் கூட ஆட்சியதிகாரத்தில் பாஜக இருந்த போதும்கூட, முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் காஷ்மீரி பண்டிட்டுகள் ஏன் மீள்குடியேற்றம் செய்யப் படவில்லை? 1990களில் காஷ்மீரி பண்டிட்டுகள், காஷ்மீரி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தொடர்பான ஆவணங்கள் ஏன் அரசால் அமுக்கி வைக்கப்பட்டன? உண்மையிலேயே, அந்தத் துயரம் நிகழ்ந்தபோது மத்தியில், பாஜகவின் ஆதரவுபெற்ற விபி சிங் அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக இருந்த, பின்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பி னராகவும், வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த ஜக்மோகன் இருந்தார். பாஜகவோ அப்போது, மும்முரமாக ராமர் கோவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களுக்கு நீதி கிடைக்கவும் மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவும் காத்துக் கொண்டிருக்கையில் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தங்களின் சொந்த மண்ணில் அரசின் கைகளில் சொல்லொணாத் துயரத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாகிறார்கள்பெரும் எண்ணிக்கையில் காணாமலடிக்கப்படுவது, கொலை செய்யப்படுவது, பெரும் எண்ணிக் கையில் இரகசியமாகப் புதைக்கப்படுவது, சித்ரவதைகள், பாலியல் வன்முறை உள்ளிட்ட கொடுமைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்படு கின்றன. இப்படம், காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க வாஜ்பாய் காலகட்ட முயற்சிகளைக் கூட கேலி செய்வது போல் தெரிகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கிவிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பின்பு, மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ ஆட்சியைக் குறித்து இப்படம் முற்றாக மவுனம் காக்கிறது. இந்தப்படம், அரசாங்கங்களை நோக்கி கேள்வி எழுப்பவில்லை, அது அப்போது இருந்த அரசாங்கமானாலும் சரி இப்போது இருக்கிற அரசாங்கமானாலும் சரி. பாரூக் அப்துல்லா வையும் தேசிய மாநாட்டுக் கட்சியையும் வில்லனாகச் சித்தரிப்பதே இப்படத்தின் அரசியல் செயல்திட்டமாக உள்ளது. (தேசத்தின்) 'கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்துவது என்ற பேரால், அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைப்போல, யாசின் மாலிக்கை (இப்படத்தில் அவருடைய பாத்திரம் இழிபெயர் பெற்ற பிட்டா கராத்தேவோடு இணைத்து காட்டப்படுகிறது) தூக்கிலிடுவதற் கான கூச்சலை இப்படம் உருவாக்குகிறது. மேலும், காஷ்மீரி பண்டிட்டுக்களின் பிரச்ச னையைப் பயன்படுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (ஜேஎன்யூ), இடதுசாரி மாணவர் இயக்கங்கள், மனித உரிமை பரப்புரை யாளர்கள் ஆகியவர்களைக்  குறிவைத்துத் தாக்குகிறது.

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள படப் பிரதியில் ஜேஎன்யூ என்பதை ஏஎன்யூ என்று (அக்னிகோத்ரியே ஒப்புக்கொண்டதுபோல், சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கென்றே இவ்வாறு ஏஎன்யூ என்று மாற்றப்பட்டிருக்கிறது) பெயரிட்டிருக்கின்றனர். மேலும், இந்தியாவைப் பல துண்டுகளாக உடைக்க நினைக்கும் 'மூளைச் சலவை' செய்யப்பட்டவர்களின் கருத்தியல் புகலிடம் (ஜேஎன்யூ) என, பாஜக தகவல் தொழில்நுட்பத் துறையினரால் உருவாக்கப்பட்ட பிரதியாக ஜேஎன்யூ காட்டப்பட்டுள்ளது. தனது பெற்றோர்களை இழந்து, டெல்லியிலுள்ள தனது தாத்தாவால் வளர்க்கப்படும், வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட் மாணவர் ஒருவரின் பாத்திரத்தை இப்படம் உருவாக்கியுள்ளது. அந்த மாணவரின் பெற்றோர்கள் உண்மையிலேயே காஷ்மீரில் கொல்லப்பட்டார்கள் என்பதை அவரது தாத்தா அவரிடம் ஒருபோதும் சொல்லவில்லைமாறாக, அவர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டதாக மாற்றிச் சொல்கிறார். பல்கலைக்கழகத்திலோ அவர் ஒரு இடதுசாரி ஆசிரியரால் காஷ்மீர் இராணுவ மயமாக்கப்படுவது குறித்து 'மூளைச் சலவை' செய்யப்படுகிறார். அவருடைய தாத்தா இறந்த பின்பு அந்த இள வயது ஆண் காஷ்மீருக்குச் சென்று அக்னிகோத்ரியின் பிரதியின்படி உண்மையில் காஷ்மீரில் என்ன நடந்ததென்று கண்டுகொண்டபின் மனம் மாறிய மனிதனாக திரும்ப வருகிறார். அவருடைய ஆசிரியரை அம்பலப்படுத்தி, 'மூளைச்சலவை' செய்யப்பட்ட தன் சக மாணவர்களின் கருத்துக்களை மாற்றுகிறார்.

பாசிச பரப்புரைக்கும் அணிதிரட்டலுக்கும் திரைப்படங்கள் எவ்வாறு மையப்பணியாற்று கின்றன என ஜெர்மானிய நாஜிக்களின் வரலாறு நமக்குச் சொல்கிறது. லெனி ரீஃபென்ஸ்டால்-இன் அரசு உதவி பெற்றடிரம்ப் ஆப் வில்’ (விருப்பத்தின் வெற்றி) (1934 இல்  நுரெம்பர்க் நகரில் நடைபெற்ற நாஜிக்களின் பேரணி குறித்தது), ‘ஒலிம்பியா’ (1936 இல் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள் குறித்தது) ஆகியவை ஜெர்மன் மேலாதிக்கவாதம், யூதர்கள் விரோதம் என்னும் பாசிச செய்தியைப் பரப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆவணப் படங்களாகும். திரும்பத் திரும்பவும் முடிவற்றும் திறம்படவும் பொய்களைக் கட்டவிழ்த்து விடுவது என்ற கோயபல்ஸிய கோட்பாடுகளையே எப்போதும் சங்கப் படைகள் செயல்படுத்தி வருகின்றன. செல்லப் பிராணிகள் போன்ற ஊடகங்கள், மைய மற்றும் சமூக ஊடக உலகில் ஊடுருவியுள்ள பாஜகவின் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றின் வரிசையில் தற்போது விவேக் அக்னிகோத்ரியும் அவருடைய காஷ்மீர் ஃபைல்ஸ் (தொடர்ச்சியாக இதைப் போன்ற இன்னும்பல வெறுப்பைப் பரப்பும் திரைப்படங்கள் வருவதற்கான முன்னோட்டமே இது) திரைப்படத்தின் மூலம் இந்தியாவிலுள்ள பாசிச சக்திகள், வெறுப்புணர்வு நிறைந்த கொலை பாதக பரப்புரையின் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளனர்.

முப்பது வருடங்களாக காஷ்மீரி பண்டிட்டு களின் பிரச்சினையை வைத்து  வாக்குகளை அறுவடை செய்வதற்காக சங்கப் படையினர் பரப்புரை செய்து வருகின்றனர்தற்போது, இனப்படுகொலையைத் தூண்டுவதற்காக இந்த இயக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செல்வாக்குமிக்க பாஜக தலைவர்களால் பேரணிகளிலும் அணிவகுப்புகளிலும் (கோலி மாரோ) 'சுட்டுத் தள்ளு' என்ற வெறுப்பு முழக்கம் முன் வைக்கப் பட்டதை நாம் மறந்துவிட முடியாது. அதன் காரணமாக, போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவமும் நடந்தது. இஸ்லாமிய விரோத மதவாத வன்முறை பெருவாரியாகக் கட்ட விழ்த்து விடப்பட்டதும் தொடர்ந்தது. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைச் சுற்றித் தீய எண்ணம் கொண்ட பாஜகவால் மேற்கொள்ளப்படும் பரப்புரை இயக்கத்திற்கு எதிராக அமைதி, நீதி, உண்மை, நல்லிணக்கத்திற்கான சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான நீதி, காஷ்மீரி இஸ்லாமியர்களுக்கான நீதியிலிருந்து பிரிக்கப்பட முடியாதது; இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவாத பரப்புரைக்காக காஷ்மீரி பண்டிட்டுகளின் வலியை ஆயுதமாக்குபவர்களின் நோக்கம் உண்மையைத் திரிப்பதும், நீதியை மறுப்பதுமேயாகும்.

& லிபரேஷன்ஏப்ரல் 2022

தமிழாக்கம் & செந்தில்