இந்திய விடுதலைப் போரின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 13,14,15 தேதிகளில் நாடெங்கிலும் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடியை பகலும் இரவும் பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேசியக் கொடியை பறக்கவிடக்கூடாது என்கிற விதியைத் தளர்த்தியுள்ளது. மேலும் கதர் துணிக் கொடிதான் கட்ட வேண்டும் என்பதல்ல, பாலிஸ்டர் துணியில்கூட தேசியக் கொடியை பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. பார்த்த மாத்திரத்தில் இந்தியர்கள் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடி பறக்கப் போகிறது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. தேசியைக் கொடியை ஒவ்வொருவர் வீட்டிலும் பறக்கச் செய்வது மகிழ்ச்சிதான். இதைச் சொல்பவர்கள் யார்? அவர்களின் எண்ணம் உண்மையிலேயே உயர்வானதுதானா என்றும் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவின் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஒருபோதும் தேசியக் கொடி, மூவர்ணக் கொடி பறந்தது கிடையாது. அவர்கள் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்தது கிடையாது. ஜூன் 21 யோகா நாள் என்று சொல்லி பிரதமர் யோகா செய்தபோது அவர் கழுத்தில் தேசியக் கொடி துண்டு போல தொங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அதை வைத்து மோடி அவர்கள் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார். வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தும் போது பார்க்கவே அந்தக் கொடிகள் மீது ஒரு மரியாதை ஏற்படும். தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் அதை இரவு நேரங்களில் பறக்கவிடக் கூடாது என்று விதியை உருவாக்கினார்கள். அதைத் தளர்த்துவதன் மூலம் மூவர்ண தேசியக் கொடியை மறைமுகமாகச் சிறுமைப்படுத்தும் செயல்போல் தெரிகிறது. மேலும் தேசியக் கொடி கதர் துணியில்தான் இருக்க வேண்டும் என்பது விடுதலைப் போரில் அதற்கு இருந்த விடுதலை வேட்கை உணர்வோடு மட்டுமின்றி சுதேசியோடு தொடர்புடையது ஆகும். அந்த சுதேசி மரபை மழுங்கடிக்கும் முகமாக தேசியக் கொடியை பாலிஸ்டரில் பறக்கவிடலாம் என்பது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நோக்கத்தோடு செய்யப்படுகிறது. ஆகையால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விட வேண்டும் என்று சொல்கிறபோது அதை ஒன்றிய அரசே கதர் துணியில் தயாரித்து அனைவருக்கும் பொது விநியோக முறையில் வழங்கச் செய்து தேசியக் கொடியின் மாண்பை மரியாதையைக் குன்றாமல் இருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக் கிறார். மேலும் தேசியக் கொடியின் மாண்பை மழுங்கடிக்கும் வகையில் ஒன்றிய அரசு திருத்தியுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் மாபெரும் தியாக, வீர மரபைக் கொண்டது. ஆங்கிலேயரின் அடிவருடியாக ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, ஆங்கிலேயரிடமே பென்ஷன் வாங்கிய விடுதலைப் போருக்குத் துரோகம் இழைத்த சாவர்கரின் வாரிசுகளுக்குரியது அல்ல. இந்திய விடுதலைப் போரை திருத்தி எழுத முயற்சிக்கும் இந்த சங் பரிவார் கும்பல்களின் எண்ணத்திற்கு மாறாக பகத்சிங்கின் வழிமரபை உயர்த்திப் பிடிக்கும் வகையில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சொன்னதுபோல், அதானி அம்பானியின் சேவகர்களாகச் செயல் படும் 'மோடி அரசே வெளியேறு' என முழங்குவோம்.