தோழர் எஸ்விஆர் என்று அறியப்படும் எஸ்.வி.ராஜதுரை 82 வயதை தொட்டுவிட்டவர். கடுமையான நோயால் கடும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். ஆனால் இன்னும் சிந்திக்கிறார். எழுதுகிறார். படைக்கிறார். உரையாடுகிறார். மொழிபெயர்ப்பு செய்கிறார்.
திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் உந்தப்பட்டவர் தோழர் எஸ்விஆர். கோவை தொழிலாளரால் கம்யூனிசத்தின் பால் கவரப்பட்டவர். "வசந்தத்தின் இடிமுழக்கமான" நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியால் உருவான, இக்க(மாலெ)வில் பணியாற்றியவர். அறுபதுகள் முதல் எழுதியும் பல படைப்புகளையும் உருவாக்கிவரும் எஸ்விஆர் இதுவரை சுமார் 80 நூல்களை தமிழுக்கு தந்துள்ளார். தமிழகம் அறிந்த சிந்தனையாளரான இவர் தமிழுக்கு பல புதிய தத்துவ போக்குகளையும் தீவிர விவாதத்திற்குரிய சிந்தனைப்போக்குகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பெரியார், அம்பேத்கர் குறித்த முக்கிய படைப்புகளை கொண்டு வந்துள்ள இவரை மார்க்சிய பெரியாரிய சிந்தனையாளர் என்று அறிவுலகம் அடையாளப்படுத்துகிறது.
சிவில் உரிமை இயக்கங்கள், மரணதண்டனை ஒழிப்பு இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றுள் பங்கேற்று பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். தோழர் நாகபூஷன் பட்நாயக், புலவர் கலியபெருமாள், தோழர் தன்னாசி இவர்களது விடுதலையில் முக்கிய பங்காற்றியவர்.
இகக (மாலெ) விடுதலையுடன் தோழமையான நட்பு பாராட்டிவருபவர். தோழர் வினோத்மிஸ்ரா சென்னை வந்திருந்த போது தோழர் கீதாவுடன் இணைந்து மிக முக்கியமானதொரு நேர்காணலை நடத்தியவர். தோழர் நாகபூஷன் நோய்வாய்ப்பட்டு சென்னையில் இருந்தபோது நேரில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சென்னையில் நடந்த தோழர் வி.எம் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கோவையில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் மேடை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பாசிச அபாயத்திற்கெதிராக இடதுசாரிகள் கரம் கோர்க்க வேண்டுமென பேசியதோடு நமது முயற்சியை வரவேற்றுப் பேசினார். மாலெ தமிழ்நாடு கமிட்டியின் அதிகாரபூர்வ பிளாக்ஸ்பாட் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேருவகையுடன் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கினார். மிகவும் உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் எம்எல் செய்தி ஏட்டின் தலையங்கத்தை மொழிபெயர்த்துத் தந்தார்.
கோத்தகிரியில் தங்கியிருக்கும் அவரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து அறிந்துவர 23.4.2022 அன்று இக்க(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், மாநிலச் செயலாளர் என்.கே நடராசன், மத்தியக் கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், கோவை மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தாமோதரன், நாராயணன், வெங்கடாசலம், வழக்கறிஞர் பாரதிமோகன் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர். தோழர் எஸ்விஆர், அனைவரையும் தோழமையோடு வரவேற்று நோயையும் மறந்து பல மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பல்வேறு பொருள் குறித்த தோழர்களின் வினவுதலுக்கு விரிவான விடை பகர்ந்தார். உரையாடலின் சில பகுதிகளை மாலெ தீப்பொறி வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
பெரியாரும் கம்யூனிஸ்ட்களும்
பெரியார், தொடர்ந்து உள்ளூர் கம்யூனிஸ்ட் களிடம் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும் கூட, அவர் பெரிய அளவுக்கு கம்யூனிச இயக்கத் திற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே தான் இருந்தார். மீரட் சதி வழக்கில் இருந்து எல்லோ ரும் விடுதலை பெற்ற பிறகு குடியரசு இதழில் வெளியிடப்பட்ட அந்தத் தலையங்கம் மிகச் சிறப்பாக இருந்தது. 1949-52இல் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்த சமயத்தில், அதனை எதிர்த்து திராவிடர் கழகம்தான் குரல் கொடுத்தது. அதற்காக, ஏ.கே.கோபாலன் பாராட்டி கடிதம் எழுதி இருந்தார். தெலுங்கானா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூக்கில் போடப்ப டுவதற்கு எதிராகவும் இவர்தான் குரல் கொடுத்தார். ஏ.கே.கோபாலன், கல்யாணசுந்தரம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்கள். சிக்கல் என்னவென்றால், உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பெரியாருக்கு முரண்பாடு இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி விசயத்தில் பெரியாருக் கும் ஜீவானந்தம் அவர்களுக்கும் முரண்பாடு இருந்தது.1936 ஜில்லா போர்டு தேர்தல் நடந்தது. அப்போது, அவர்களுடைய சுயமரி யாதைத் திட்டத்தை எந்த கட்சி ஏற்றுக்
கொள்கிறதோ, அந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்க திராவிடர் கழகம் முடிவு செய்தது. கடைசியில் பார்த்தால், நீதிக்கட்சிதான் நீர்த்துப்போன வடிவத்திலேனும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அந்த நீர்த்துப்போன வடிவத்திலுள்ள திட்டத்தைக் கூட காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆக, ஒரு குறைந்தபட்ச திட்டத்தையாவது நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. எனவே, அதனை பெரியார் ஏற்றுக் கொண்டார். நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார். இந்த நீர்த்துப்போன திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சியில்தான் ஜீவானந்தம் போன்றவர்கள் இணைகிறார்கள். 1934 இல் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் காங்கிரஸ் நடக்கிறது. அந்த நேரத்தில் கட்சியை தடை செய்து விடுகிறார்கள். உடனே இவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சென்று உறுப்பினர்களாக சேருகிறார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றால், நீங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைய வேண்டும். அப்போது தான் நீங்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியும். அப்போது உண்மையிலேயே நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக வாழ வேண்டும், மாற வேண்டும். அப்படி என்றால், இதில் என்ன முற்போக்கு இருக்கிறது. அன்றைக்கு ஒரு குறைவான வாய்ப்பே இருக்கின்ற சமயத்தில், நீதிக்கட்சியில் எந்த மாதிரியான ஜமீன்தார்களும் பணக்காரர்களும் தேர்தலில் நின்றார்களோ அப்படித்தான் காங்கிரஸ் கட்சியிலும் ஜமீன்தார்களும் பணக்காரர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். குறைந்தபட்சம் தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீட்டை நீதிக்கட்சி ஆதரித்தது. காங்கிரஸ் கட்சி அவற்றை ஆதரிக்க வில்லை. அந்த குறைந்தபட்ச செயலுக்காகத்தான் நீதிக்கட்சியை பெரியார் ஆதரித்தார். மற்றபடி நீதிக்கட்சியை இலட்சியவாதிகளின் அமைப்பாக பெரியார் எண்ணவில்லை. தியாகராய செட்டியாரை பெரியார் விமர்சித்தது போன்று வேறு யாரும் விமர்சித்திருக்க முடியாது. .. பெரியார் எல்லாரையும் கேள்வி எழுப்பினார். பெரியாரை ஏகாதிபத்தியதாசர் என்று உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அழைத்தனர். காங்கிரஸ் கட்சி அப்படி ஒன்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சி அல்ல. அதிலிருந்த பலரும்தான் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். நிர்வாக கவுன்சில், வைஸ்ராய் கவுன்சில்களில் கூட அவர்கள் இருந்தனர்.
பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டம் நடைபெறுகிறது. ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுக்கிறது. போராட்டம் முடிந்த பிறகு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திராவிடர் கழகத்திற்கு நன்றி தெரிவித்து ஒரு வார்த்தை கூட கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் பேசவில்லை. அப்போதுதான் பெரியாருக்கு மிக அதிக கோபம் வந்தது. இருந்தாலும் கூட, க லெனின் அல்லது கம்யூனிச கொள்கைகள் மீது அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. ஸ்டாலின் இறந்த சமயத்தில் பெரியார் போன்று வேறு எவரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தவில்லை.
'நாங்கள் திராவிட விவசாய சங்கம் தஞ்சாவூரிலும் திருச்சியிலும் உருவாக்கி இருக்கிறோம். நீங்களும்கூட விவசாய சங்கம் வைத்திருக்கிறீர்கள். கூலிக்காகவும் பண்ணை முதலாளிகளுக்கு எதிராகவும் போராடுகிறீர்கள். ஆனால், உங்களால் கல்வி முதலாளிகளையும் பிறவி முதலாளிகளையும் எதிர்க்க முடியுமா? எதிர்க்கிறீர்களா?" எனக் கம்யூனிஸ்ட் தலைவர் களிடம் கேள்வி எழுப்புகிறார். கல்வி முதலா ளிகள் என்றால் கடவுள்கள். பிறவி முதலாளிகள் என்பவர்கள் பிராமணர்கள். நாங்கள் திராவிட விவசாய சங்கத்தில் இருந்து பண்ணை யார்களையும் எதிர்க்கிறோம், கல்வி முதலாளி களையும் பிறவி முதலாளிகளையும் கூட எதிர்க் கிறோம். இந்த மாதிரி கருத்தியல் ரீதியாகவே அவருடைய போராட்டம் உள்ளது.
கம்யூனிசம் பற்றிய புரிதல் பெரியாருக்கு குறைந்த அளவே இருந்தது. கம்யூனிசம் என்றால் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்; லாபத்தில் சரி சமமான பங்கு; என்ற அளவில்தான் அவருக்கு கம்யூனிசம் பற்றிய புரிதல் இருந்தது. ரஷ்யாவைப் பற்றி, போல்ஸ்விக்களைப் பற்றி, ரஷ்யாவில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி, கல்வியை பற்றி, அங்கு பெண்களுக்கு நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி, முன்னேற்றம் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரை கள் திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டன. அவைகளே கிட்டத்தட்ட முப்பது நாற்பது புத்தகங்களுக்கு வரும். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய பத்திரிக்கைகளில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்தன. கம்யூனிச இயக்கத் திற்கு அவ்வளவு நெருக்கமாக திராவிடர் கழகம் இருந்தது. அதனை கம்யூனிஸ்ட்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.பல நேரங்களில் கம்யூனிஸ்ட் தோழர்களை எதிர்ப்பதாகவும் பல நேரங்களில் ஆதரிப்பதாக வும் அவருடைய நிலைப்பாடு இருந்தது. திமுகவின் மீது கூட அவருக்கு விமர்சனம் இருந்தது....ஆக பெரியாரின் இயக்கம் கம்யூனிச இயக்கத்திற்கு மிக நெருக்கமாக வந்தது. அதனை கம்யூனிஸ்ட்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பொருத்தமான விஷயத்தில் பொருத்தமான விதத்தில் பெரியாரை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்புறம் இருக்கும் பெரியார் சிலையின் கீழ் "கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, முட்டாள்" என எழுதப் பட்டுள்ளது. மேற்கூறிய வாசகங்கள் பெரியாரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இதை திராவிடர் கழகத்தின் கொள்கை யாக பரப்ப வேண்டும் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், திராவிடர் கழகத்தினரோ அப்படியே செய்கிறார்கள். பெரியாரை மக்களிடமிருந்து அந்நியப் படுத்துவதற்கு இவர்களின் இப்படிப்பட்ட நடவடிக்கையே போதுமானதாக இருக்கும். ஆனால், பெரியார் இதைவிடவும் மிகச்சிறந்த வேறு பல கருத்துக்களை கூறியுள்ளார். பெண்ணுரிமை, அவர்களுக்கான சமத்துவம், சமத்துவ சமுதாயம், கல்வி பெறுவதில் பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்பு என எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு வந்து அவருடைய பொறித்து இருக்கலாமே? சிலையில் இன்றைய சூழ்நிலையில் நாம் மூட நம் பிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும்; நாத்திகத்தை பரப்பிக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.
மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு விரோதமாக செயல்படுவது, விஞ்ஞானத்திற்கு விரோதமாக செயல்படுவது ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். ... இன்றைக்கு சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு, பிறப்பினால் ஏற்படும் உயர்வு தாழ்வு போன்ற பெரியாருடைய கருத்துக்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு கடவுள் கிடையாது; கடவுள் என்பது முட்டாள்தனம் போன்ற நாத்திகக் கருத்துக்களை பேச வேண்டிய அவசியமில்லை.
'போராடினால் மட்டுமே உங்களுக்கு உரிமைகள் கிடைக்கும்' என்று மாவோ சொன்னது போல, பஞ்சாபிலுள்ள சீக்கியர்கள் போராடினார்களே, அவர்கள் அனைவரும் இறைபக்தி இல்லாதவர்களா? விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் மட்டுமே அவர்கள் இந்த விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைத்தார் கள். ஆக நாம், பெரியாரிடமிருந்து பெண்ணடி மைத்தன ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, அறிவியல் கருத்துக்களை பரப்புதல், பிறப்பினால் உண்டான ஏற்றத்தாழ்வை ஒழித்தல் போன்ற முற்போக்கு கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம். திராவிடர் கழகத்தினர் செய்வது போன்று கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போதே கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களை சொல்வது பயனற்றது. அதைப் போன்ற விஷயங்களை நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
குடியரசு, பகுத்தறிவு போன்ற பத்திரிகைகளில் எவ்வளவோ பகுத்தறிவு சார்ந்த கருத்துக் கள் வெளியிடப்பட்டுள்ளன. விஞ்ஞானத்தை உயர்த்தி பிடித்துள்ளார்கள். பெண் விஞ்ஞானிகள் பற்றி எழுதியுள்ளார்கள். பெண் போராளிகளைப் பற்றி எழுதியுள்ளார்கள். கம்யூனிச பெண்ணிய சிந்தனையாளரான சில்வியா பற்றி பகுத்தறிவு, குடியரசு இதழ்களில் அனேக கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அவர் போர் எதிர்ப்பாளராக, பாசிச எதிர்ப்பாளராக செயல்பட்டவர். பெரியார் கூடவே, சுயமரியாதை இயக்கத்தின் கூடவே கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சார்பான ஒரு போக்கு இருந்தது அதை இப்போது திராவிடர் கழகத்தினர் அப்படியே விட்டுவிட்டு அந்த மரபை மறந்துவிட்டார்கள்.
கம்யூனிசத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையே செயல் தந்திர அளவிலோ கருத்தள விலோ இருந்த முரண்பாட்டை, வித்தியாசத்தை கொள்கையிலான முரண்பாடாக இவர்கள் எடுத்துக் கொண்டார்கள். மேலும் கம்யூனிசமே நமக்கு வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.
இன்றைக்கு சங்பரிவாரக் கூட்டத்தினால் ஜீரணித்துக்கொள்ளப்பட முடியாத ஒரே தலைவராக பெரியார் மட்டுமே இருக்கிறார். சாவித்திரிபாய் பூலே, பூலே, அம்பேத்கர் போன்றவர்களை எல்லாம் சங்பரிவார் எடுத்துக்கொண்டது. நாராயண குருவை இந்து மதம் ஏற்கனவே தனக்குரியவராக ஏற்றுக் கொண்டது. பகத்சிங்கையும், சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெரியார் ஒருவர்தான் இவர்களால் ஜீரணிக்க முடியாதவராக இருக்கிறார்... ஏனென்றால் பெரியார் சொன்ன விஷயங்களின் அருகில் வர அவர்களால் முடிவதில்லை. சங்பரிவார் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் கூட, வலதுசாரி என்ற பெயரிலோ பிஜேபிகாரர் என்ற பெயரிலோ விமர்சகர் என்ற பெயரிலோ வரும் அனைவருமே பிராமணர் களாகவே இருக்கின்றனர். பிஜேபிக்கு ஆதரவாக வருபவர்கள் அனைவருமே பிராமணர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் தங்களுடைய மேலாதிக்கம் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். பிஜேபினுடைய செயல் திட்டமும் கூட அதுதானே. ஏன்? ஆர்எஸ்எஸ் சிடம்கூட நாம் ஒரு கேள்வியை முன் வைக்க லாமே? ஒரு பிராமணரல்லாத வரை சர் சங் சாலக் பதவியில் அமர்த்த முடியுமா?
பிற்படுத்தப்பட்டவரையோ தலித்தையோ ஏன் அவர்கள் சர்சங்சாலக்காக நியமிக்கவில்லை? பிற்படுத்தப்பட்டோர்களையும் தலித்துகளையும் அடிதடிகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தங்களு டைய வானரப் படைகளில்தான் அணி திரட்டி யுள்ளனர். அதற்குத்தான் அவர்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பிராமணர்களின் மேலா திக்கத்தை நாம் இன ரீதியான மேலாதிக்கமாகவே பார்க்க வேண்டும். சமூகவியல் அடிப்படையிலும் கூட அதுதானே உண்மை. தமிழ்தேசியவாதிகளும் திமுகவும்
தமிழ் தேசிய அமைப்புகள் தற்போது மீண்டும் திமுக அரசாங்கத்தை எந்த தகுதியின் அடிப்படையிலும் இல்லாமல் ஆதரிக்கும் நிலைக்கு வந்து விட்டனர். நாம் இதிலிருந்து சிறிது விலகி நின்று பார்க்கலாம். 1972இல் 'கல்வியை குறித்து பெரியார்' என ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை என்னிடம் எழுதச் சொன்னார்கள். திரு. வீரமணி அதனைப் படித்துவிட்டு நாங்கள் கூட இந்தக் கண்ணோட்டத்தில் இதுவரை பார்க்கவில்லை என்று பாராட்டினார். 1972லேயே நுழைவுத் தேர்வை பெரியார் கடுமையாக எதிர்த்திருக்கிறார். அப்போது இருந்த திமுக அரசாங்கத்தால் நுழைவுத் தேர்வு முன்வைக் கப்பட்டு இருந்திருக்கிறது. அனேகமாக அரசு அதிகாரிகள் மத்தியில் இருந்து அப்படி ஒரு திட்டம் வந்திருக்கும் என்று தெரிகிறது. பெரியாரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அந்த நுழைவுத் தேர்வு கைவிடப்பட்டது. பெரியார் அது குறித்து தலையங்கம் எழுதியிருக் கிறார். நான் அந்தத் தலையங்கத்தை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த நுழைவுத்தேர்வு தாழ்த்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி; மேலும், இது தாழ்த்தப்பட்ட மாணவர் களை கல்வியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றி தூக்கி எறிவதற்கான முயற்சி என்று மீண்டும் ஒரு முறை கூறி திமுக அரசாங்கத்தை விமர்சித் திருந்தார். அப்போது எஸ்எஸ்எல்சி இருந்தது. பள்ளி இறுதித் தேர்வு எழுதி 35 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருந்தால் கல்லூரி செல்வதற்கான தகுதி உள்ளது. பிறகு ஏன் இன்னொரு நுழைவுத் தேர்வு என திமுக அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். அப்படித்தான் அவர் சில விஷயங்களில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதை நோக்கி விமர்சனம் தொடுப்பவர். ஆனால், இவர்களோ எந்த விமர்சனமும் இன்றி திமுக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)