புதுச்சேரி யுனியன் பிரதேசத்திலுள்ள மிகப் பெரிய சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளன. 1986ல் துவக்கப்பட்ட தொழிற்பேட்டையான இதில் பத்தாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் உள்ளனர். பல ஆலைகளில் அடிப்படை சட்ட உரிமைகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணி புரிய வேண்டியகட்டாயம் உள்ளது.
பல கனரக உற்பத்திக்கூடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் ஆலைகளின் உள்ளேயும் வெளியேயும் விலங்குகளைப் போல அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். 12-18 மணி நேர வேலை என்பது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான விதியாக உள்ளன. சமீப ஆண்டுகளாக தொழிற் பேட்டையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. பத்தாண்டுகள் பணி புரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித இழப்பீடும், ஊதிய பாக்கிகள் கூட கொடுக்கப்படாமல் கொள்ளை நோயை சாக்காக பயன்படுத்திக்கொண்டு பல ஆலைமுதலாளிகள் பெரும்பாலான ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆலைகளை விட்டு வெளியேற்றி விட்டனர். தொழிலாளர் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் துறையில் தேவைக்கேற்ப ஆள் இல்லை. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு இருக்கும் நிலைமையையும் உரிமையையும் இல்லாமல் செய்யப் போகிறது. ஆலைகளில் தொழிலாளர் மரணங்கள் அடிக்கடி நிகழும் ஒன்று.
எல் அண்டு டி ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்து, கோரிக்கைகளில் உடன்பாடு கண்டும் நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த 260 தொழிலாளர்களுக்கும் கதவடைப்பு செய்துவிட்டது. இந்துஸ்தான் நேசனல் கிளாஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் உரிமைகள், ஊதிய உயர்வு கேட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேரை ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டது. அதுமட்டுமின்றி எஸ் அண்டு எஸ் என்ற ஆலை நிர்வாகம் ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களுக்கு கதவடைப்பு செய்தது. எடிசி கெமிக்கல்ஸ் என்ற ஆலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம்செய்துவிட்டது. இந்நிகழ்வுகள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்த தொழிலாளர்களை கொந்தளிக்கச் செய்துவிட்டது. ஏஐசிசிடியூ புதுச்சேரி மாநிலத் தலைவர் சோ. மோதிலால் தலைமையில் இயங்கும் சேதாரப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்-தொழிற்சங்கங்கள் சார்பாக ஜூலை 23 தொழிற்பேட்டை தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஜூலை 23ல் தொழிற்பேட்டையே முழுவதுமாக முடங்கியது. தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று தொழிற்பேட்டையில் மையச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை சுமார் 250 ஆண் பெண் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கைது செய்து மாலை வரை அடைத்து வைத்தது. ஆனாலும் தொழிற்பேட்டை மொத்தமாக முடங்கியது.