பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75
ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும். ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள், இந்தப் பரப்புரையை ஊதிப் பெரிதாக்குவதில் மூழ்கிக் கிடந்தபோது, தொடர்ந்து 9வது முறையாக தனது சுதந்திர நாள் உரையை பிரதமர் மோடி செங்கோட்டையில் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ராஜஸ் தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் வந்த இரண்டு செய்திகள், இன்றைய இந்தியாவில் நடக்கும் விசயங்களின் லட்சணத்தை அப்பட்டமாக எடுத்துரைக்கும் அறிக்கைகளாக இருந்தன.

ராஜஸ்தானிலுள்ள ஜாலூர் மாவட்டத்தின் சுரானா கிராமத்தில் சரஸ்வதி வித்யாமந்திர் (கல்விக் கோவில்) பள்ளியில் படித்துக் கொண் டிருந்த ஒன்பது வயது தலித் சிறுவன் இந்திரா மேக்வால், 'உயர்சாதி'யினருக்கென 'ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்தக் குடிநீரைக் குடித்துவிட்டான் என்று குற்றம் சுமத்தி ஜூலை 20ம் தேதி ஆசிரியர் சாயில் சிங்கினால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். அதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஆகஸ்ட் 13 அன்று அவன் உயிரிழந்தான். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, (ஆகஸ்ட் 15 அன்று) இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் சக்தி தேவை என அழைப்பு விடுத்ததோடு, பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த வொரு அவமதிப்பையும் துளியும் சகித்துக் கொள்ளக் கூடாது என நரேந்திர மோடி உரத்து முழங்கிக்கொண்டிருந்த வேளை யில், கோத்ராவிற்கு பிறகு நடந்த இனப்படு கொலையில் பில்கிஸ் பானுவை கூட்டு வன்புணர்வு செய்ததோடு அவருடைய மூன்று வயது மகள் உட்பட குடும்பத்தினர் 14 பேரை கொலையும் செய்ததற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அனைத்து 11 குற்றவாளிகளையும் குஜராத்தின் பிஜேபி அரசாங்கம் விடுதலை செய்தது. அந்த குற்றவாளிகளை, அவர்கள் 'நல்லொழுக்கம் கொண்ட பார்ப்பனர்கள்' என சான்றிதழ் வழங்கிய கோத்ராவின் பாஜக
சட்டப்பேரவை உறுப்பினரையும் கொண்ட பாஜக தலைவர்கள் நிறைந்திருந்த குழு இந்த விடுதலைக்குப் பரிந்துரை செய்திருந்தது.
சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் குற்றம் செய்வோரை தண்டிக்கவும் ஒரு சட்டம் இருந்த போதிலும் கூட, சாதியக் கொடுமைகள் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவை ஆட்டிப் படைப்பது தொடர்கிறது. பாஜக சங்கப்பரிவார் கூட்டத்தின் முன்னெப் போதுமில்லாத அரசியல் ஆதிக்கத்தின் விளைவாக, இது தங்களது உரிமை எனவும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆதிக்க சாதிக்குழுக்களிடையே மேலோங்கி யுள்ள உணர்வும்தான், தலித்துகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டே இருப்பதற் கான காரணமாகும். சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள், பாஜக வினுடைய இந்து மேலாதிக்கவாத அரசியலின் மைய அங்கமாக எப்போதுமே இருந்து வருகிறது. பாஜகவி னுடைய எழுச்சியின் கடைசி மூன்று பத்தாண்டு களில், அதிலும் குறிப்பாக, மத்தியில் மோடி அரசாங்கம் அரியணை ஏறியதிலிருந்து, இத்தகைய குற்றங்களின் வீச்சும் அளவும் அபாய எல்லையைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே போவதையும் காண்கிறோம்.

குற்றங்கள் சர்வசாதாரணமானதாக இருக்கும் போது தண்டனைகள் அரிதானவையாகவே உள்ளன. அத்தகைய ஒரு அரிதான வழக்குதான் பில்கிஸ் பானுவினுடையது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மத்தியப் புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு மஹாராஷ்டிரா விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு மே 2017 இல் மஹாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தாலும் ஏப்ரல் 2019 இல் உச்ச நீதிமன்றத்தாலும் அந்தத் தண்டனை சட்டப்படி உறுதிசெய்யப்பட்டது. 1992ஆம் ஆண்டு கொள்கையின் அடிப்ப டையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கொள்கை, 2014 டிசம்பரில் டில்லி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான இயக்கத் தையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட சட்டத்தையும் தொடர்ந்து,
பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு தண்டனை காலம் முடிவதற்குள் மன்னிப்பு வழங்கக் கூடாது என மாற்றப்பட்டு விட்டது. காந்தி பிறந்த 150 வது ஆண்டு விழா வையும் மிகச் சமீபத்தில் இந்திய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் குறிக்கவும் பொது மன்னிப்பு வழங்குவதற்கான கொள்கைகளை அறிவித்த மோடி அரசாங்கம், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தது. இந்த விசாரணை மஹாராஷ்டிராவில் நடத்தப் பட்டதால் மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் கருத்தினையும் கேட்க வேண்டியது கட்டாய மாகும். மேலும், இந்த விசாரணை மத்திய புலனாய்வுத் துறையால் நடத்தப் பட்டிருப்பதால் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டியதும் தேவையானதாகும். ஆக, தற்போது இருக்கும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் நீதிமன்ற ஆணைகளையும் இந்த மன்னிப்பு வழங்கப்பட்ட ஆணை காற்றில் பறக்க விட்டு விட்டது.
குஜராத் இன அழிப்போடு தொடர்புடைய வழக்குகளில், ஓரளவாவது நீதி கிடைக்கப் பெற்ற அரிதானதொரு வழக்கு பில்கிஸ் பானுவுடையது. இந்த இனப்படுகொலை நடந்த போது, பாதுகாப்பைத் தேடி ஓடிய அவளும் அவளுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தாக்கப்பட்டனர். அப்போது பில்கிஸ் பானு விற்கு பத்தொன்பதே வயது. அவள் அய்ந்து மாத கர்ப்பிணியாக இருந்தாள். கும்பல் வன்புணர்வு செய்யப்பட்டு, சாகட்டுமென்று விடப்பட்டவர். அவருடைய அம்மா, சகோதரி கள், மூன்று வயது மகள் உள்ளிட்ட அவளு டைய குடும்பத்தின் பதினான்கு உறுப்பினர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அவருடைய சொந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே அந்தத் தாக்குதலை நிகழ்த்தினர். அந்தப் பேரதிர்ச்சியிலிருந்து பில்கிஸ் மீண்டுவந்தார். மேலும், முன்மாதிரியான துணிச்சலுடனும் தீர்மானகரமான உறுதியுடனும் நடத்தப்பட்ட நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் வழியாக ஓரளவு நீதியையாவது பெற்றார். சுதந்திர இந்தியா தனது 75ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நாளில் இந்தக் கொடூரக் குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு விடுதலை என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது, நீதியை வேண்டும் அனைவரையும் சில்லிடச் செய்யும் செய்தி ஒன்றை அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட, மிகத் தெளிவாக வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். மேலும், மோடியினுடைய புதிய இந்தியாவில், பகிரங்கமாக இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கும், இத்தகைய குற்றங்களை செயல்படுத்தும் பாலியல் வன்புணர்வு, கும்பல் படுகொலை செய்யும் படைகளுக்கு மேலும் துணிச்சலூட்டும் நோக்கம் கொண்டதுமாகும். சகியா ஜாஃப்ரி மனுவை தள்ளுபடி செய்தது, டீஸ்டா செதல்வாட்'டை பழிவாங்கும் கைது, பில்கிஸ் பானுவிற்கான தீர்ப்பை ஒன்றுமில்லாததாக்கியது இவற்றை ஒருசேர பார்க்கும்போது, இன அழிப்பு வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் அனுபவிக்கும் கட்டுக்கடங்காத அதிகாரத்தையும் தண்டனை தீண்ட முடியாத சூழலையும் வழங்கும் மதவெறி பாசிசம் என்னும் குஜராத் மாதிரியால் இந்தியா தற்போது ஆளப்படுகிறது என்பதை இந்த உலகத்திற்கு சொல்வதே அதன் நோக்கமாகத் தெரிகிறது.
அதிகாரத்தை ஆணவத்துடன் முறைகேடாக பயன்படுத்துவதையும் நீதியை கேலிக்கூத்தாக்கு வதையும் தடுத்து நிறுத்தவும் எவ்வித தாமதமும் இன்றி இந்த தண்டனைக் குறைப்பு ஆணையை திரும்பப் பெறச் செய்ய வலியுறுத்தியும் 75 ஆம் ஆண்டின் இந்தியா ஒன்றுபட்டு எழவேண்டும். பாசிச ஆட்சியாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் எதிராக கொடூர வன்முறையை தொடர்ந்து நிகழ்த்துவது மட்டுமன்றி அவற்றை ஏற்புத்தன்மையுடைய தாகவும் கொண்டாடக் கூடியதாகவுமான சூழலை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பது குஜராத் தில் பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்தவர் கள் மாலை அணிவிக்கப்பட்டும் இனிப்பு வழங்கப்பட்டும் வரவேற்கப்பட்ட காட்சியும், ராஜஸ்தானில் ஒன்பது வயது இந்திர மெக் வாலின் கொலையாளிக்கு ஆதரவாகக் கூடிய கூட்டத்தினரின் காட்சியும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய பாசிச வன்முறையின் கோரப் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப் பதற்கான மக்களின் ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டி எழுப்புவதே இந்தியா விடுதலை பெற்ற எழுபத்தைந்தாவது ஆண்டுவிழாவில், நம்மை எதிர்நோக்கும் மிக அவசரமான கடமையாகும்.

லிபரேஷன், செப்டம்பர் 2022 தலையங்கம்

தமிழாக்கம் - செந்தில்