7.9.2022 அன்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய அலுவலகத்தில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்தித்துக் கொண்டனர். பாஜகவின் புல்டோசர் ராஜ்ஜியத்தை தடுத்து நிறுத்திட செயலூக்கமுள்ள பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தேவை பற்றி அவர்கள் விவாதித்தார்கள். பீகாரின் பற்றி எரியும் பிரச்சனைகளும் விவாதத்தில் இடம் பெற்றன. ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்ட முயற்சியின் அவசர தேவை பற்றியும் இகக(மாலெ) பொதுச்செயலாளர் எழுப்பினார்.

பீகாரில் பாஜக அல்லாத அரசாங்கம் உருவாக்கப்பட்டிருப்பதானது பாஜகவின் அரசியலான சதி மற்றும் பேரழிவிலிருந்து விடுபடும் சரியான பாதையை நோக்கி எடுத்து வைத்திருக்கும் அடியாகும். இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சக்திகளிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

பீகார் மக்களின் அபிலாசைகளை, தேவைகளை நிறைவு செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அவர்கள் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்வதையும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது தோழர் திபங்கரோடு தில்லி மாநிலச் செயலாளர் தோழர் ரவிராய், ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி, அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தேசிய செயலாளர் தோழர் புருஷோத்தம் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். திரு.நிதிஷ்குமாரோடு பீகார் அமைச்சர் திரு. சஞ்சய் குமார் ஷா வந்திருந்தார்.